கிராஞ்சி வனப்பகுதியில் சுமார் 8 ஹெக்டருக்கும் அதிகமான பசுமைப் பரப்பை அகற்றும் பணி கடந்த ஆண்டு மார்ச் முதலே தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஜேடிசி நிறுவனம் இந்தத் தவற்றைப் பற்றி அறிந்துகொண்டதற்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு அந்தப் பணி தொடங்கியதை சமூக ஊடகங்களில் வெளியான துணைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.
கிராஞ்சி ரோடு, கிராஞ்சி குளோஸ் வட்டாரத்தில் அனுமதியின்றி பசுமைப் பரப்பு அகற்றப்பட்டதன் தொடர்பிலான படங்கள் அண்மையில் வெளியாகின. இந்த பசுமைப் பரப்பு அகற்றும் பணிகள், சுற்றுச்சூழல் ஆய்வுகள் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே, கடந்த டிசம்பரில் தொடங்கியதாக கடந்த செவ்வாய்க்கிழமை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் பேசிய ஜேடிசி குறிப்பிட்டது.
ஆனால், குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் எனும் கண்காணிப்பு அமைப்பிடமிருந்து பெற்ற துணைக்கோள் புகைப்படங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆராய்ந்ததில், பசுமைப் பரப்பை அகற்றும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியே தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எட்டு ஹெக்டருக்கும் அதிகமான அந்த நிலப்பரப்பு கடந்த மாதம் 25ஆம் தேதிக்குள்ளாக அகற்றப்பட்டிருப்பதாக சென்டினல்-2பி துணைக்கோள் எடுத்த புகைப்படங்கள் காட்டின. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே கிராஞ்சி ரோட்டுக்கு அருகில் உள்ள காடுகள் அகற்றப்பட்ட பகுதியில், “பிளாட் 9க்காக கிராஞ்சி ரோட்டில் முன்மொழியப்பட்டிருக்கும் நில சுத்தப்படுத்துதல்” என்று குறிப்பிடும் அறிவிப்புப் பலகை வைத்திருந்ததை கூகல் ஸ்திரீட் வியூ புகைப்படங்களும் காட்டின.
ஆனால், தவறுதலாக பசுமைப் பரப்பு அகற்றப்பட்டது ஜனவரி 13ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதும், அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை ஜேடிசி நிறுவனம் தெரிவித்தது.
அந்தப் பகுதியில் பல்லுயிர் வாழ்வு பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தி சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் திட்டத்தை உருவாக்க கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு சுற்றுச்சூழல் நிபுணர் நியமிக்கப்பட்டதாகவும் ஜேடிசி குறிப்பிட்டது. அந்தப் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவுற இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
அந்த ஆய்வுப் பணி நிறைவுற்ற பிறகு இயற்கை ஆர்வலர் குழுக்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி விவாதிக்க இருப்பதாகவும் ஜேடிசி குறிப்பிட்டிருந்தது.
சிங்கப்பூரின் இயற்கைச் சங்கம் வெளியிட்ட ‘தி கிரீன் ரயில் காரிடார்’ எனும் புத்தகத்தின்படி, அகற்றப்பட்ட பசுமைப் பரப்பானது கிராஞ்சி உட்லேண்ட்-ஸ்கிரம்ப்லேண்டில் சுமார் 70 ஹெக்டர்பரப்பு.
அந்தப் பகுதியில் 47 வகையான பறவைகள் வசித்து வந்தன.
அனுமதியின்றி இந்த பசுமைப் பரப்பு அகற்றப்பட்டதன் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக தேசிய பூங்காக் கழகம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டத்தின்படி, மரப் பாதுகாப்புப் பகுதி அல்லது அதற்கு வெளியில் என எந்த ஒரு காலியிடத்திலும் வளர்ந்திருக்கும் ஒரு மீட்டருக்கு மேல் சுற்றளவு உள்ள மரத்தை தேசிய பூங்காக் கழகத்தின் அனுமதியின்றி வெட்டுவது சட்டவிரோதம்.
அகற்றப்பட்ட வனப்பகுதி விலங்குகளின் நகர்வுக்கு முக்கிய இணைப்பு: நிபுணர்கள்ரயில் பாதை அருகில் அமைந்துள்ள இரு பெரும் கிராஞ்சி வனப்பகுதிகள் தவறுதலாக அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியானது விலங்குகள் வேறு பகுதி களுக்குச் செல்வதற்கான முக்கிய இணைப்புப் பகுதியாக இருந்ததென இயற்கை ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அழிக்கப்பட்ட சுமார் 70 ஹெக்டர் பசுமைப் பகுதியானது அதன் வடக்குப் பகுதியில் மண்டாய் சதுப்புநிலத்தையும் தெற்கில் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதி உட்பட மற்ற இயற்கைப் பகுதிகளையும் இணைக்கும் பகுதி.
சதுப்புநில பகுதியைச் சார்ந்து வாழும் விலங்குகள், வனப்பகுதியைச் சார்ந்து வாழும் விலங்குகள் போன்றவற்றின் வசிப்பிடமாக, அகற்றப்பட்ட அந்தப் பகுதி திகழ்ந்ததாக சிங்கப்பூரின் இயற்கை சங்கத்தின் தலைவர் டாக்டர் ஷான் லம் குறிப்பிட்டார்.