மதியிறுக்கம் கண்டு மனந்தளர வேண்டாம்

ஆ. விஷ்ணு வர்தினி

ஹர்ஷிதா பாலாஜி

தெளிவாக வகைப்படுத்த இயலாததொரு வளர்ச்சிக் குறைபாடான மதியிறுக்கம் (ஆட்டிசம்), ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசாமல் இருப்பது, காரணம் இல்லாமல் அழுவது அல்லது அடம்பிடிப்பது முதலிய குணங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் கண்டறியப்படுகிறது. ஆனாலும், மதியிறுக்கம் ஒரு குறைபாடல்ல, அதிலும் நிறைவான வாழ்க்கை இருக்கின்றது என்பதைக் கண்டும் கேட்டும் அறிந்து வந்தது தமிழ் முரசு.

பற்றுக்கோடாக விளங்கும் படகோட்டம்

பிறந்த சில ஆண்டுகளிலேயே மதியிறுக்க பாதிப்பு கண்டறியப்பட்ட மகன் அஷ்­வி­னுக்­குப் பிடி­மா­னம் இல்­லா­தது­போல் உணர்ந்­தார் திரு சீர்­னாளி கணேசராவ் சேஷாச்சலா, 50. இரு­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக அஷ்­வி­னைப் பரா­ம­ரித்து வரும் தாமும் தம் மனை­வி­யும் வாழ்க்­கைப் பாதை­யில் வெறு­மனே மிதந்­து­கொண்­டி­ருந்­த­தாய்க் குறிப்­பிட்­டார்.

ஒரே மக­னான அஷ்­வி­னுக்­குத் தூண்­டு­கோ­லாக, மனத்­திற்கு மருந்­தாக விளங்­க­வேண்டி 'டிரா­கன்' பட­கோட்­டும் பொழு­து­போக்­கில் இணைந்­த­னர் தந்­தை­யும் மக­னும். மாற்­றுத் திற­னா­ளி­களும் பங்­கேற்­கும் வண்­ணம் மக்­கள் கழ­கம் வழங்­கும் விளை­யாட்­டுப் பொழு­து­போக்­கு­களில் இது­வும் ஒன்­றா­கும்.

இது தங்­க­ளது வாழ்­வில் மீண்­டும் நம்­பிக்­கையை ஒளிர வைத்­து இருப்பதாக நெகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார் திரு சீர்­னாளி.

"டிரா­கன் பட­கோட்­டு­வது கடி­ன­மான விளை­யாட்­டுத்­தான். குழு ஒற்­று­மையே வெற்­றி­யை­யும் தோல்வி­யை­யும் முடி­வு­செய்­யும். அஷ்­வி­னுக்­கும் பெற்­றோ­ரான எங்­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும் நல்ல சமூ­கத்தை இப்­பொ­ழு­து­போக்கு எங்­க­ளுக்­குத் தந்­துள்­ளது ஒரு வரமே. அஷ்­வின் தனது பட­குக் குழு­வி­ன­ருடனும் பயிற்­று­விப்­பா­ளர்­களுடனும் நன்கு பழ­கு­வது மகிழ்ச்சி அளிக்­கின்­றது," என்­றார் இவர்.

வழி­மு­றை­க­ளைக் கேட்­டுச் செயல்­ப­டு­வது வளர்ச்­சி­யில் முக்­கி­ய­மா­ன­தொரு திறன். அத்­தி­ற­னா­னது நேர­டி­யாக, அனு­ப­வக்­கல்வி­யின் மூலம் மேம்­ப­டு­வ­தா­கும். அவ்­வ­கை­யில், மகன் அஷ்­வி­னின் வளர்ச்­சிக்­கும் மகிழ்ச்­சிக்­கும் டிரா­கன் பட­கோட்­டு­வது பய­னுள்­ள­தாய் இருப்­ப­தாக திரு சீர்­னாளி குறிப்­பிட்­டார்.

