சுடச் சுடச் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரிய ஆடவரை சிங்கப்பூர் நீதிமன்றம் விடுவித்தது

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்ட 34 வயது நைஜீரிய ஆடவர் ஒருவர் ஒன்பது ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம், அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து மறுஆய்வு செய்த நீதிமன்ற அமர்வு, புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நைஜீரிய ஆடவரான இலெச்சுக்வு உச்செச்சுக்வு சுக்வுடியை குற்றமற்றவர் என்று இன்று தீர்ப்பளித்து விடுவித்தது.

அந்த நைஜீரிய ஆடவர், சிறு வயதில் பேரதிர்ச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டதால் 2011ஆம் ஆண்டில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பொய் வாக்குமூலங்கள் அளித்ததாக தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. இருப்பினும் அவர் கூறிய பொய்கள் யாவும் பொய் என எளிதில் கண்டுபிடித்துவிடலாம். என்றும் நீதிமன்றம் கூறியது. 

தலைமை நீதிபதி சுந்தரே‌ஷ் மேனன், நீதிபதிகள் ஆண்ட்ரூ பாங், ஜுடித் பிரகா‌ஷ், மூத்த நீதிபதி சாவ் ஹிக் டின் ஆகிய நீதிபதிகள் தங்களது முந்தைய தீர்ப்பு தவறானது என்று கூறி தீர்ப்பை மாற்றி நைஜீரிய ஆடவரை விடுவித்தனர்.

அந்த நைஜீரிய ஆடவர் நைஜீரியாவில் இருந்து 13.11.2011ஆம் தேதியன்று கறுப்புப் பயணப்பையுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவர் கொண்டு வந்த அந்தப் பையை அவர், சிங்கப்பூரரான ஹமிடா அவாங் என்பவரிடம் கொடுக்க, அதில் இரண்டு கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததால் ஹமிடா அவாங் கைது செய்யப்பட்டார். நைஜீரியா ஆடவர், மறுநாள் காலையில் அவரது ஹோட்டல் அறையில் கைது செய்யப்பட்டார். 

2014ஆம் ஆண்டில் நடந்த உயர்நீதிமன்ற விசாரணையில், அவருடைய பயணப் பையில் போதைப்பொருள் இருந்தது தமக்குத் தெரியாது என்ற அவரது சாட்சியத்தை ஏற்று நீதிமன்றம் அவரை விடுவித்தது. 

இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது அவர் அளித்த வாக்குமூலங்கள் பல பொய்கள் நிரம்பியதாக இருந்ததால் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. 

மனநலக் கழகத்தின் அறிக்கையின் அடிப்படையில், 2017ஆம் ஆண்டில் அவரது வழக்கறிஞர்கள் தீர்ப்பை மறுஆய்வு செய்யும்படி மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் முறையிட்டனர். வழக்கு விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியது. 

ஐந்து நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வில் ஐந்தாம் நீதிபதியான தே யோங் குவாங், மற்ற நான்கு நீதிபதிகளின் முடிவை ஏற்க மறுத்து, அந்த நைஜீரிய ஆடவர் குற்றவாளி என்ற முந்தைய தீர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon