சுடச் சுடச் செய்திகள்

எஞ்சியுள்ள குற்றச்சாட்டிலிருந்தும் பார்த்தி லியானி விடுவிக்கப்பட்டார்

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் திரு லியூ மன் லியோங்கிடமிருந்தும் அவரது குடும்பத்தினரிடமிருந்தும் $34,000 பெறுமானமுள்ள பொருட்களைத் திருடியதாக அவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த திருவாட்டி பார்த்தி லியோனி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தோனீசியரான திருவாட்டி பார்த்திக்கு இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.

இதையடுத்து, திருவாட்டி பார்த்தி குற்றமற்றவர் என கடந்த வெள்ளிக்கிழமையன்று உயர்நீதிமன்ற நீதிபதி சான் செக் ஓன் தீர்ப்பளித்தார்.

திருடப்பட்டதாகக் கூறப்பட்ட பொருட்களை போலிசார் படமெடுப்பதற்கு முன்பு அவற்றை திரு லியூவின் குடும்பம் ஐந்து வாரங்களுக்கு முன்பே கையாண்டது, மொழிபெயர்ப்பாளர் இன்றி திருவாட்டி பார்த்தியிடமிருந்து போலிசார் வாக்குமூலம் எடுத்தது போன்ற காரணங்களை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அதுமட்டுமல்லாது, திரு லியூவும் அவரது மகன் கார்ல் லியூவும் தவறான நோக்கத்துடன் திருவாட்டி பார்த்திக்கு எதிராகப் புகார் செய்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி சானின் தீர்ப்பை நன்கு ஆராய்ந்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் வேலையாக திரு லியூவின் மகனான கார்ல் லியூவின் வீட்டிலும் அலுவலகத்திலும் திருவாட்டி பார்த்தி வேலை செய்ய வேண்டி இருந்ததை நீதிபதி சான் சுட்டினார். அதுகுறித்து திருவாட்டி பார்த்தி அதிருப்தி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“திருவாட்டி பார்த்தி அதிருப்தி அடைந்ததும் திரு லியூவின் குடும்பத்தினர் அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர் மீது மனிதவள அமைச்சிடம் புகார் செய்ய வாய்ப்பில்லாதபடி சொந்த நாடு திரும்ப தயாராவதற்கும்கூட போதுமான நேரத்தை திரு லியூவின் குடும்பம் கொடுக்கவில்லை என்பது நம்பக்கூடியதாக இருக்கிறது,” என்று நீதிபதி சான் தெரிவித்தார்.

நீதிபதி சான் முன்வைத்துள்ள பல கருத்துகள் ஆராயப்படும் என்று போலிசாரும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவை குறித்து போலிசார் விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில், பணிப்பெண் திருவாட்டி பார்த்தி லியானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த ஐந்தாவது குற்றச்சாட்டை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதன் விளைவாக தம்மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் திருவாட்டி பார்த்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருவாட்டி பார்த்தியிடம் இருந்த 18 பொருட்கள் தொடர்பாக இந்தக் ஐந்தாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பொருட்கள் திரு லியூவின் குடும்பத்தாருடையது இல்லை. இருப்பினும், திருவாட்டி பார்த்தி அவற்றைத் திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

அந்தப் பொருட்கள் தமக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து திருவாட்டி பார்த்தி தந்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று இந்த வழக்கை முதன்முதலாக விசாரித்த அதிகாரி கள் தெரிவித்திருந்தனர்.

ஆறு ஈசி லிங்க் அட்டைகள், ஒரு அடகுக்கடை சீட்டு, பைகள், பணப்பைகள், இரண்டு கைக்கடிகாரங்கள், தோடு மற்றும் சங்கிலி போன்ற ஆபரணங்கள் ஆகியவை அந்த 18 பொருட்களில் அடங்கும்.

இந்தப் பொருட்களின் விலை

மதிப்பு குறித்து தெரியாது என்று குற்றப் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon