எதிர்பார்க்கப்படாத வகையில் சிங்கப்பூரின் பொருளியல் 0.2% வளர்ச்சி

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் எதிர்பாக்கப்படாத வகையில் 0.2% வளர்ச்சி கண்டுள்ளதாக முன்னோடி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உற்பத்தித் துறையில் காணப்பட்ட ஏற்றமும் சேவைத் துறைகள் மீளத் தொடங்கியுள்ளதும் இதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அடுத்த காலாண்டிலும் பொருளியல் வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தொழிலாளர் சந்தையில் தொடரும் மந்தநிலையாலும் அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகளாலும் இவ்வாண்டின் பிற்பாதியில் பொருளியல் வளர்ச்சி வேகம் குறையலாம் என்று பகுப்பாய்வாளர்கள் பலரும் நம்புகின்றனர்.

2019 இறுதிக் காலாண்டிற்குப் பிறகு, காலாண்டு அடிப்படையில் பொருளியல் வளர்ச்சி கண்டிருப்பது இதுவே முதன்முறை. சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் பொருளியலில் ஏற்றஇறக்கம் காணப்படவில்லை.

முன்னதாக, புளூம்பெர்க் கருத்தாய்வின்படி 2021 முதல் காலாண்டில் பொருளியல் 0.5% சுருங்கலாம் என பகுப்பாய்வாளர்கள் கணித்திருந்தனர்.

நடப்பாண்டில் பொருளியல் வளர்ச்சி 4% முதல் 6 விழுக்காட்டிற்குள் இருக்கும் என வர்த்தக, தொழில் அமைச்சு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், இப்போது அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆயினும், இவ்வாண்டில் நாட்டின் ‘ஜிடிபி’ வளர்ச்சி 6 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது அரையாண்டு மறுஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நாணயக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யாத நாணய ஆணையம், மதிப்பீட்டு விகிதத்தை 0% என அதே நிலையிலேயே வைத்துள்ளது.

காலாண்டு அடிப்படையில் பார்க்கையில், வர்த்தக, தொழில் அமைச்சு மதிப்பீடுகளின்படி, 2020 இறுதிக் காலாண்டைக் காட்டிலும் 2021 முதல் காலாண்டில் பொருளியல் 2% வளர்ச்சி அடைந்துள்ளது. முந்திய காலாண்டில் இந்த வளர்ச்சி 3.8 விழுக்காடாக இருந்தது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறை 7.5% ஏற்றம் கண்டது.

காலாண்டு அடிப்படையிலும் உற்பத்தித் துறை வளர்ச்சி அடைந்தது. 2020 கடைசிக் காலாண்டில் 1.4% சுருங்கிய நிலையில், நடப்பாண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் அத்துறை 7.6% வளர்ச்சி கண்டது.

கொவிட்-19 பரவல் சார்ந்த சில வேலைக் கட்டுப்பாடுகளால் கட்டுமானத் துறை 20.2% வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்தச் சரிவு, 2020 இறுதிக் காலாண்டில் 27.4 விழுக்காடாகவும் 2020 முழு ஆண்டிலும் 35.9 விழுக்காடாகவும் இருந்தது.

காலாண்டு அடிப்படையில் பார்க்கையில், 2020 இறுதிக் காலாண்டில் 55.6% ஏற்றம் கண்ட கட்டுமானத் துறையின் வளர்ச்சி நடப்பாண்டின் முதல் காலாண்டில் மெதுவடைந்து, 8.4 விழுக்காடானது.

சேவைத் துறையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. ஆண்டு அடிப்படையில் கடந்த காலாண்டில் அத்துறை 1.2% சுருங்கியது. முந்திய காலாண்டில் இந்தச் சரிவு 4.7 விழுக்காடாகவும் 2020 முழுவதும் பார்க்கையில் 6.9 விழுக்காடாகவும் இருந்தது.

ஆயினும், காலாண்டு அடிப்படையில் சேவைத் துறை 0.4% வளர்ச்சியடைந்தது.

தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள், சொத்துச் சந்தை, நிர்வாகம் மற்றும் ஆதரவு சேவைகள், பிற சேவைத் துறைகள் ஆகியவை கடந்த ஆண்டின் முதல் காலாண்டை ஒப்புநோக்க, 2021 முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி கண்டன.

அதேபோல, தகவல் தொடர்பு, நிதி மற்றும் காப்புறுதி, நிபுணத்துவ சேவைத் துறைகள் ஆகியவை ஒட்டுமொத்தமாக 3.7% ஏற்றம் கண்டன. முந்திய காலாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 1.4 விழுக்காடாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!