"ஒரு தந்­தை­யாக, இப்­ப­ய­ணம் எளி­தா­ன­தாக இருக்கவில்லை. அஷ்­வி­னைக் கரை­சேர்ப்­பதே இத்­தனை ஆண்­டு­க­ளாக எனது முதன்­மை­யான குறிக்­கோ­ளாய் இருந்­துள்­ளது. இத்­த­கைய தளங்­க­ளின் மூலம், மதி­யி­றுக்­கப் பிள்­ளை­கள் குறித்த விழிப்­பு­ணர்வு இல்­லாத எனக்கு, அஷ்­வி­னு­டன் நேர­டி­யா­கப் பழகி மகி­ழும் நல்ல வாய்ப்­பும் கிட்டி­யுள்­ளது," என்­றார் தந்தை திரு சீர்­னாளி.

வெளித்­தோற்­றத்­தில் இயல்­பாகக் காணப்­படும் அஷ்­வின், இயல்­பிற்கு மாறாக நடந்­து­கொண்­ட­போது பொது­மக்­கள் பலர் அவரைக் கேலி செய்­ததை திரு சீர்னாளி நினை­வு­கூர்ந்­தார்.

அச்­ச­ம­யங்­களில் எல்­லாம் அவர் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் சென்று விளக்­கம் கூறி மன்­னிப்பு கேட்க முற்­படு­வார்.

கடந்த மார்ச் 26ஆம் தேதி அன்று நடந்­தே­றிய டிரா­கன் படகு செஞ்­சுரி போட்­டி­யில் முதன்­மு­றை­யா­கக் கலந்­து­கொண்ட 23 வயது அஷ்­வி­னுக்கு இது ஒரு மைல்­கல் எனப் பெரு­மை­யு­டன் பகிர்ந்­து­கொண்­டார் திரு சீர்­னாளி.

'புண்படுத்தாதீர்கள், புரிந்துகொள்ளுங்கள்!'

காலை ஒன்­பது மணி­யி­லி­ருந்து மாலை ஐந்து மணி வரை ஒரே இடத்­தில் அமர்ந்து, சுகா­தார அமைச்­சின் நிர்­வா­கப் பிரி­வில் வேலை பார்த்து சோர்­வ­டைந்த திரு சாரா­ய­ணன் மாரி­யப்­பன், 50, 1999ஆம் ஆண்­டில் தமது 28வது வய­தில் வேலை மாற முடி­வெ­டுத்­தார். அப்­போது, இவ­ருக்கு செய்­தித்­தாள் விளம்­ப­ரம் ஒன்­றின் வழி­யாக 'ஆட்­டி­சம் அசோ­சி­யே­ஷ­னில்' வேலை வாய்ப்பு இருப்­ப­தைப் பற்­றித் தெரி­ய­வந்­தது.

அது­வரை மதி­யி­றுக்­கத்­தைப் பற்றி இவர் கேள்­விப்­பட்டதில்லை. இருப்­பி­னும், 'என்­ன­தான் என்று பார்க்­க­லாமே' என்ற நம்­பிக்­கை­யுடன் விண்­ணப்­பம் செய்து, வேலை­யில் சேர்ந்­தார்.

தொடக்­கத்­தில் மதி­யி­றுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட இளை­யர்­களுக்­கான பயிற்­று­விப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த திரு சாரா­ய­ணன், பிறகு 2010ஆம் ஆண்­டில் பெரி­ய­வர்­க­ளுக்­காக திறக்­கப்­பட்­டி­ருந்த புதிய நிலை­யத்­தில் சேர்ந்­தார்.

"அது­வரை மதி­யி­றுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட, 18 வய­திற்கு மேற்­பட்ட பெரி­ய­வர்­க­ளுக்கு உதவி வழங்­கிய நிலை­யங்­களும் நிறு­வனங்­களும் மிகக் குறை­வா­கவே காணப்­பட்­டன. அதனால், அவர்­களுக்கு மேலும் ஆத­ர­வ­ளிக்க பெரி­ய­வர்­க­ளுக்­கான நிலை­யம் தொடங்­கப்­பட்­டது," என்று இவர் நினைவுகூர்ந்தார்.

