- இந்து இளங்கோவன்
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற நன்னூல் வாக்கு எந்நாளுக்கும் பொருத்தமானதாக விளங்குகிறது.
அதுவும், இப்போதைய கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் பழைய வழக்கங்களுக்குத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ விடைகொடுத்து, விரும்பினாலும் விரும்பாவிடினும் புதிய வழக்கங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், தீபாவளித் திருநாளும் அதற்கு விதிவிலக்கல்ல.
லிட்டில் இந்தியாவில் உள்ள தீபாவளிச் சந்தைக்கு குடும்பத்துடன் சென்று கூட்டத்தோடு கூட்டமாக புத்தாடைகள் வாங்கி, வீட்டிற்கு அலங்காரப் பொருள்கள் வாங்கி, தீபாவளிக்குச் சில நாள்களுக்குமுன் சென்று மருதாணி இட்டுக்கொண்டு, மத்தாப்பு வாங்கி, சமைக்க காய்கறிகள், இறைச்சி வாங்கி, தீபாவளி ஒளியூட்டை ரசித்தவாறு இரவு உணவு உண்டுவிட்டு வீடு திரும்பி அடுத்த நாள் தீபாவளிக்குத் தயாராவது வழக்கமாக இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு பல குடும்பங்களில் இந்த வழக்கம் மாறி, உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அனைத்தையும் வீட்டிலிருந்தவாறே இணையத்திலேயே தேர்வுசெய்து வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.
பயனீட்டாளர்களில் 74 விழுக்காட்டினர் இணையம் வழியாகப் பொருள் வாங்கியுள்ளனர் என்பது இவ்வாண்டிற்கான ‘விசா’ நிறுவன ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. பலரும் பொருள் வாங்க இணையத்தை நாடுவதால், நேரடியாக கடைகளுக்குச் சென்று பொருள் வாங்குவோர் எண்ணிக்கை 52 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
பொருள்களை வீட்டிற்கே நேரில் விநியோகம் செய்யும் சேவைகளை 71% சிங்கப்பூரர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கொவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள ஊழியர் பற்றாக்குறை, கட்டுமானத் துறை மட்டுமின்றி பிற வணிகங்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. லிட்டில் இந்தியாவில் உள்ள சில கடைகள் ஆட்பற்றாக்குறையால் சில சேவைகளை நிறுத்திவிட்டன. இப்பிரச்சினையைச் சமாளிக்க இணையவழி வணிகம் உதவுகிறது என்றார் ‘ஸ்ரீமுருகன் டிரேடிங்’ உரிமையாளர் திரு ராமலிங்கம்.
ஆயினும், நிலைமை மேம்பட்டதும் அதிகமான வாடிக்கையாளர்கள் நேரில் வந்து பொருள்களை வாங்கிச் செல்வர் என்று கடைக்காரர்கள் பலரும் நம்புகின்றனர்.
“என்னதான் இணையத்தில் ஆடைகளையும் காய்கறிகளையும் அதிகமானோர் வாங்கினாலும், நேரடியாக வந்து ஆடைகளை அணிந்து பார்த்து, காய்கறிகளைக் கைப்பட தேர்வுசெய்து வாங்குவதுபோல் வராது,” என்றார் ‘ரோஸ் ஃபேஷன்’ கடையின் திருமதி ரதி அழகிரி, 40.
‘விலை மட்டுமல்ல, அலைச்சலும் குறைகிறது’

தீபாவளிக்கு 105 விதமான ஆடைகளை விற்பனைக்கு வைத்துள்ளது ‘வினெஷ்யா வின்டேஜ்’ எனும் இணைய வர்த்தகம். தீபாவளி விற்பனை தொடங்கிய 15 நாள்களிலேயே 85க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதன்வழி புத்தாடைகளை வாங்கியிருக்கின்றனர். அக்டோபர் மாதம் மட்டுமே இந்த இணைய வர்த்தகத்திற்கு 350 பணிப்புகள் (Orders) வந்துள்ளன.
