தமிழ் முரசுடன் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் பண்பாடும் தாய்மொழியுமே நம் அடையாளம்

சிங்கப்பூரின் மதிப்புக்குரிய சட்ட, உள்துறை அமைச்சராக சட்டதிட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தும் கடின சித்தமுடையவராக வலம் வரும் திரு கா.சண்முகம் பேசுவதற்கு இனிமையானவர். தங்குதடையின்றித் தமிழில் உரையாடுகிறார், தமிழ் வாசிக்கிறார். தமிழ்ச் சிந்தனை, நேர்பட வாழ அவருக்கு உதவுகிறது. படிப்பு, பதவிகளுக்கு அப்பால் ஒருவருக்கு அடையாளம் தருவது, ஆணிவேராக இருப்பது அவரது பண்பாடும் தாய்மொழியும் என்பதை உறுதியாக நம்புவர்.

ஒரு­வ­ருக்கு அவ­ரின் பண்­பா­டும் தாய்­மொ­ழி­யும்­தான் வேர். பண்­பாட்­டை­யும் தாய்­மொ­ழி­யை­யும் கைவிட்­ட­வர்­கள் வேரில்­லாத மரத்­துக்கு ஒப்­பா­ன­வர்­கள் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரின் பர­ப­ரப்­பான சூழ­லில் இரு­மொ­ழிக் கல்­வியை வலி­யு­றுத்தி கலா­சார புரி­தலை எல்லா இனத்­த­வ­ரி­ட­மும் ஏற்­ப­டுத்த அர­சாங்­கம் தொடர் முயற்சி மேற்­கொண்டு வரு­கிறது. அர­சாங்­கம் முயற்சி எடுத்­தால் மட்­டும் போதாது. பெற்­றோ­ரும் இதில் பங்­காற்ற வேண்­டும் என்­றார் அமைச்­சர்.

தீபா­வ­ளியை ஒட்டி இந்­திய மர­பு­டைமை நிலையத்தில் நேற்று முன்­தி­னம் தமிழ் முர­சுக்கு சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் சிறப்பு நேர்­கா­ணல் வழங்­கி­னார்.

SPH Brightcove Video

பண்­பாடு, தாய்­மொ­ழி­யின் முக்­கி­யத்­து­வம் பற்­றிப் பேசி­ய­து­டன் தமது தீபா­வ­ளிக் கொண்­டாட்­டங்­கள், தமக்­குப் பிடித்த விஷ­யங்­கள், இந்­தி­யர் சமூ­கம், தமிழ் முரசு முத­லா­னவை குறித்தும் பகிர்ந்­து­கொண்­டார்.

திரு சண்­மு­கத்­தின் இள­வ­யது தீபா­வ­ளிக் கொண்­டாட்ட நினை­வு­கள், ஒரு­வ­ரது அடை­யா­ளத்தை உரு­வாக்க மொழி, பண்­பாட்டு வேர்­க­ளைக் கட்­டிக்­காப்­பது முக்­கி­யம் என்­பதை ஆணித்­த­ர­மான நம்­பிக்­கைக்கு ஓர் எடுத்­துக்­காட்டு.

படிப்­பை­யும் தாண்டி, நம் அடை­யா­ளத்­துக்கு அர்த்­தம் சேர்ப்­பது நமது பண்­பாடு குறித்த புரி­தலே. வாழ்­வில் எவ்­வித சவா­லை­யும் எதிர்­நோக்­கு­வதற்­கான பலத்தை பண்­பா­டு­தான் கொடுக்­கும் என்ற அமைச்­சர், இளை­யர்­க­ளி­டத்­தில் பண்­பாட்டை வலி­யு­றுத்­து­வது தமிழர்­க­ளின் சவால் மட்டு­மன்று, சிங்­கப்­பூ­ரில் உள்ள அனைத்து சமூகங்களின் சவாலும் கூட என்று கூறி­னார்.

உல­க­ள­வில், மேற்­கத்­திய ஹாலிவுட் கலா­சா­ரத்­தின் தாக்­கம், இணைய தாக்­கம் என பல்­வேறு விதங்­களில் இளை­யர்­கள் அலைக்­கழிக்­கப்­ப­டு­கின்­ற­னர். தற்­கா­லத்­தில் கல்வி கற்­கும் சூழல் தம்­மு­டைய காலம்போல் இல்லை என்று குறிப்­பிட்ட திரு சண்­மு­கம், இப்­போதோ, பிள்­ளை­களுக்கு அதிக வீட்­டுப்­பா­டம் இருக்­கிறது. எல்­லோ­ரும் நேர­மின்­மை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில், பிள்­ளை­களை வழிப்­ப­டுத்தி, பண்­பாட்டு விழிப்­புணர்வை ஊட்­டு­வ­தற்கு, பெற்­றோர் முன்­பி­ருந்­த­தை­விட பல முயற்­சி­களை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது என்று அமைச்சர் சுட்­டி­னார்.

