உங்கள் குரலாக, உங்கள் சார்பில் ஓய்வின்றி உழைக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பு: திருவாட்டி ஹலிமா

அதிபர் பதவி, உங்கள் குரலாக, உங்கள் சார்பில் ஓய்வின்றி பணியாற்ற எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்று திருவாட்டி ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.

அதிபர் என்ற முறையில் தம் மீது மக்கள் வைத்திருந்த மரியாதையை நினைத்து தான் பெருமைப்படுவதாக இஸ்தானாவில் நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி ஹலிமா கூறினார்.

ஆறாண்டுக் காலம் அதிபர் பதவியில் இருந்தபோது மக்கள் அளித்த பேராதரவே ஒவ்வொரு நாளும் தமக்கு மனஉறுதியை, ஊக்கத்தை தந்ததாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.

திருவாட்டி ஹலிமா, 69, இஸ்தானாவில் புதன்கிழமை நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

தான் அதிபராகப் பதவிக் காலகட்டத்தில் மிக மோசமான முன் ஒருபோதும் இல்லாத நெருக்கடியாக கொவிட்-19 தொற்றுக் காலம் இருந்தது என்பதைச் சுட்டிய அவர், சிங்கப்பூரின் கடந்த கால சேமிப்பு தொடர்பில் தானும் அரசாங்கமும் சிரமமான முடிவுகளை எப்படி எடுக்க வேண்டி இருந்தது என்பதை எடுத்துக் கூறினார்.

எதிர்காலத்திற்கும் சேமிப்பு இருக்க வேண்டும். அதே நேரத்தில் சிங்கப்பூரர்களின் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் காக்க அதிலிருந்து பணத்தையும் எடுக்க வேண்டும்.

இதற்கிடையில் சமநிலையைக் காண வேண்டும். இதைச் சாதிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது என்பதை திருவாட்டி ஹலிமா, 69, தமது உரையில் குறிப்பிட்டார்.

இருந்தாலும்கூட அந்த நெருக்கடி ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் சேமிப்பைப் பாதுகாக்க இரண்டு சாவி ஏற்பாடு நடப்பில் இருந்து வருகிறது.

அந்த ஏற்பாடு எந்த அளவுக்குச் சிறப்பாக செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒரு முறை பரிசோதித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பையும் அந்தத் தொற்றுக் காலம் வழங்கியது என்றார் அவர்.

தொற்று காரணமாக சேமிப்பில் இருந்து மூன்றாண்டுகளில் $69 பில்லியன் வரைப்பட்ட தொகையை எடுத்துக்கொள்ள அதிபரின் அங்கீகாரத்தை அரசாங்கம் நாடியது. அதில் சுமார் $40 பில்லியனை அரசாங்கம் பயன்படுத்தியது.

சேமிப்பைப் பாதுகாக்க இரண்டு சாவி ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது முதல் இந்த அளவுக்கு ஆக அதிகத் தொகை அப்போதுதான் முதன்முதலாக எடுக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று கற்றுக்கொடுத்த பாடத்தை மறந்துவிடுவது ஒரு தவறு என்று திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.

தாம் பதவி வகித்த காலத்தை நினைவுகூர்ந்த திருவாட்டி ஹலிமா, அரசாங்கத்துடன் நல்ல பணி உறவைத் தான் கொண்டிருந்ததாகக் கூறினார்.

அந்த உறவு பரஸ்பர நம்பிக்கை, மரியாதை அடிப்படையில் இருந்தது. ஒருவர் மற்றொருவரின் பொறுப்புகளையும் கடமைகளையும் நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

‘‘தகவலுக்காக நான் விடுத்த வேண்டுகோள்களும் தான் கேட்ட கேள்விகளும் மிக முக்கியமானவையாக எடுத்துக் கொள்ளப்பட்டன. என்னுடைய பணியை முறையாக, சுதந்திரமாக நான் நிறைவேற்ற எப்போதுமே என்னால் முடிந்தது,’’ என்றும் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.

சிங்கப்பூரர்களை ஐக்கியப்படுத்தும் தம்முடைய பணி பற்றி கருத்து கூறிய அவர், கருணைமிக்க, பரிவுமிக்க சமூகத்தை உருவாக்க தான் பாடுபட்டதாகத் தெரிவித்தார்.

அதிபர் சவால் நிதிக்கு நன்கொடையாளர்கள் நல்ல ஆதரவு அளித்தனர். இதனால் சமூகத்தில் தேவையானவர்களுக்கு உதவி கிடைத்தது.

அதோடு மட்டுமன்றி, பராமரிப்புச் சேவையாற்றுவோர் உள்ளிட்ட வசதி குறைந்தவர்களுக்கு உதவி கிடைத்தது என்றாரவர்.

அதிபராகப் பதவி வகித்த காலத்தில் திருவாட்டி ஹலிமா 1,400க்கும் மேற்பட்ட சமூக நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து இருக்கிறார்.

இஸ்தானாவை அவர் பலரும் எட்டக்கூடிய ஓரிடமாக ஆக்கினார். திருவாட்டி ஹலிமா பதவி காலத்தில் இஸ்தானா தோட்டங்கள் மேம்படுத்தப்பட்ன.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்கு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. உடற்குறையாளர்கள், மனநலப் பிரச்சினையை எதிர்நோக்குவோர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களையும் தான் எட்டியதாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுகளில் தம்முடன் சேர்ந்து செயல்பட்டு தமக்கு ஆதரவு அளித்து சமூகத்தில் வசதி குறைந்தவர்கள் மேம்பட உதவிய பல சமூகச் சேவை அமைப்புகள், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் அதிபர் ஆலோசனை மன்றத்திற்கும் திருவாட்டி ஹலிமா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சிங்கப்பூரின் தலைசிறந்த அரசதந்திரி என்ற முறையில் 21 வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டார். அவற்றில் 12 பயணங்கள் அரசு முறை பயணங்களாகும்.

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற முறையில் மாதர்களையும் இளம் பெண்களையும் ஊக்குவிக்க தனக்கு ஒரு தனிச்சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் திருவாட்டி ஹலிமா கூறினார்.

அதிபராகத் தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு அளித்து ஊக்குவித்த தன்னுடைய கணவருக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் திருவாட்டி ஹலிமா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சிங்கப்பூர் மக்களிடம் பேசிய அவர், ‘‘நீங்கள் அதிபர் என்ற முறையில் என் மீது வைத்த நம்பிக்கை எனக்குப் பெருமை அளிக்கிறது. உங்கள் குரலாக உங்களுடைய அக்கறை, கவலைகளுக்குச் செவிமடுத்து உங்கள் சார்பில் ஓய்வின்றி பாடுபட எனக்கு கிடைத்த வாய்ப்பாக அதிபர் பதவி அமைந்தது,’’ என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!