இதுவரை காணாத விடுமுறைச் சூழல்

இந்து இளங்கோவன்

ஜூன் மாத விடுமுறையை உற்சாகமாகக் கழிக்க பல திட்டங்களை மாணவர்கள் வைத்திருப்பார்கள். குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, நண்பர்களுடன் உல்லாசமாக வெளியே செல்வது, பக்கத்தில் இருக்கும் ஜோகூர் பாருவுக்காவது செல்வது என பற்பல திட்டங்கள். ஆனால், ஓராண்டுக்கு மேலாக வெளிநாட்டுச் சுற்றுலா சாத்தியமற்று போய்விட்டது.

உள்ளூரிலாவது சுதந்திரமாக சுற்றலாம் என்றால், கிருமித்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. இந்நிலையில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மாணவர்கள் என்னென்ன எல்லாம் செய்கிறார்கள்?

எல்லாம் மெய் நிகரில்

நண்பர்களைச் சந்தித்து உரையாடுவது, அவர்களுடன் திரைப்படம் பார்ப்பது, சேர்ந்து விளையாடுவது, உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது, பிறந்தநாள் கொண்டாடுவது என அனைத்தும் இப்போது இணையம் வழியே. மெய்நிகர் வாழ்வுக்குப் பழகிவிட்டனர் இளையர்கள்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு இதுதான் இயல்புநிலை என்றும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

'ஸ்கைப்' கடந்த காலம் என்றும் 'ஜூம்' (zoom) நிகழ்காலம் என்றும் கிருமித்தொற்றின் தொடக்கத்தில் இருந்தவர்கள், இப்போது அதையும் மிஞ்சி வீட்டிலிருந்தவாறே நண்பர்களுடன் சேர்ந்து 'டெலி பார்ட்டி' சேவை வழி ஒரே நேரத்தில் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளைச் சேர்ந்து பார்ப்பது, 'ஹௌஸ் பார்ட்டி', 'கோட் வர்ட்ஸ்' ஆகிய சுவாரசியமான இலவச இணைய விளையாட்டுகளைக் குழுவாக விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள் சிங்கப்பூர் இளையர்களிடையே பிரபலமாகி உள்ளன.

மேடையின்றி தொடரும் கலைகள்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் ஷரத் பத்மநாதனுக்கு (23) 'பாப் & லாக்' ஆட்டம் மீதும் தனி ஆர்வம். கிருமித்தொற்று பரவலால் மேடையில் ஏறி நடனமாடும் வாய்ப்பு கள் பறிபோகவில்லை.

விடுமுறையில் இருக்கும் இவர், கடந்த மாதம் வரை நேரடியாக நடன வகுப்பு களுக்குச் சென்றும், நண்பர்களுடன் இணைந்தும் நடனப் பயிற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறினார். புதிய கட்டுப்பாடுகளால் நேரடி வகுப்புகளுக்கும் செல்ல முடியாத நிலை.

மேடையேறவும் நண்பர்களுடன் இணைந்து ஆடவும் முடியாவிட்டாலும், தினமும் இணையம் வழி நடனப் பயிற்சி காணொளிகளைப் பார்க்கிறார். தாமாகவே நடனத் திறனை மேம்படுத்திவருகிறார் இவர். தமது திறனை வெளிப் படுத்த தாம் நடனமாடிய காணொ ளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கிறார்.

பிரபலமாகும் இணையவழி பாடங்கள்

அதிகரித்துவரும் போட்டியைச் சமாளிக்கவும் மாறிவரும் வேலைச் சந்தைக்கும் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் விடுமுறையை திறன் மேம்பாட்டுக்கு ஒதுக்கியுள்ளனர் சிலர்.

'கோர்சரா' (Coursera), 'யுடெமி' (Udemy), 'லிங்க்ட்இன்' (Linkedin), போன்ற தளங்களில் இலவச பயிற்சி வகுப்புகளுக்கும் இணைய கருத்தரங்கு களுக்கும் பதிவு செய்து தங்கள் அறிவுத் திறனையும் நட்பு வட்டத்தையும் பெருக்கு கின்றனர்.

