85வது ஆண்டில் தமிழ் முரசு

6.7.1935 சனிக்கிழமை, தமிழர் சீர்திருத்தச் சங்க இல்லத்தில் (கிள்ளான் ரோடு) முரசின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. சீர்திருத்தச் சங்க செயலாளர் கோ. சாரங்கபாணி ஆசிரியர். இதழின் விலை ஒரு காசு.

1935 ஆகஸ்ட் மாதத்திலேயே சிங்கப்பூரில் 1,500 பிரதிகளும் மலேசியாவில் 500 பிரதிகளும் விற்றன. வார இதழாகத் தொடங்கப்பட்ட முரசு மூன்று மாதங்களிலேயே வாரம் மூன்று முறை வெளிவரத் தொடங்கியது.

சில வாரங்களிலேயே சங்கம் செய்தித்தாளைக் கைவிட, கோ.சாரங்கபாணி பத்திரிகையை நடத்தத் தொடங்கினார்.

2.5.1936 முதல் பெரிய அளவில் எட்டுப் பக்கங்களுடன் மூன்று காசு விலையில் வெளிவந்தது.

1.12.1937ல் தமிழ் முரசு நாளிதழாகியது.

மாணவர்களுக்காக மாணவர் மணி மன்றம் 1952ல் முரசின் தனிப் பக்கமாகவும் பின் 1953 ஜூலையில் மாணவர் மணி மன்ற மலராகவும் வெளிவந்தன.

16.3.1974 அன்று சாரங்கபாணி காலமானார். தொடர்ந்து சீனரான திருமதி சாரங்கபாணியும் அவர் மறைவுக்குப் பின் அவரது புதல்வர்கள் திரு ஜெயராம், திரு பலராம் ஆகியோர் 19 ஆண்டுகள் செய்தித்தாளை நடத்தினர்.

1974-1988 வரை கோசாவின் இரண்டாவது மகன் அமரர் ஜெயராம் தமிழ் முரசின் ஆசிரியராக இருந்தார்.

1981ல் தமிழ் முரசு பிரதி 35 காசாகவும் 1983ல் 40 காசாக வும் உயர்த்தப்பட்டது.

1988 டிசம்பரில் அமரர் வை.திருநாவுக்கரசு முரசின் ஆசிரியராகப் பணியேற்றார்.

2.5.1991ல் எழுத்துகளை ஒவ்வொன்றாகக் கோக்கும் பழைய முறையிலிருந்து கணினி பதிப்புக்கு மாறியது.

6.7.1991ல் விலை 50 காசானது.

7.10.1991ல் விநியோகப் பொறுப்பை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் ஏற்றது.

1.9.1993 தமிழ் முரசு ஹிப்ரோ பிரிண்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையானது. சாரங்கபாணியின் மகள் ராஜம் சாரங்கபாணி பெரும்பான்மைப் பங்குதாரராக இருந்தார்.

01.10.1995ல் தமிழ் முரசை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் வாங்கியது.

5.5.1995 தமிழ் முரசின் ஞாயிறு பிரதி 60 காசாக உயர்ந்தது. அதுவரை எல்லா நாட்களும் முரசின் விலை ஒன்றாகவே இருந்தது.

2.11.1995 முதல் எஸ்பிஎச்சின் பத்திரிகையாக தமிழ் முரசு வெளிவந்து கொண்டிருக்கிறது.

1999ல் டாக்டர் சித்ரா ராஜாராம் முரசின் ஆசிரியரானார்.

அவரை அடுத்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் மூத்த செய்தியாளரான முருகையன் நிர்மலா 2005ல் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

2011ல் திரு ராஜேந்திரன் ஜவஹரிலால், தமிழ் முரசின் ஆசிரியரானார்.

01.03.2016ல் தமிழ் முரசு 60 காசாகவும் ஞாயிறு பிரதி 70 காசாகவும் உயர்ந்தது.