இருப்­பி­னும், அவர் பல இன்­னல்­க­ளைச் சந்­தித்­தார். மதி­யி­றுக்­கத்­தால் பெரிதும் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரைப் பார்த்­துக்­கொண்ட­போது, ஒரு­முறை அவ­ரது கோபத்தை எப்­ப­டிக் கட்­டுப்­ப­டுத்­து­வது என்று தெரி­யா­மல் இவர் தவித்­தார். அந்த மனிதர் இவரை கடித்­துக் கீறி­னார்.

"அதன்பிறகு நான் தொடர்ந்து இந்த வேலையை செய்ய வேண்­டுமா? வேறு ஏதா­வது வேலையை செய்­ய­லாமா? போன்ற கேள்­வி­கள் என் மனத்­தில் எழுந்­தன. ஆனால், என்­னு­டன் பணி­பு­ரிந்த சக ஊழி­யர்­கள் எனக்கு ஆறு­தல் அளித்­த­னர், இன்­னும் எப்­படி எனது திறன்­களை நான் மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்று அறி­வுரை வழங்­கி­னர்," என்­றார் திரு சாரா­ய­ணன்.

22 ஆண்­டு­க­ளுக்­கு­முன் வேலைக்­குச் சேர்ந்­த­போது பல­ருக்­கும் மதி­யி­றுக்­கம் பற்றித் தெரியவில்லை என்­றும் இப்­போது பல­ருக்கும் அதைப் பற்­றிய விழிப்­பு­ணர்வு இருப்­ப­தால் புரிந்­து­ணர்­வு­டன் நடந்­து­கொள்­வ­தைப் பார்த்­துள்ளேன் என்­றும் இவர் கூறி­னார்.

மேலும், மதியிறுக்கத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­களும் நண்­பர்­களும் அதி­க­மாக இதைப் பற்­றித் தங்­கள் நண்­பர்­களு­ட­னும் தெரிந்­த­வர்­க­ளு­ட­னும் வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வ­தால் அதனைப் பற்­றிய சரி­யான புரிந்­து­ணர்வு வளர்­கின்­றது என்­றும் இவர் குறிப்பிட்டார்.

"ஆனாலும், சிலர் மதி­யி­றுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்டுள்ளோரை மன­ந­லம் குன்­றி­ய­வர்­கள் என்று சொல்­வ­தைக் கேட்­டி­ருக்­கி­றேன். இது­போன்று அவர்­க­ளைப் புண்­படுத்­தும் வகை­யில் பேசு­வதை நிறுத்­திக்­கொள்ள வேண்­டும்," என்கிறார் திரு சாரா­ய­ணன்.

அச்சம் போக்கவும் அரவணைக்கவும் உதவும் சக்தி

தனக்கு என்ன வேண்­டும் என்­பதைத் தெளி­வா­கக் கூற முடி­யா­மல் தவித்­த­போ­தும் சத்­த­மான இடங்­க­ளுக்குச் சென்­ற­போது அள­விற்கதி­க­மாக அடம்­பிடித்து அழு­த­போ­தும் தன் மூன்று வயது மக­ளுக்கு என்ன பிரச்சினை என்று 31 வய­து திரு­வாட்டி சக்தி தர்­ஷ­னால் (உள்படம்) சரி­யா­கக் கணிக்­க­ முடி­ய­வில்லை.

அப்­போது, தன் மக­ளால் சரி­யா­கப் பேச­மு­டி­ய­வில்லை என்று குழந்­தை­க­ளுக்­கான வளர்ச்­சித் தேர்­வில் கண்­ட­றி­யப்­பட்­ட­போது அவ­ளுக்கு ஒரு­வேளை மதி­யி­றுக்­கம் இருக்­குமோ என்ற ஐயம் திரு­வாட்டி சக்­திக்கு ஏற்­பட்­டது. விரை­வில் அந்த ஐயத்தை மருத்­து­வர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

தொடக்­கத்­தில் தன் மக­ளுக்கு இப்­படி ஒரு பிரச்­சினை இருக்­கின்­றது என்­பதை ஏற்­றுக்­கொள்ளச் சிர­மப்­பட்ட இவர், பிறகு தனது கண்­ணோட்­டத்தை மாற்­றிக்­கொண்­டார்.

மதி­யி­றுக்­கத்­தைப் பற்றி மேலும் தெரிந்­து­கொள்ள புத்­த­கங்­க­ளை­யும் ஆய்­வு­களையும் புரட்­டிப்­பார்த்தார். சமூக ஊட­கங்­களில் மதி­யி­றுக்­கத்­தைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் செயல்­படும் சிலர், மதி­யிறுக்­கம் தொடர்­பான தங்­கள் சொந்த அனு­ப­வங்­க­ளைப் பதி­விடு­வதையும் இவர் கவ­னித்­தார். அப்­பக்­கங்­க­ளி­லி­ருந்து மதி­யி­றுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரின் அன்­றாட வாழ்க்கை, நட­வ­டிக்­கை­கள் போன்­றவை எப்­படி இருக்­கும் என்­பதை இவர் கற்­றுக்­கொள்­ளத் தொடங்­கி­னார்.

2020ஆம் ஆண்­டில் கொவிட்-19 பர­வலை தடுக்க முடக்­க­நிலை நடைமுறைக்கு வந்தபின் ஒரு­வருக்கு மதி­யி­றுக்­கம் தொடர்­பான சிகிச்­சை­யும் உத­வி­யும் கிடைப்­பது தாம­த­மா­னதை திரு­வாட்டி சக்தி கவ­னித்­தார். ஆகை­யால், புதி­தாக மதி­யி­றுக்­கம் இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்ட பிள்­ளை­க­ளின் பெற்­றோ­ருக்கு உத­வும்­வண்­ணம் தமது சொந்த அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து­கொள்ள, இன்ஸ்­ட­கி­ராம் சமூக ஊட­கத்­தில் 'அன்­பு­டன் ஆட்­டி­சம்' என்ற பக்­கத்தை அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தில் இவர் தொடங்­கி­னார்.

"மதி­யி­றுக்­கம் பற்றி வெளிப்­படை­யா­கப் பேசி­னால்­தான் பெற்­றோர்­க­ளி­டம் அச்­சம் குறைந்து, தேவை­யான உத­வி­யும் ஆத­ர­வும் கிடைக்­கும்.

"குறிப்­பாக, தமி­ழில் மதி­யி­றுக்­கம் பற்­றிய வலைப்­ப­தி­வு­களை நான் பார்த்­த­தில்லை என்­பதால் ஆங்­கி­லத்­து­டன் தமி­ழி­லும் பதிவிடத் தொடங்­கி­னேன்," என்று திரு­வாட்டி சக்தி விளக்­கி­னார்.

தற்­போது 800க்கும் மேற்­பட்­ட­வர்­கள் திரு­வாட்டி சக்­தி­யின் பதிவு­க­ளைப் படித்து, பயன்­பெற்று வரு­கின்­றார்­கள். பெற்­றோர்­க­ளு­டன் பல கல்­வி­யா­ளர்­களும் நண்­பர்­களும் மதி­யி­றுக்­கத்தைப் பற்­றிக் கற்­றுக்­கொண்டு, அது தொடர்­பான தங்­களது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள முன்­வந்­துள்­ள­தா­க­வும் இவர் குறிப்­பிட்­டார்.

"குறிப்­பாக, சிறப்­புத் தேவை­கள் உள்­ள­வர்­க­ளுக்­கான உத­வித் திட்­டங்­கள் நடப்­பிலிருக்க வேண்­டும், அவ்­வு­த­வித் திட்­டங்­களை வழக்­க­மா­ன­வை­யாக மாற்­ற­வேண்­டும்," என்கிறார் திரு­வாட்டி சக்தி.

'அவர்களை அவர்களாகவே பாருங்கள்!'

மாண­வர் ஒரு­வர் விட்ட குத்­தால் தமது மூக்­கி­லி­ருந்து ரத்­தம் கசிந்­த­போ­தும், திரு­வாட்டி ரா. விக்­னேஸ்­வரி (படம்) தமது ஆசி­ரி­யப் பணியை வெறுக்­கவோ கைவி­டவோ இல்லை. கடந்த பன்­னி­ரண்டு ஆண்­டு­க­ளாக சிறப்­புத் தேவை மாண­வர்­க­ளுக்­கான ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் 36 வய­தான திருவாட்டி விக்னேஸ்வரி.

சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யில் தமது வாழ்க்­கைத்­தொ­ழில் பய­ணத்­தைத் தொடங்­கிய இவர், மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட பிள்­ளை­க­ளு­டன் உற­வா­டிய சம­யங்­களில் தமது விருப்­பத்­தைக் கண்­ட­றிந்­தார். தேசிய கல்­விக்­க­ழ­கத்­தில் பின்­னர் சிறப்­புக் கல்­வி­யில் பட்­ட­ய­மும் பெற்­றார்.

மதி­யி­றுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளைப் புரிந்­து­கொள்­வது எளி­தன்று. எதிர்­பாரா வகை­யில் அவர்­களது மன­நிலை மாறக்­கூ­டும். இத்­த­கைய சூழ­லி­லும், எத்­து­றையை காட்­டி­லும் இத்­து­றை­யில் அதிக மன­நி­றை­வ­டை­வ­தா­கக் கூறி­னார் திரு­வாட்டி விக்­னேஸ்­வரி.

"சிலர் அவ்­வப்­போது வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­வர். நகத்­தால் கீறு­வது, அடிப்­பது போன்­றவை அவர்­க­ளது இயல்­பான செயல்­பா­டு­கள். மேலும் சிலர் திடீ­ரென கட்டி அணைப்­பர். இவை அனைத்­தை­யுமே நோயா­கக் கரு­தா­மல் அவ­ர­வர் குண­ந­லன்­களா­கக் கருதி, அவர்­களை இயல்­பாக நடத்­தி­னால்­தான் அவர்­களது தேவை­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தற்­கான மனப்­பக்­கு­வம் ஏற்­படும்," என்­றார் இவர்.

சாதா­ரண பள்ளி ஆசி­ரி­யர்­களின் பணி­களை மேற்­கொள்­வதோடு, ஒவ்­வொரு மாண­வ­ரது மன­ந­லப் பரா­ம­ரிப்­பை­யும் ஏனைய மருத்­துவ விஷ­யங்­க­ளை­யும் சிறப்­புத் தேவை ஆசி­ரி­யர்­கள் கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும். கூடு­தல் தேவை­கள் உள்ள மாண­வர்­க­ளுக்கு உதவ, சமூக ஊழி­யர்­கள், பள்ளி மன­நல நிபு­ணர்­கள் ஆகி­யோ­ரு­டன் கலந்­தா­லோ­சித்து பழக்­க­வ­ழக்­கங்­களுக்­கான திட்­டம் வகுப்­ப­தும் அதில் அடங்­கும்.

மேலும், பிள்­ளை­களை எவ்­வாறு கையாள்­வது என்­பது பற்றி மாண­வர்­க­ளின் வீட்­டிற்கே நேரில் சென்று, அவர்­க­ளின் பெற்­றோ­ருக்­கும் கற்­றுத்­தந்­துள்­ள­தா­க திரு­வாட்டி விக்னேஸ்­வரி சொன்னார்.

மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட பிள்­ளை­க­ளைப் பரா­ம­ரிப்­பது குறித்து குடும்­பங்­க­ளு­டன் இவர் அதி­கம் உரை­யா­டி­யுள்ளார்.

"சிறப்­புத் தேவை மாண­வர்­கள் இயல்­பற்­ற­வர்­களோ விசித்­தி­ர­மா­ன­வர்­களோ கிடை­யாது. அவர்­களை அவர்­க­ளா­கவே பார்க்­கும்­போ­து­தான் அவர்­க­ளுக்­கான உத­வியை நாம் வழங்கி, அவர்­க­ளுக்கு நல்ல வாழ்க்­கையை அமைத்­துத் தர­ முடியும்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்த ஆசிரியை.

மதியிறுக்கம் ஒரு நோயல்ல!