பொரு­ளா­தார அடிப்­ப­டை­யில் இந்­திய பெற்­றோர் இன்று ஓர­ளவு உயர்ந்­துள்­ள­னர். பிள்­ளை­க­ளி­டத்­தில் தமி­ழர் பாரம்­ப­ரி­யத்தை சார்ந்த விருப்­பங்­களை, பொழு­து­போக்­கு­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தும் சவா­லாக உள்­ளது. இணை­யம், சமூக ஊடகங்­கள் போன்ற ஈர்ப்­பு­கள் அதி­க­மாக உள்­ளன.

இதற்கு மத்­தி­யில், பண்­பாட்டு வழக்­கங்­களில் நேரம் செல­வி­டு­வது குறைந்­து­கொண்டே வரு­கிறது. நேர­மின்மை இருந்­தா­லும், பெற்­றோர்­க­ளா­கிய நாமும் இவற்றை தொடர்ந்து பின்­பற்­று­வது அவ­சி­யம் என்­றார் அவர்.

வள­ரும்­போ­தும், பள்­ளி­யி­ல் தாய்­மொ­ழி­யில் பேசி­யி­ருந்­தா­லும், இப்­போது வேலை­யி­டத்­தி­லும் சமூ­கத்­தி­லும் பெரும்­பா­லும் ஆங்­கி­லமே பேசு­கி­றோம். எல்லா இடங்­க­ளி­லும் மேலோங்­கி­யுள்ள ஆங்­கி­ல­மொழியை பெரும் அலை­போல் எல்லா இனத்­த­வ­ரும் எதிர்­நோக்­கி­யுள்­ளோம். எதிர்­நீச்­சல் அடித்தே, மொழி­யின்­மூ­லம் நம் பாரம்­ப­ரி­யத்தைக் காப்­பாற்ற வேண்­டி­யுள்­ளது.

மொழி­யின்றி, நாம் நமது கலை­யை­யும் கலா­சா­ரத்­தை­யும் இலக்­கி­யத்­தை­யும் அணு­கு­வது கடி­னம்.

இவற்றை நாம் அறி­யா­விட்­டால், நமது அடை­யா­ளத்­தின் அடிப்­படையை இழந்­து­வி­டு­வோம் என்­பதை மீண்­டும் மீண்­டும் நேர்­கா­ணல் முழு­வ­தும் எடுத்­துக்­கூ­றி­னார் அமைச்­சர் சண்­மு­கம்.

இளமைக்கால கனவுகள்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் ‘பேரவை’ இதழைத் தொகுத்த பல்கலைக்கழக மாணவர் சண்முகத்திற்கு பல கனவுகளும் இலக்குகளும் இருந்திருக்கும். அந்தக் கனவுகளையும் இலக்குகளையும் அவர் அடைந்திருக்கிறாரா?

சிறுவயதில் இப்படித்தான் ஆக வேண்டும் என்று எனக்கு எந்தத் திட்டமும் இருக்கவில்லை. சட்டக்கல்வி படித்தது கடைசிநேர முடிவு. முதலில் அறிவியல் படிப்பில் சேர்ந்தேன். வகுப்புகள் ஆரம்பித்த சில நாட்களில் சட்டக்கல்விக்கு மாறினேன். சட்டக்கல்வியை முடித்ததும், முன்னுதாரண வழக்கறிஞராக வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. அந்த இலக்கை ஓரளவு அடைந்துள்ளேன் என்றே நினைக்கிறேன்.

பல்கலைக்கழக நாட்களில், தமிழ்மொழியை கட்டிக்காக்கும் இலக்குடன் நாங்கள் சிலர் ஒன்றாக செயல்பட்டோம். அப்படித்தான் தமிழ்ப் பேரவையில் ஈடுபாடு கொண்டேன். பல கனவுகள் இருந்தன. அவை அனைத்தும் நனவாவதில்லை.

தமிழார்வத்தை தக்கவைத்துக் கொள்ளவும், தமிழ் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவுவதற்குமான எனது குறிக்கோள், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து இருந்து வந்தது.

சிண்டாவின் தலைவராக நான் செயல்பட்டிருக்கிறேன். இந்தியர் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது சிண்டா. அதன் கல்வி, துணைப்பாட வகுப்பு திட்டத்தில் நான் ஈடுபட்டிருந்தேன். ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த இந்திய மாணவர்கள் முன்னேறு வதற்கு சிண்டா உறுதுணையாக இருந்து வருகிறது. அவ்வகையில், இந்தியர் சமூகத்துக்கு பங்காற்றுவதும் எனது இலக்குகளில் ஒன்றாக இருந்துள்ளது.

