லிட்டில் இந்தியா வர்த்தகர்களுக்கு உதவிக்கரம்

கனத்த மழையிலும் லிட்டில் இந்தியா உலா மேற்கொண்டு வர்த்தகர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபை. கொவிட்-19 விளைவுகளால் பல வர்த்தகர்களின் வியாபாரங்கள் ஆட்டம் கண்டுள்ளன. அதிலும் குறிப்பாக லிட்டில் இந்தியா பகுதியில் தொழில் நடத்திவரும் வர்த்தகர்களுக்கு கிருமித்தொற்று என்றும் கண்டிராத அளவிற்கு சவால்களைக் கொடுத்துள்ளது.

“சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியும், முக்கியமாக லிட்டில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்குக் குறைந்திருப்பதால் வணிகங்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களாக லிட்டில் இந்தியாவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை சுமார் 50% குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தங்களது வியாபாரங்களை எவ்வாறு தற்காத்துக் கொண்டு, மீண்டு வருவது என்று சிந்திப்பதற்குக்கூட இந்த வர்த்தகர்களுக்கு நேரமோ ஆள்பலமோ இல்லை,” என்று தெரிவித்தார் லிஷா எனப்படும் லிட்டில் இந்திய வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா.

இந்தச் சிரமமான நேரங்களில் அவர்களுக்கு ஏற்ற வழிகளில் உதவி புரிய அமைப்பு இவ்வாண்டு மே மாதம் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபை கொவிட்-19 பணிக்குழு என்ற ஒன்றை அமைத்தது. கொவிட்-19 காரணமாக வர்த்தகங்கள் உருமாறிக்கொள்ள வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்திய வர்த்தகர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு சிறிய, நடுத்தர வியாபாரங்கள், பொருத்தமான அரசாங்க ஆதரவைப் பெறுவதற்கும், தங்களது வியாபாரங்களை மின்னிலக்கமயமாக்குவதற்கும், மின் வணிகத்தில் கால் பதிக்கவும் வழிகாட்டி வருகிறது.

உதவி கேட்டு வந்த சுமார் 1,700 பேருக்கு இந்த அமைப்பின் சிறிய, நடுத்தர வியாபாரங்களுக்கான மையங்கள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இந்திய வர்த்தகர்களுக்கென வட்டி விகிதத் தள்ளுபடிகள், அர்ப்பணிக்கப்பட்ட கடன் அதிகாரிகள் என பல்வேறு வங்கிகள், தனியார் நிறுவனங்களின் ஆதரவோடு பல பயனுள்ள முயற்சிகளை இந்தப் பணிக்குழு மேற்கொண்டு வருகின்றது.

பணிக்குழுவின் ஆலோசனையையும் உதவியையும் உடனுக்குடன் பெற ஒரு பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி மற்றும் 24 மணி நேர தொலைபேசிச் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வர்த்தகர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு ‘சிக்கி கேர்ஸ்’ திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக வர்த்தக, தொழிற்சபை கொவிட்-19 பணிக்குழு ஏற்பாடு செய்துள்ள ஒரு மாத லிட்டில் இந்தியா உலா நேற்று தொடங்கியது. இந்த உலாவின் வழி சுமார் 300 சிறிய, நடுத்தர வர்த்தகர்களுடன் இணைந்து அவர்களுக்கேற்ற உதவியை வழங்க முடியும் என்று சபை நம்புகிறது.

இந்த உலா ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும். இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 31 முதல் பணிக்குழுவின் ஊழியர்கள், லிட்டில் இந்தியா வர்த்தகர்களைச் சந்தித்து ‘சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மையங்கள்’ (SME Centres) வழங்கும் சேவைகளை பற்றியும் அவர்கள் பெறக் கூடிய உதவித் திட்டங்கள் பற்றியும் விளக்குவார்கள்.

“எங்களது திட்டங்களின் அணுகுமுறையை மாற்ற எண்ணினோம். இதுவரை எங்களை நாடி வந்த வர்த்தகர்களுக்கு அரசாங்க மானியங்கள், உதவிகள், வணிக மாற்றங்கள், மின் வர்த்தகத் திட்டங்கள் போன்றவற்றின் வழி பயன் பெரும் வழிமுறைகளைக் காட்டினோம். ஆனால், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் அதிகமானோரை அடைய வேண்டும் என்றால் நாமே சென்று அவர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, இந்த உலாவுக்கு ஏற்பாடு செய்தோம்.

“அரசாங்கம் பல உதவி திட்டங்களையும் நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏற்ற மானியங்களையும் உதவியையும் பெற்று இந்தத் திட்டங்களின் வழி பயன் பெற நமது வர்த்தகர்கள் முன் வர வேண்டும். இதை செய்ய அவர்களுக்கு வழிகாட்டியாகவும் உந்துகோலாகவும் இருப்பதே எங்களது பணி,” என்று கூறினார் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபையின் துணைத் தலைவரும் கொவிட்-19 பணிக்குழுவின் தலைவருமான திரு சந்திரமோகன் ரத்னம்.

“கடந்த ஆறு மாதங்களாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மருதாணி அலங்காரங்களுக்கு நன்கு பேர் போனது எனது நிலையம். ஆனால் இப்போது சுற்றுலாப் பயணிகளும் வருவதில்லை, உள்ளூர் வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்துவிட்டது.

“லிட்டில் இந்தியாவில் எனது அழகு நிலையத்தையும் சேர்த்து பல கடைகளுக்கு ‘சிக்கி’ சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மையங்கள் தொடர்ந்து உதவி வருகின்றன. எனக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்படும்போது அவர்களை நாடியிருக்கிறேன்,” என்றார் ‘செல்வி கிரியேஷன்ஸ்’ உரிமையாளர் திருமதி செல்வி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!