“கடைகளுக்கு நேரில் சென்று ஆயத்த ஆடைகளை வாங்கியபின், அவற்றைத் தையற்காரரிடம் தந்து வாடிக்கையாளர்கள் தங்களது உடல் அமைப்பிற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், எங்களைப் போன்ற பல இணையக் கடைகளில் வாடிக்கையாளர்களின் உடல் அளவிற்கு ஏற்ப ஆடைகளை வடிவமைத்துத் தருகிறோம். இதனால் விலை மட்டும் அல்ல, அலைச்சலும் குறைகிறது,” என்று கூறினார் ‘வினெஷ்யா வின்டேஜ்’ உரிமையாளர் குமாரி லாவண்யா.
கடந்த சில ஆண்டுகளாக அதிகமானோர் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் வழியாக நேரலையில் ஆடைகளை விற்று வருகின்றனர்.
அத்தகையோரில் ஒருவர்தான் ‘அரங்கன் ஃபேஷன்’ உரிமையாளர் திருமதி வள்ளி சத்தியமூர்த்தி.
நேரலையின்போது சேலையின் தரம், அதுபற்றிய விவரம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடிவதால் இணையத்தளத்தைவிட நேரலை மூலமாகவே அதிகமானோர் தம்மிடம் சேலை வாங்கி வருவதாகக் கூறினார் திருமதி வள்ளி.
“மேலும், நேரலையின்போது விற்கப்படும் சேலைகள் எங்கிருந்து வருகின்றன? எந்த நூலில் நெய்துள்ளனர்? சேலையின் கரைப்பகுதி எத்தகைய வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பன போன்ற விவரங்களைக் கூறிய பிறகுதான் சேலைகளை விற்போம். சேலை பற்றிய விவரங்களைத் தெரிந்து அணியும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்,” என்றார் அவர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதும் இணையத்தில் பொருள் வாங்கும் போக்கு அதிகமாகத் தொடங்கியது. அப்பழக்கம் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்ட பின்னரும் தொடர்கிறது. இதனைப் பார்க்கும்போது, இணைய வணிகங்கள் மீதான நம்பகத்தன்மை கூடி, அவற்றின் சேவைகளும் சலுகைகளும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன என்பது தெளிவாகிறது.
புதிய அறிவிப்பால் பெரும் பாதிப்பு
சிராங்கூன் சாலை - கேம்பல் லேன் சந்திப்பில் நடையர்கள் சாலையைக் கடக்குமிடம், அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை மாலை 6 மணியில் இருந்து இரவு 1 மணிவரையும் நவம்பர் 3 தீபாவளிக்கு முதல்நாள் மாலை 6 மணியில் இருந்து பின்னிரவு வரைக்கும் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் தமது தொழில் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருவதாகக் கூறினார் ஸ்ரீ அம்பாள் பூக்கடை உரிமையாளர் திரு முத்துசின்னக்கலை.
தீபாவளிக்குப் புதுவகை மத்தாப்பு
பல ஆண்டுகளுக்குமுன் தீபாவளி நேரத்தில் இந்திய வீடுகளில் திடீரென ஊதல் சத்தம் பலமாகக் கேட்கும். அதற்கு, அப்போது அறிமுகமான ஊதல் மத்தாப்பே காரணம். அதன்பின், பல புதுவித மத்தாப்புகளும் வெடிகளும் வந்திறங்கின. இந்த ஆண்டு புதிதாக வந்துள்ளது இதய வடிவிலான புதுவகை மத்தாப்பும், ஐந்து மத்தாப்புகளை ஒரே நேரத்தில் வெடிக்க உதவும் ஒரு கருவியும். பற்றவைக்கும்போது ஐந்து மத்தாப்புகளும் குடைபோல் விரிந்து சங்குச் சக்கரம் போல் சுழலும்.
‘புது’மையை விரும்பும் இளமை
‘ஜாகுவா ஜெல்’ என்ற ஒருவகை கறுப்பு மையைக் கொண்டு மருதாணியிட்டு வருகிறார் மருதாணிக் கலைஞரான குமாரி ஷரீன் பேகம். இதற்கு இளையர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தவாறே மருதாணி இட்டுக்கொள்ள ஏதுவாக வரையச்சுகளையும் (stencils) இவர் விற்கிறார். இப்போது சிலர், காற்றுத் தூரிகை உத்தியைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு அழகுசேர்த்து விடுகின்றனர்.