வினாக்களை சுமக்கும் நினைவகம்

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான 2019 அக்டோபர் இரண்டாம் தேதி ரேஸ் கோர்ஸ் லேனிலுள்ள காந்தி மண்டபத்துக்குச் சென்ற 76 வயது திரு சபாபதிக்கு பெரும் ஏமாற்றம்.

காந்தியின் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் சென்ற அவரை மூடப்பட்டிருந்த கதவுகள் வரவேற்றன.

“காந்தி என்றாலே லிட்டில் இந்தியாவில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நினைவு மண்டபம்தான் நினைவுக்கு வரும். முன்னர் இங்கு காந்தியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அவரது 150வது பிறந்த நாளின்போது அவரது நினைவில் கட்டப்பட்ட இடம் பூட்டப்பட்டிருந்தது எனக்கு பெரும் சோகமாகவும் நெருடலாகவும் இருந்தது,” என்றார் காந்தியவாதி என தம்மை அறிமுகப்படுத்திய திரு சபாபதி.

நினைவு மண்டபம் மூடப்பட்டு இருப்பது தம்மைப் போல பலருக்கும் வருத்தமாகவும் கேள்விக்குறியாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவின் தந்தை எனக் கொண்டாடப்படும் மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட சோக நிகழ்வைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் நினைவகங்களில் ஒன்று இது.

எண் 3, ரேஸ் கோர்ஸ் லேனில் ஏறக்குறைய 510 சதுர மீட்டர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி நினைவு மண்டபம். செங்கல்லால் நவீன பாணியில் கட்டப்பட்ட இந்த நினைவு மண்டபத்தில் வெளிச்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கைத்தடியைப் பிடித்தபடி நடக்கும் காந்தியின் உருவம் கட்டடத்துக்கு தனி அழகூட்டும்.

தூணில் நிறுவப்பட்டிருக்கும் வெண்கலத்தால் ஆன காந்தியின் மார்பளவு சிலை உள்ளே நுழைவோரை அன்புடன் வரவேற்கும்.

வகுப்பறைகள், விழா மண்டபம், நூலகம் முதலியவற்றுடன் லிட்டில் இந்தியாவின் வரலாற்றுக்கும் மக்களின் நினைவுகளுக்கும் சிறப்புச் சேர்க்கும் இந்த மண்டபம் 67 ஆண்டுகள் பழமையானது.

ராஜபாலி ஜுமாபாய் தலைமையில் உருவான நினைவகம்

காந்தி மறைந்த மறுநாளே அவருக்கு இங்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த சிங்கப்பூர் இந்திய சமூகம், அதற்கான செயற்குழுவையும் அமைத்தது.

அமரர் ராஜபாலி ஜுமாபாய் தலைமையிலான அச்செயற்குழு முன்னின்று நிதி திரட்ட, ரேஸ் கோர்ஸ் லேனில் நிலம் வாங்கியது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு 1950ல் நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டினார். மூன்றாண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இரு மாடிக் கட்டடம் 1953ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

மண்டபம் திறக்கப்பட்ட ஓராண்டில், 1954ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகள் நடைபெற்ற காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூ, முன்னாள் கலாசார அமைச்சர் அமரர் எஸ்.ராஜரத்னம், அன்றைய மலாயா பல்கலைக் கழக இணை வேந்தர் சிட்னி கெய்ன் என பல தலைவர்கள் பங்கேற்று பொது மக்களுக்கு உரையாற்றியுள்ளனர்.

பெயர்பெற்ற கல்யாண மண்டபம்

ஆரம்ப காலத்தில் இந்திய சமூக நிகழ்ச்சிகள், திருமணம், காதுகுத்து, சடங்கு போன்ற குடும்ப விழாக்கள், இலக்கிய கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளுக்கான பொது இடமாக காந்தி மண்டபம் விளங்கியது.

“நண்பர்கள், உறவினர்களின் திருமணங்களுக்கு நான் அங்கு போயிருக்கிறேன். அப்போது அது முக்கியமான சமூக இடம்,” என்றார் 79 வயது திரு நடராஜன்.

“அப்போதெல்லாம் குடும்பத்தில் நல்ல காரியம் என்றால் இந்தியர்கள் முதலில் காந்தி மண்டபத்தைத்தான் தேர்வு செய்வார்கள். அந்தக் காலத்தில் இப்போதுபோல் பெரிய மண்டபங்களோ வளாகங்களோ இருந்ததில்லை,” என்றார் அவர்.

“1970களில் அசைவ சாப்பாட்டுக் கல்யாணம் என்றால் காந்தி மண்டபம் அல்லது கல்சாதான். அங்கே கல்யாணம் என்றாலே கொண்டாட்டமாக இருக்கும். பெரிய நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அங்கேதான் நடக்கும்,” என்று நினைவுகூர்ந்தார் திரு சரவணன்.

1980களில் வேறு பல மண்டபங்களும் அரங்குகளும் உருவானதால், காந்தி மண்டபத்தின் தேவை குறைந்தது. பிறகு சில காலம் அது புழக்கமின்றி இருந்தது.

சிண்டாவின் முதல் தலைமையகம், இந்தி சங்கம்

‘சிண்டா’ எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போது அதன் முதல் தலைமையகமாக மகாத்மா காந்தி நினைவு மண்டபம் விளங்கியது. 1993ஆம் ஆண்டு சிண்டாவின் குடும்ப சேவைகள் மையம் அங்கு அமைக்கப்பட்டது. சிண்டா தற்போதைய பீட்டி சாலைக்கு 1998ஆம் ஆண்டு இடம் மாறியதும் இந்த நினைவு மண்டபம் செயலிழந்தது.

அதன்பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் மண்டபம் பயன்பாடற்று இருந்ததையடுத்து சிங்கப்பூர் இந்தி சங்கம் அந்த இடத்தை அறங்காவலர் குழுவிடமிருந்து 2008ல் குத்தகைக்கு எடுத்தது.

“பயன்பாடின்றி இருந்ததால் இந்தி சங்கத்திற்கு (சிங்கப்பூர்) மண்டபம் குத்தகைக்கு விடப்பட்டது. சங்கம் ஒரு மில்லியன் வெள்ளி செலவில் கட்டடத்தைச் சீர்படுத்தியது,” என்றார் காந்தி நினைவு மண்டபத்தை தற்போது நிர்வகித்து வரும் அறங்காவலர் குழுவின் தலைவராக இந்தி சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஸ்ரீநிவாஸ் ராய். திரு கர்தார் சிங் தக்ரால், திரு கன்ஷியாம், திரு பெரியசாமி உத்தா ராம், திரு சித்தவாலா ஹைதர் முகமதலி, திரு தீபக் கண்டிலால் ஜம்னதாஸ் ஷா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

சீரமைப்புப் பணிகள் நடந்த காலத்தில், 2010ல் காந்தி நினைவு மண்டபத்துக்குப் பழமைப் பாதுகாப்பு தகுதி வழங்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட கட்டடம் 2011 ஜனவரி மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.

தொடர்ந்து 10 ஆண்டுகள் அங்கே செயல்பட்ட இந்தி சங்கத்தின் தலைமையகம் 2019 செப்டம்பர் 12ஆம் தேதி தை செங் பாயிண்டில் உள்ள புதிய வளாகத்துக்கு மாறியது. அதன்பின் நான்கு மாதங்களாக மண்டபம் பயன்பாடற்று மூடப்பட்டு கிடக்கிறது.

நினைவு மண்டபமும் அது அமைந்திருக்கும் நிலமும் அரசாங்கத்திற்குச் சொந்தமானதல்ல என்பது திட்டவட்டமாக உள்ளது. தனியார் நிலத்தில் அது உள்ளதாக அதிகாரத்துவப் படிவங்கள் மூலம் அறியப்படுகிறது. இந்த நினை வகத்தின் எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மரபுடைமைச் சின்னமாக மக்கள் பயன்பாட்டிடமாக...

“20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் மகாத்மா காந்தி. காந்தியின் பங்களிப்பை வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நமது மூதாதையர்கள் இந்த நினைவு மண்டபத்தைக் கட்டியுள்ளனர். அதன் வரலாற்றுச் சிறப்பு நிலைத்திருக்க வேண்டும்,” எனக் கூறிய திரு ராஜபாலியின் மகனான 94 வயது திரு அமீரலி ஜுமாபாய், வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விடம் மரபுடைமைச் சின்னமாக்கப்பட்டால் நல்லது,” என்றார்

“அங்குள்ள நூலகம் அனைத்து மக்களும் பயன்படுத்தக் கூடியதாக்கப்பட வேண்டும்,” என்று அவர் பரிந்துரைத்தார்.

“இந்திய சமூகம் பெருமைப்படக்கூடிய சிறப்பான நினைவகம் இந்த மண்டபம். இது மக்களுக்கு பயன்பட வேண்டும். இந்திய மரபுடைமை நிலையம் மண்டபத்தைப் பயன்படுத்தத் திட்டம் கொண்டுள்ளது,” என்றார் திரு ஸ்ரீநிவாஸ் ராய்.