2015இல் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, குற்றவாளிகளின் நலன் பேணுவது எனது சிறப்பு நோக்குகளில் ஒன்றாக இருந்துள்ளது. சமூகத்தில் அவர்கள் மீண்டும் இணைவதற்கும் மறுமுறை குற்றம் புரியாது இருப்பதற்குமான உதவித்திட்டங்களை ஆலோசித்துள்ளேன். போதைப்பொருள் புழங்கிகளின் சிக்கல்களை குற்றங்களாக மட்டும் கருதாமல், பொதுநல/சுகாதார பிரச்சினையாக அரசாங்கம் கருதி வருகிறது.

நான் சிங்கப்பூரில் பிறந்தது ஒரு பாக்கியம். தகுதி அடிப்படையில் இயங்கும் நம் நாட்டில், கல்வி வேலை வாய்ப்புகள் சமமாக இருக்கின்றன. யாரையும் நம்பி நாம் இல்லை.

இலக்கு இருந்தால் பிரிவு இல்லை

பன்முகத்தன்மை அதிகரித்து வரும் சிங்கப்பூர் இந்திய சமூகம், பிரிவினைகளை உண்டாக்கும் பல தாக்கங்களை எதிர்கொள்கிறது. இச்சூழலில் இந்திய சமூகம் கட்டிக்காத்து வரும் ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவது எப்படி?

இந்திய சமூகம் மட்டுமல்ல, உலகமே எதிர்கொள்ளும் சவால் இது. சமூக ஊடகம், இனவாத கருத்துகள், தீவிரவாதம் என பிரிவினையை உண்டாக்கும் பல்வகை உலகளாவிய தாக்கங்களை சமூகங்கள் எதிர்கொள்கின்றன.

இவற்றைக் கடந்து வந்து நாம் ஒன்றாக இருப்பதும் கலாசாரத்தை பேணுவதும் வலுப்படுத்துவதும் ஒரு சவால்தான். நமக்கு ஒன்றிணைந்த இலக்கு வேண்டும்.

அதைநோக்கிச் செல்லவேண்டும். அதுதான் நமக்கு முக்கியம்.

தெளிவான விளக்கம்

சட்ட, உள்துறை அமைச்சராக பெரும்பாலும் கடுமையான சட்டங்களை அறிவிப்பதில் நீங்கள் முன்னிலையில் இருக்கிறீர்கள். உங்கள் தரப்பை மக்களிடம் எப்படி விளக்கி, ஏற்றுக்கொள்ளச் செய்கிறீர்கள்?

சுதந்திரமும் சட்ட ஒழுங்கும் குறைந்த குற்ற விகிதமும் கொண்டுள்ள சிங்கப்பூர், ஒத்துழைக்கும் மக்களை கொண்டுள்ளது. கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதால்தான் நாம் சிறந்த நாடாக விளங்க முடிகிறது என்பதை அனைவரும் அறிந்தே உள்ளனர்.

நாம் புது சட்டதிட்டங்களையோ, மாற்றங்களையோ அவர்களிடத்தில் அறிவிக்கும்பொழுது, காரணங்களையும் இலக்குகளையும் அவர்களிடத்தில் தெளிவாக விளக்குவது முக்கியம். அறிவிப்புகளின்போது அதையே நான் மனதில் வைத்துக்கொள்கிறேன்.

பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு

தமிழ்ப் பாடல்களில் குறிப்பாக, கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவ பாடல்களை திரு சண்முகம் விரும்பிக் கேட்பதுண்டு. “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது” பாடல், அவர் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் ஒன்றாகும்.

வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் பணிவோடும் நிதானத்துடனும் இருக்க வேண்டும். எதுவுமே நிரந்தரமில்லை. நல்ல மனிதராக இருப்பதே முக்கியம் என்பதை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன என்றவர் அந்தப் பாடல் வரிகளை விளக்கினார்:

பாம்பு மட்டும் பரமசிவன் கழுத்தில் இல்லையென்றால் அது கருடனுக்கு இரையாகி இருக்கும்.

‘உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்’ என்ற அர்த்தமுள்ள வரிகள், பதவிகள் நிலைத்தன்மை யற்றவை என்பதை காட்டுகின்றன. உயர்பதவிகளில் இருப்போர், இப்பாடலை நினைவில்கொள்ள வேண்டும். தற்பெருமையை விடுத்து, நாம் நிதானத் துடன் கடமையை நிறைவேற்ற செயல்படவேண்டும்.

மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் இடம்பெறும், ‘காலத்தில் அழியாத காவியம் தர வந்த’ பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். கே. பி. சுந்தராம்பாள் குரல் கொடுக்க, சிவாஜி அதில் காளிதாஸாக நடித்திருப்பார்.

‘வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்/ சக்கரம் சுழல்கிறது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது

‘யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு

‘அதுவரை பொறுப்பாயடா மகனே என் அருகில் இருப்பாயடா’ என்ற வரிகள், சிங்கப்பூர் சூழலுக்கு தகுந்தவையாக உள்ளன. எவ்வாறு சக்கரம் சுழலும்போது அது மேலும் கீழும் செல்கிறதோ, அதுபோலத்தான் அனைவருக்கும் வாழ்வுள்ளது.

உயரும்போது தன்னடக்கத்துடனும், வீழும்போது மனம் தளராமலும் இருக்கவேண்டும். யார் எது சொன்னாலும், இவை அனைத்தும் வாழ்வில் இயல்பு என்பதை இப்பாடல் நினைவூட்டுகிறது. இதுவே என் வாழ்க்கை சித்தாந்தம்.

தீபாவளிக் கொண்டாட்டம்

சிறுவயதில், அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து குடும்பத்தாருடன் கோயிலுக்கு செல்வேன். அமைச்சரான பிறகு நானும் உடன் பணியாற்றும் பிற அமைச்சர்களும் விழாக் காலங்களை உள்துறை ஊழியர்களுடன் கொண்டாடு வதே வழக்கம். உறக்கமின்றி, மக்களுக்காக உழைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் விழாக்காலத்தை குடும்பத்தாருடன் முழுமையாக கொண்டாடுவதற்கான வாய்ப்பில்லை. அதை கருத்தில்கொண்டு அவர்களுடன் விழக்காலங்களைக் கொண்டாடுகிறோம்.

இந்த தீபாவளி காலையை (இன்று) ஜூரோங் தீயணைப்பு நிலையத்தில் கொண்டாடுகிறேன்.

அவர்களுடன் பலகாரங்கள் உண்டு, தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துகொள்வேன்.

தமிழ் முரசு வாசிப்பேன்

இப்போது தமிழ்ப் புத்தகங்கள் படிக்க நேரம் அனுமதிக்கா விட்டாலும், நான் தமிழ் முரசைத் தவறாமல் படிப்பேன். மனிதர்கள் சேர்ந்திருப்பது மட்டுமே சமுதாயம் அல்ல. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு கருத்து இருக்கவேண்டும். இலக்கும் பிணைப்பும் இருக்கவேண்டும். அத்தகைய பிணைப்பையும் பொதுவான இலக்கையும் ஏற்படுத்தி சமூகத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதில் தமிழ் முரசும் சீரிய பங்கை வகிக்கிறது.

தோசை பிடிக்கும்

இப்போதெல்லாம் அதிக கவனத்துடன் சாப்பிடுகிறேன். பெரும்பாலும் ‘சேலட்’ உண்டாலும் இந்திய சாப்பாடு பிடிக்கும். தோசை விரும்பி சாப்பிடுவேன். காலையில் சில நேரம் தோசை சாப்பிடுவேன். சிங்கப்பூரின் ‘ஹாக்கர்’ உணவும் எனக்குப் பிடிக்கும். நான் பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. இப்போது அறவே தொடுவது இல்லை.

கல்கியின் வாசகன், பொன்னியின் செல்வன் பார்க்கப் போகிறேன்

தமிழ்த் திரைப்படங்கள் இப்போது பார்ப்பதில்லை. ஆனால், சமீபகாலத்தில் திரைப்படம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை பொன்னியின் செல்வன் தூண்டியுள்ளது. எட்டு வயதில் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் வாசித்தேன். கல்கியின் புத்தகங்கள் அனைத்தையுமே வாசித்துள்ளேன் என்றவர், ‘வந்தியத்தேவனா, அருள்மொழி வர்மனா’ என்று கேட்டதற்கு, வந்தியத்தேவன் என்றார்.

சிவாஜி படங்கள்

சிறுவயதில், விறுவிறுப்பான காட்சிகளில் நடித்த நடிகர் எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்தேன். காலப்போக்கில், சிவாஜியின் திரைப்படங்களில் பொதிந்துள்ள கருத்துகளுக்கு ரசிகரானேன். திரைப்பட நடிகர்களைவிட, படங்கள் சொல்லும் கருத்துகளே எனக்கு முக்கியமாக உள்ளன.

நேர்காணல்: லதா, விஷ்ணு வர்தினி, கவிதா கரும், இர்ஷாத் முஹம்மது

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!