பிற மனநலச் சிக்கல்களைக் காட்டிலும் 'ஆட்டிசம்' எனும் மதியிறுக்கமானது உடல், தோற்றம் ரீதியாக வெளிப்படையாகத் தெரியக்கூடியதல்ல. தோற்றத்தில் இயல்பாக இருப்பினும், மதியிறுக்கத்தால் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளைப் பேணுவதில் வேறுபட்ட கண்ணோட்டங்கள் அவசியம் என்கிறார் மூத்த உளவியல் விரிவுரையாளரும் ஆய்வாளருமான முனைவர் திவ்ஜியோத் கோர்.

இயல்பாகத் தோற்றமளிக்கும் பிள்ளைகளின் வித்தியாசமான செயல்பாடுகளைக் கண்டு சமூகத்தினர், தங்களின் வளர்ப்பைக் குறைகூறுவரோ என்று அஞ்சி, பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயங்குகின்றனர். ஆனால், சமூகத்தில் இயங்குவதற்கான வாய்ப்புகளைப் பிறர் ஏற்படுத்தித் தருவதும் குடும்பத்தார் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதும் மிகவும் அவசியம் என்கிறார் முனைவர் திவ்ஜியோத்.

மதியிறுக்கம் என்பது பொதுப்படையான ஒரு நோயாக சிலர் கருதக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாறாக, 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் விரிவான நிரலில் பல நிலைகளில் உள்ள மதியிறுக்கத்தால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர், தொடக்கநிலை, நடுநிலை, தீவிரநிலை மதியிறுக்கம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர். இருப்பினும், மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட எந்த இரு தனிமனிதர்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளும் பராமரிப்பு முறையும் இருப்பதில்லை என்றார் அவர்.

மதியிறுக்கத்தைக் கண்டறியும்போது, சமூகத் தொடர்பு, தொடர்ச்சியான குணவியல் மாற்றங்கள் என இரு முக்கியக் கூறுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. 'ADOS' எனப்படும் மதியிறுக்கம் அறியும் கண்காணிப்பு அட்டவணையைப் பயன்படுத்தியும், பெற்றோருடனான விரிவான நேர்காணலாலும் மதியிறுக்கம் கண்டறியப்படுகின்றது.

சிறுவயதுப் பிள்ளைகளில் மதியிறுக்கம் குறித்த அறிகுறிகளைக் கவனிக்க சிறப்புத் தேவை ஆசிரியர்கள் மட்டுமன்றி, மழலையர், பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுவதாக முனைவர் திவ்ஜியோத் கூறினார்.

இயல்பான பிள்ளைகளுக்கென்றும் சிறப்புத் தேவையுள்ள பிள்ளைகளுக்கு என்றும் தனித்தனியே நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யாமல், எல்லாப் பிள்ளைகளும் ஒரே சூழலில், ஒன்றாக இணைந்து உரையாடுவது அவசியம் என்று தமது எண்ணத்தையும் முனைவர் திவ்ஜியோத் முன்வைத்தார்.

இவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்!

 'ஆட்டிசம்' எனப்படும் மதியிறுக்கம், நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடாகும். இதனை முழுமையாகக் குணப்படுத்த முடியாது.

 சில நேரங்களில், வெறும் 18 மாதங்களிலேயே மதியிறுக்கத்தைக் கண்டறியலாம். ஆயினும், நடை, பேச்சு போன்ற திறன்களை கற்றுக்கொள்ள குழந்தைகள் சிரமப்படுவதைக் கவனித்தால் பெற்றோர்கள் மருத்துவரை நாடும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

 சிங்கப்பூரில் 150 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மதியிறுக்கம் ஏற்படுகின்றது.

 ஐன்ஸ்டைன், டார்வின், நியூட்டன், மொஸார்ட் போன்ற பல மேதைகளுக்கும் மதியிறுக்கம் இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

 பெற்றோரின் நடவடிக்கைகளுக்கும் குழந்தைகளுக்கு மதியிறுக்கம் ஏற்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

 மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், நாய்களைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது நன்மை தரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மதியிறுக்கத்தால் ஏற்படும் கோபத்தைக் குறைத்து, குழந்தைகளை அமைதிப்படுத்த நாய்கள் உதவுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!