“இந்தியர்களில் தமிழர்கள், மலையாளி, ஆந்திரா, கர்னாடகா, குஜராத்தி என பல பிரிவினர் உள்ளனர். சிங்கப்பூரில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒன்றுகூடி நல்லிணக்கம் பேணும் இடமாக அந்த இடம் விளங்க வேண்டும்,” என்ற கருத்தை முன்வைத்தார் டிஆர்சி பன்னோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திரு ஆர்.கலைச்செல்வன்.

“பழமைப் பாதுகாப்பு இடமான அதன் முகப்பை பாதுகாத்து, கட்டடத்தின் பின் பகுதியை ஐந்து, ஆறு மாடி பெரிய கட்டடமாகக் கட்டலாம். பல பயன் மண்டபமாக அது பயனளிக்கும்,” என்றார் அவர்.

சமூக அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு இது பொருத்தமான இடம் என்பது இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த ராஜசேகரின் கருத்து.

“இந்திய சமூக அமைப்புகள் பலவற்றுக்கு அலுவலகம் இல்லை. இந்த இடம் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும்,” என்றார் அவர்.

நினைவகத்தைச் செயல்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் சமூகத்தின் குரலை பிரதிபலிப்பவர்களில் ஒருவரான வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவரும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் முன்னாள் தலைவருமான திரு நசீர் கனி, இந்த இடத்திற்குத் தேவை அதிகம் உள்ளது என்றார்.

“அரசாங்கமோ அரசாங்க நிறுவனங்களோ அந்த இடத்தைப் பயன்படுத்தாதபோது, ஆர்வமுள்ள அமைப்புகள் அறங்காவலர் குழுவினரிடம் கேட்கலாம்,” என்றார் அவர்.

அலிவால் ஆர்ட்ஸ் சென்டர் போல் காந்தி நினைவு மண்டபத்தை இந்தியர்களின் கலை மையமாக்க வேண்டும் என்பது பிரபல கலைஞரும் வழக்கறிஞருமான திரு வடிவழகனின் விருப்பம். சிண்டா அங்கு செயல்பட்டபோது, அங்கு ரவீந்திரன் நாடகக் குழு நாடகப் பயிற்சிகள் மேற்கொண்டதையும் நாடகம் போட்டதையும் நினைவுகூர்ந்த திரு வடிவழகன், உள்ளரங்க நிகழ்ச்சிகளுடன் வெளிப்புற கலை நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமான இடம் அது என்றார்.

தமிழ்ச் சமூக அமைப்புகள் ஒன்றுசேர்ந்து நினைவு மண்டபத்தை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்த சமூக ஊடகத்தில் கோரிக்கை விடுத்து வருகிறார் 64 வயது சமூக ஆர்வலர் திரு தமிழ்மறையான்.

“சமூகத்தின் பங்களிப்பில் நிறுவப்பட்ட இந்த நினைவகம் சமூகத்தின் தேவைக்கு அது பயன்படுவது சிறப்பு,” என்றார் அவர்.

---

1950ல் நேரு காந்தி மண்டபத்திற்கு நேரு அடிக்கல் நாட்டினார்

அமரர் திரு ராஜபாலி ஜுமாபாய்

திரு வி. பக்கிரிசாமி, திரு பொ.கோவிந்தசாமி பிள்ளை

காந்தி நினைவு நிதியாக $117,390க்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது.

1950ஆம் ஆண்டு மே மாதம் ரேஸ் கோர்ஸ் லேனில் 7,325 சதுர அடி நிலம் $32,000க்கு வாங்கப்பட்டது.

முதலில் இரண்டு கட்டடங்கள் தீர்மானிக்கப் பட்டது. ஒன்றில் நூலகம், மண்டபம், அலுவலக அறைகளும் அமைப்பதாகவும் மற்ற கட்டடத்தை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தை அறப்பணிகளுக்குப் பயன்படுத்துவதாகவும் திட்டமிடப்பட்டது.

$107,000 செலவில் தற்போதுள்ள இரண்டு மாடிக் கட்டடம் 1953ல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்திய சமூகத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான திரு வி. பக்கிரிசாமி, திரு பொ.கோவிந்தசாமி பிள்ளை ஆகியோரும் காந்தி நினைவு மண்டபம் உருவாக முக்கிய பங்காற்றியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!