கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் நீண்ட பட்டியல்: பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி?

சிங்கப்பூர் மீண்டும் அதன் வர்த்தகங்களைத் திறக்கத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்ற இடங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.

கொவிட்-19 நோயாளிகள் அதிகம் சென்ற இடங்கள் யாவை என்பதை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?

குறைந்தது அரை மணி நேரத்திற்கு கடந்த 14 நாட்களில் கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலை சுகாதார அமைச்சு தினமும் வெளியிட்டு வருகிறது. நோயாளிகள் சென்றிருந்த நேரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழுப் பட்டியல் gov.sg இணையத்தளத்தில் உள்ளது.

 

பட்டியல் எவ்வளவு நீளம்?

கடந்த ஐந்து வாரங்களில் கொவிட்-19 நோயாளிகள் 90க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்றுள்ளனர். பட்டியலில் பேரங்காடிகளின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆர்ச்சர்ட் சாலையில் மட்டும் 12 பேரங்காடிகளும் குடியிருப்பு வட்டாரங்களின் 30க்கு மேலான பேரங்காடிகளும் இதில் அடங்கும்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மவுண்ட்பேட்டனில் அமைந்துள்ள புளோக் 4A ஜாலான் பாத்து உணவங்காடி நிலையத்திற்கு 10 முறை சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. லக்கி பிளாசாவுக்கு ஆறு முறை, விவோசிட்டிக்கு ஐந்து முறை, கேலாங் சிராய் ஈரச்சந்தை மற்றும் உணவு நிலையத்திற்கு நான்கு முறை என கொவிட்-19 நோயாளிகள் மீண்டும் மீண்டும் சென்றிருந்தனர்.

 

கொவிட்-19 நோயாளி சென்ற அதே நேரத்தில் நானும் அங்கு சென்றிருந்தால் என்ன செய்வது?

அந்த இடத்திற்குச் சென்ற நாளிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல், சுவைக்கும் அல்லது முகரும் உணர்வை இழந்துவிடுதல், இறுமல், தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். பட்டியலில் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றிருந்தையும் தெரிவிக்கவும்.

 

பட்டியலில் உள்ள இடங்களை தவிர்த்துவிடலாமா?

தேசிய சுற்றுப்புற அமைப்பின் அதிகாரிகளின் மேற்பார்வையில் சுத்தம் செய்யும் பணிகள் இவ்விடங்களில் தீவிரமாக நடந்திருக்கும். அதனால் அங்கு செல்வதைத் தவிர்க்கத் தேவையில்லை. இதுவரை அதிகாரிகள் 3,500க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இவ்வாறு மேற்பார்வையிடச் சென்றுள்ளனர். பெரும்பாலானவை கொவிட்-19 நோயாளிகளின் இருப்பிடம் என்று தெரிவிக்கப்பட்டது.

 

எந்த அளவுக்கு சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாகநடந்திருக்கும்?

தேசிய சுற்றுப்புற அமைப்பின் வழிகாட்டுதலில் 22 பரிந்துரைக்கப்பட்ட படிகள் உள்ளன.

துணிகளை எந்த வெப்பநிலையில் அலசுவது முதல் துப்புரவாளர்கள் அணிந்திருந்த தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு முறையாக அகற்றுவது வரை இந்த படிகளில் விளக்கப்படுகின்றன.

சுத்தம் செய்யும் பணிகளை அவ்விடத்தின் உரிமையாளரோ வர்த்தகத்தை இயக்குபவரோ தாமே செய்ய முடியாத நிலையில், இச்சேவையை வழங்கும் நிறுவனங்களின் பெயர்களை அமைப்பு அவர்களுக்கு வழங்கும்.

 

பல நாட்களுக்கு பிறகு கொவிட்-19 நோயாளி வந்து போனது தெரிய வந்தால், சுத்தம் செய்யும் பணிகள் தேவையா?

சுகாதார அமைச்சின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முன், தொற்றுநோயியல் விசாரணையும் தொடர்புகளின் தடங்களை அறியும் விசாரணையும் நடக்கும். இதற்குச் சில நாட்கள் எடுக்கலாம்.

இதனால் கொவிட்-19 நோயாளி ஒருவர் தம் உணவகம், கடை, பேரங்காடிக்கு வந்து போனது உரிமையாளருக்குப் பல நாட்களுக்குப் பிறகு தெரிய வரலாம்.

கொவிட்-19க்குக் காரணமான ‘சார்ஸ்-கொவ்-2’ கிருமி பல நாட்களுக்கு ஆற்றலை இழக்காமல் இருக்க முடியும். அத்துடன் மிகவும் குளிர்ந்த இடங்களில் மூன்று வாரங்கள் வரை கூட கிருமி பரவும் சக்தி பெற்றிருக்கும் என்று பகிர்ந்துகொண்டார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டியோ யிக் யிங். எனவே கிருமி நீக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லதே என்று அவர் அறிவுறுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon