முதுபெரும் தமிழாசிரியர் மு. தங்கராசன் காலமானார்

ஓய்வுபெற்ற மூத்த தமிழ் ஆசிரியரும் தமிழ் எழுத்தாளருமான திரு மு தங்கராசன் நேற்று (ஜனவரி 15ஆம் தேதி) காலமானார். அவருக்கு வயது 86.

கடந்த ஒரு வாரமாக நிமோனியா சளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த திரு தங்கராசனின் உயிர் வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணிக்கு மருத்துவமனையில் பிரிந்தது.

மனைவி ரெ செல்லம்மாள், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள், 14 பேரப்பிள்ளைகளை அவர் விட்டுச்சென்றார்.

அவரது இல்லம் யீசூன் அவென்யு 5 புளோக் 733 #03-386 எனும் முகவரியில் அவரது நல்லுடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சுமார் 5.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.45மணிக்கு மாண்டாய் தகனச் சாலை ஹால் 3ல் தகனம் செய்யப்படும்.

இன்றைய தமிழாசிரியர்கள் பலருக்குத் தமிழ் கற்பித்த ஆசானாகவும், கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, மாணவர்களுக்கான கற்றல் வளங்கள், நாடகத் தொகுப்பு என கிட்டத்தட்ட 40 நூல்களுக்கு ஆசிரியராகவும் அவர் விளங்கினார்.

இந்தியாவில் பிறந்த அவர், மூன்று வயதில் மலாயாவிற்கு அழைத்துவரப்பட்டார்.

கிட்டத்தட்ட 1960களில் தமது ஆசிரியர் பணியைத் தொடங்கிய அவர், அன்றைய செம்பவாங் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பள்ளி, உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி, ரங்கூன் ரோடு உயர்நிலைப் பள்ளி, நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளி போன்ற பள்ளிகளில் ஆசிரியர் பணி ஆற்றியுள்ளார் என்று அவரது மகன் திரு த வேணுகோபால் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவில் தமது தந்தைப் பணியாற்றியபின், யீசூன் உயர்நிலைப் பள்ளி, செம்பவாங் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க் கற்பித்தபின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்றதாகத் தெரிவித்தார்.

தமிழ் முரசு, கல்வி அமைச்சு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் 2013ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மூவருள் திரு மு தங்கராசனும் ஒருவர்.

"வாழ்நாள் முழுதும் எழுதி தமிழ்த் தொண்டு ஆற்றியவர் திரு தங்கராசன். பல எழுத்தாளர்களை ஊக்குவித்து புத்தக வெளியீடுகளுக்கு ஏற்பாடு செய்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ்ப் பணி ஆற்றியவர் அவர்," என்று புகழாரம் சூட்டினார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு சி சாமிக்கண்ணு.

"தொடக்கக் காலத்தில் தமிழாசிரியர்களின் நிலையை நேரில் பார்த்து, அனுபவித்த அவர், தமிழாசிரியர்கள் முன்னேற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். தமிழாசிரியர்களாக ஆகவேண்டும் என்று ஊக்குவித்த அவர், தமது மூன்று மகன்களையும் தமிழாசிரியராக்கினார்," என்றும் அவர் சொன்னார்.

"தமிழாசிரியர் சங்கத்திற்குத் தூணாக அவர் விளங்கினார். கடைசி வரைக்கும் ஒரே நிலையாகவும் வலுவான ஆதரவாகவும் இருந்தார்," என்று கண்ணீர் மல்க கூறினார் திரு சாமிக்கண்ணு.

திரு தங்கராசன் மறைந்த செய்தியறிந்து "தமிழே சிங்கப்பூரை விட்டு போனதுபோல இருந்தது" என்று கூறினார் திரு தங்கராசனிடம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு பாடங்களைப் பயின்ற தமிழாசிரியர் திரு அ இளங்கோ.

அவர் உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளிக்கு 1973ஆம் ஆண்டு ஆசியராகச் சேர்ந்த ஆண்டு நான் உயர்நிலை 1ல் பயின்றேன். எனது 'ஃபார்ம் டீச்சராக' அவர் இருந்தார்.

"அவர் அன்று கற்பித்த பாடங்களும் வழங்கிய ஆலோசனைகளும் பயன்படுத்திய முத்து முத்தான வார்த்தைகளும் இன்னும் என் ஆழ்மனதில் பதிந்துள்ளன," என்றார் அண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் கற்பிக்கும் 61 வயது திரு இளங்கோ.

"தமிழ் இலக்கிய வகுப்புகளை அவர் நடித்தே காண்பிப்பார். யாரும் மறக்கமுடியாத அதுபோன்ற சம்பவங்கள் நாங்கள் எவ்வளவு வரம் பெற்றவர்களாக இருக்கிறோம் என்பதற்குச் சான்று," என்றார் அவர்.

தன்னம்பிக்கை ஊட்டும் ஆசிரியராக விளங்கிய அவரை உயர்ந்த ஸ்தானத்தில் என்றும் வைத்திருப்பதாக திரு இளங்கோ குறிப்பிட்டார்.

கவிதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் நாடகங்களுக்கும் தேவையான அருமையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி முன்னுதாரணமாக விளங்கிய திரு தங்கராசன், படைப்பாளிக்கே படைப்பாளி என்றார் உள்ளூர் எழுத்தாளர் திரு இராம கண்ணபிரான்.

"அவர் அறிமுகப்படுத்திய பல அருஞ்சொற்களை நான் எனது படைப்புகளில் பயன்படுத்தியது உண்டு," என்றார் அவர்.

தமிழவேள் நாடக மன்றம் என்ற அமைப்பை நிறுவி நடத்திவந்தார் திரு தங்கராசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!