"தற்போதைய வேலைச் சந்தையில் தனித்துவமாக தெரியவேண்டும் என்றால் பள்ளியில் கற்பதைத் தாண்டி புதிய விஷயங்களைத் தெரிந்துெகாள்ள வேண்டும்" என்கிறார் வேலைப் பயிற்சித் திட்டம் வழி வேலை பெற்ற பட்டதாரி நிஷாலினி தேவதாஸ், 25.

சமூக ஊடகத்தில் குவியும் கவனம்

சமூக ஊடகங்கள் இளையர்களுக்கு பல உலக நடப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இளையர்கள் அவர்கள் இவ்வுலகில் பார்க்க விரும்பும் மாற்றத்தைச் செயல்படுத்தும் கருவியாக சமூக ஊடக தளங்களைப் பார்க்கிறார்கள். 'இன்ஸ்டகிராம்' போன்ற ஊடகங்களைப் பெரும்பாலும் 15 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் பயன்படுத்து கிறார்கள்.

தமது தினசரி அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவற்றைப் பற்றி உலகத்திற்குச் சொல்ல பயன்படுத்தப்பட்ட இந்த ஊடகங்கள் இப்போது மனநலத்தைப் பற்றிய விழிப்புணர்வு, இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் போன்ற உலக நடப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு, இனம் சார்ந்த உள்ளூர் உரையாடல்கள் போன்றவற்றுக்கான முக்கியத் தளமாக விளங்குகின்றன.

பட்டதாரிகளின் மனநிலையில் மாற்றம்

வேலை கிடைக்குமா? வேலை கிடைத்தபின் இப்புதிய பயணத்தை நம்மால் சிறப்பாக கையாள முடியுமா? இவற்றைப் போன்ற கேள்விகள் பட்டப்படிப்பை முடிக்கவுள்ள மாணவர்களின் மனதில் இயல்பாகவே ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், கிருமித்தொற்று நிலைமையை மேலும் கடினமாக்கி உள்ளது.

பட்டமளிப்பு விழாக்களும் பல்லாண்டுக் கல்வி நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் செல்லும் வெளிநாட்டுப் பயணங்களும் இல்லை. இப்போதைக்கு வேலை வேண்டாம் என்று உலகையும் சுற்ற முடியாது. அதனால், காலத்தை விரயமாக்காமல் துடிப்புடன் செயல்படுகின்றனர் பல பட்டதாரிகள்.

முஹம்மது ஆஷிக், 25 சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் இறுதித் தேர்வை முடித்த கையோடு தாம் வேலைப் பயிற்சிபெற்ற 'ஷாப்பீ' நிறுவனத்திலேயே முழுநேர பணியைத் தொடங்கினார்.

பட்டப்படிப்பை முடித்ததும் நண்பர்களுடன் இணைந்து தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவர வேண்டும் எனும் திட்டம் கிருமிப் பரவலால் தகர்க்கப்பட்டது.

மேலும், இப்போதைய வேலைச்சந்தையில் கையில் இருக்கும் வேலையைத் தக்க வைத்துக்கொள்வதே சிறந்தது என்று இறுதித் தேர்வுகளை முடித்த கையோடு முழுநேரப் பணியை தொடங்கி இருக்கிறார். ஆனால் ஆஷிக்கை போலவே எல்லோருக்கும் வேலை எளிதில் கிடைத்துவிடுவதில்லை.

ஆஷிக்கின் நண்பர் மஹாதீர் முஹம்மது, 25 அதே சிங்கப்பூர் நிர்வாக பல் கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பை இவ்வாண்டு முடித்துவிட்டு வேலைத் தேடலில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேலை கிடைக்க தாமதமானாலும் வேலை தேடியவாறே சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறார். மஹாதீர். ஒன்பீப்பல்எஸ்ஜி (One PeopleSG) அமைப்புடன் இணைந்து இனவாதம் தொடர்பான விழிப்புணர்வுத் திட்டத்தில் அவர் பங்களித்து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!