சுடச் சுடச் செய்திகள்

பயணிகளிடமிருந்து பேருந்து ஓட்டுநர்களைப் பாதுகாக்க பிளாஸ்டிக் தடுப்புகளை அமைப்பது குறித்து பரிசீலனை

பொதுப் பேருந்துகளில் ஓட்டுநரைச் சுற்றி பிளாஸ்டிக் தடுப்பு அமைப்பதன் மூலம் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும் என்று ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.

அதுபோக, பிளாஸ்டிக் தடுப்பு அமைப்பதால் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் பயணிகளிடம் இருந்தும் பேருந்து ஓட்டுநர்களைப் பாதுகாக்க முடியும்.

இவ்வாண்டு பேருந்து ஓட்டுநர்களைப் பயணிகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில், பிளாஸ்டிக் தடுப்பு அமைப்பது குறித்து ஈராண்டுகளுக்கு முன்பு எழுந்த யோசனையை மீண்டும் செயல்படுத்துவது பற்றி தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் பரிசீலித்து வருகிறது.

அப்போது பேருந்து நிறுவனங்கள், தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், நிலப் போக்குவரத்து ஆணையம் போன்றவை பேருந்துகளில் ஓட்டுநரைச் சுற்றி பிளாஸ்டிக் தடுப்புகளின் பயன்பாட்டைப் பரிசோதித்துப் பார்த்தது. பயணிகளின் தாக்குதலில் இருந்து ஓட்டுநர்களைப் பாதுகாப்பதே அதன் நோக்கம்.

என்றாலும், பிளாஸ்டிக் தடுப்புகள் சூரிய ஒளியை எதிரொளித்ததால் பேருந்தை ஓட்டுவதற்கு தாங்கள் சிரமப்படுவதாக ஓட்டுநர்கள் கூறியதால் பிளாஸ்டிக் தடுப்புகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டது.

இவ்வாண்டு முகக்கவசம் அணிய மறுக்கும் ஓரிரு பயணிகள் பேருந்து ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அன்றாடம் நிகழும் வேளையில், ஓட்டுநர்களைப் பாதுகாக்க பிளாஸ்டிக் தடுப்புகளை அமைப்பது குறித்து தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் யோசித்து வருகிறது.

“பேருந்து ஓட்டுநர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவது அல்லது அவர்களைத் தாக்கும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ள வேளையில், ஓட்டுநர்களைப் பாதுகாக்க பிளாஸ்டிக் தடுப்புகளை அமைப்பது குறித்து தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் பரிசீலித்து வருகிறது. அதேவேளையில் கிருமித்தொற்றில் இருந்து இந்தத் தடுப்புகள் ஓட்டுநர்களைப் பாதுகாக்கும்.

“இதன் தொடர்பில் பல்வேறு தெரிவுகளை நிலப் போக்குவரத்து ஆணையத்துடனும் பொதுப் போக்குவரத்து நடத்துநர்களுடனும் இணைந்து சங்கம் ஆராயும்,” என்று சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மெல்வின் யோங் கூறினார்.

இம்மாதம் 15ஆம் தேதி, முகக்கவசம் அணியாத பயணி ஒருவர் பேருந்தில் ஏறினார். முகக்கவசம் அணியுமாறு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர் கூறியும் அதைக் கேட்காத அவர் ஓட்டுநரைத் தாக்கினார்.

39 வயது ஓட்டுநருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக ஜாஃபலி அப்துல் ரஹிம் எனும் அந்த 52 வயது பயணி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கத்தி ஒன்றை வைத்திருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாண்டு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துகளில் மட்டும் ஓட்டுநர்களைப் பயணிகள் தாக்கும் கிட்டத்தட்ட 40 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சுமார் பாதி சம்பவங்கள் முகக்கவசம் தொடர்பானவை.

கடந்த ஆண்டு முழுவதுக்கும் இதுபோன்ற 33 சம்பவங்கள் பதிவாகி இருந்தன. அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் பேருந்துக் கட்டணம் செலுத்துவது தொடர்பானவை என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.

பேருந்து ஓட்டுநர்களுடன் சச்சரவில் ஈடுபட்ட பயணிகள் சிலர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon