தொழில்நுட்ப ஆற்றல், சிறப்பு அம்சங்களுடன் 2030க்குள் கிழக்கில் புதிய மருத்துவமனை வளாகம்

ஏறத்தாழ 1,400 படுக்கைகளைக் கொண்ட புதிய மருத்துவமனை வளாகம் 2030ஆம் ஆண்டுக்குள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை வளாகம் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும்.

பிடோக் நார்த் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் கட்டப்படும் இந்த மருத்துவமனை வளாகத்தில் ஈஸ்டர்ன் பொது மருத்துவமனை, ஈஸ்டர்ன் சமூக மருத்துவமனை ஆகியவை இயங்கும்.

மருத்துவமனை வளாகம் இஜிஎச் வளாகம் என அழைக்கப்படும் என்றும் அது 2029, 2030ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை வளாகத்தை சிங்ஹெல்த் குழுமம் ஏற்று நடத்தும்.

அவசரகால சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளி மற்றும் வெளிநோயாளிப் பிரிவுகள் உட்பட முழுமையான மருத்துவ வசதிகளைப் புதிய இஜிஎச் வளாகம் கொண்டிருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளிகள் தங்கி குணமடைவதற்கான சேவைகளை ஈஸ்டர்ன் சமூக மருத்துவமனை வழங்கும். அதுமட்டுமல்லாது, அந்திமகாலச் சேவை, நினைவிழப்பு நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவை போன்ற சிறப்புத் திட்டங்களையும் அது வழங்கும்.

மருத்துவமனை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஏப்ரல் 20ஆம் தேதி பிடோக் நார்த் வட்டாரத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங், இஜிஎச் வளாகம் புதிய, தனித்தன்மைவாய்ந்த அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறினார்.

அதின் சிறப்பு அம்சங்கள் மற்ற பொது மருத்துவமனைகளிலிருந்து வேறுபடும் என்றார் அவர்.

இதுதொடர்பான விவரங்கள் ஏப்ரல் 20ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.

கொவிட்-19 நெருக்கடிநிலை போன்ற கிருமித்தொற்று தொடர்பான நெருக்கடிநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தேவையான கூடுதல் ஆற்றல் உள்ள மருத்துவமனையாகப் புதிய இஜிஎச் வளாகம் திகழும் என்று தெரிவிக்கப்பட்டது.

“கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இஜிஎச் வளாகத்துக்கான திட்டமிடுதல், வடிவமைப்புப் பணிகள் நடைபெற்றன. தேவை ஏற்பட்டால் வார்டுகளை உடனடியாக நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கான அறைகளாக மாற்றக்கூடிய அளவுக்கு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் படுக்கைகளை வார்டுகளில் சேர்க்கவும் முடியும்,” என்றார் அமைச்சர் ஓங்.

நெருக்கடிநிலை ஏற்பட்டால் புதிய பணி ஏற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் மருத்துவர்கள், தாதியர் வேலை செய்யும் இடங்களையும் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம் என்றும் அதற்காக கட்டட உள்கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் தேவை ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதிய இஜிஎச் வளாகம், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். காணொளி மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க இஜிஎச் வளாக மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

மருத்துவமனைக் கட்டடம் திறக்கப்படுவதற்கு முன்பே நோயாளிகளுக்குத் தனது சேவைகளை வழங்கும் ஆற்றலைக் கொண்ட முதல் பொது மருத்துவமனையாக இஜிஎச் வளாகம் திகழும் என்று தெரிவிக்கப்பட்டது.

காணொளி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குதல், மின்னிலக்கத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாகும்.

2026ஆம் ஆண்டு வாக்கில் மெய்நிகர் வார்டுகளை இயக்க புதிய மருத்துவமனை இலக்கு கொண்டுள்ளது.

மருத்துவமனைக் கட்டடம் திறக்கப்படும் வரை இஜிஎச் மருத்துவமனை சாங்கி பொது மருத்துவமனையிலிருந்து இயங்கும்.

இதற்கிடையே, சாங்கி பொது மருத்துவமனை எதிர்கொள்ளும் படுக்கைப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையில் சிகிச்சை பெற்ற பிறகு நோயாளிகள் தங்கி குணமடைய ஏதுவாக 200 படுக்கைகளைக் கொண்ட கட்டடம் அப்பர் சாங்கி சாலையில் கட்டப்படும் என்றும் அது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!