இளையர்களின் சமூகத் தொண்டு

ஆ. விஷ்ணு வர்தினி

இளமைப் பருவம் கொண்டாட மட்டுமன்று! வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிப்போருக்கு ஆதரவு அளித்து, கைதூக்கிவிட ஆக்கபூர்வ செயல்களை மேற்கொள்வதற்கான அரும்பருவமும் அதுதான் என்றெண்ணி, சமூகத் தொண்டாற்றிவரும் இளையர் நால்வரை நேர்கண்டு, அவர்களின் அரும்பணிகளையும் அனுபவங்களையும் அறிந்து வந்தது

தமிழ் முரசு.

கப்பல் ஊழியர்களின்

மனநலம் பேணும் மித்திலா

கப்­ப­லில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளின் மன­ந­லத்­தை­யும் உடல்­ந­லத்­தை­யும் காத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்­ப­டுத்­து­ம் முயற்­சி­யில் முழு­நே­ர­மாக ஈடு­பட்­டு வருகிறார் முனை­வர் மித்­திலா மகேஷ் (படம்).

இவ­ரின் முன்­னோர்­கள் கப்­பல் துறை­யில் கிட்­டத்­தட்ட 45 ஆண்டு­கா­லம் பணி­யாற்­றி­ய­வர்­கள். அவர்­கள் மூல­மா­கக் கடல்­துறை ஊழி­யர்­க­ளின் மன­ந­லப் பிரச்­சி­னை­களைக் கண்­டும் கேட்­டும் வளர்ந்­தவர் 30 வயது மித்­திலா.

உள­வி­யல் துறை படிப்பு, பின்­னர் கேம்­பி­ரிட்ஜ் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைப் பணி என்று பத்தாண்­டு­களுக்குப் பின்னர் கொவிட்-19 நோய்ப்­ப­ர­வல் சூழ­லில் சிங்­கப்­பூருக்­குத் திரும்­பி­ய­போது, கப்­பல் துறை ஊழி­யர்­க­ளின் பிரச்­சி­னை­கள் மீண்­டும் இவ­ரது காது­களுக்கு எட்­டின.

கொவிட்-19 சூழ­லால் கப்­பல் துறை ஊழி­யர்­க­ளின் மன­ந­ல பாதிப்பு குறித்த செய்­தி­கள் அதி­கம் வெளியாகின. அச்­ச­ம­யத்­தில், உயிர்­மாய்ப்பு போன்ற எண்­ணங்­களால் பாதிக்­கப்­பட்ட கப்­பல் துறை ஊழி­யர்­களின் எண்ணிக்கை பத்து மடங்­கா­க, அதாவது நான்கு விகி­தத்­தி­லி­ருந்து நாற்­பது விகி­த­மாகக் கூடியிருந்தது. அப்­போது கப்­பல்­துறை ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் எண்­ணம் மித்­தி­லா­வுக்கு ஏற்­பட்­டது. அதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட்­டில் 'டிரான்ஸ்­வோர்ல்ட் வெல்­னஸ்' என்ற சமூக நிறு­வனத்தை இவர் தொடங்­கி­னார்.

"முழு­நேர வேலையை விட்­டு­விட்டு இந்­நி­று­வ­னத்­தைத் தொடங்­கி­ய­போது பல ஐயப்­பா­டு­கள் எழுந்­தன. ஆனால், இச்­சே­வைக்கு ஊழி­யர்­களும் நிறு­வ­னங்­களும் அளித்து வரும் வர­வேற்பு எங்­க­ளுக்­குப் பெரும் உந்­து­சக்­தி­யாக உள்­ளது," என்­றார் முனை­வர் மித்­திலா.

ஆலோ­சனை சேவை, அடிப்­படை மன­ந­லப் பயிற்சி, கப்­பல் சூழ­லில் செய்­யக்­கூ­டிய உடற்­ப­யிற்சி வழி­காட்­டிக் காணொ­ளி­கள், பயி­ல­ரங்கு­கள் ஆகி­ய­வற்றை வழங்­கு­கிறது 'டிரான்ஸ்­வோர்ல்ட் வெல்­னஸ்'.

"பிற சமூ­கத்­தி­ன­ரை­வி­ட­வும் அதிக அளவு புறக்­க­ணிக்­கப்­பட்ட சமூ­க­மா­கக் கப்­பல் துறை ஊழி­யர்­கள் உள்­ள­னர் என்­பது ஆய்­வு­களில் தெரி­ய­வந்­துள்­ளது. மொழிச் சிக்­கல்­கள், கட­லில் இருப்­ப­வர்­களைத் தொடர்­பு­கொள்ள இய­லா­தது எனப் பல்­வேறு சவால்­க­ளால் கப்­பல் ஊழி­யர்­க­ளுக்­கென்றே தனித்­து­வ­மான மன­நல சேவை­கள் இல்லை," என்று இச்­சே­வை­யைத் தொடங்­கு­வ­தற்­கான கார­ணத்தை விவ­ரித்­தார் முனை­வர் மித்­திலா.

கப்­பல் ஊழி­யர்­க­ளி­டத்­தில் மன­நலம் குறித்த விழிப்­பு­ணர்வு குறை­வாக இருப்­ப­தும், தனி­ம­னி­த­ராக மன­நல உதவி நாடு­வ­தற்கு தயங்­கு­வ­தும் சவால்­க­ளாக இருப்­பதை முனை­வர் மித்­திலா குறிப்­பிட்­டார். இதை கருத்­தில்­கொண்டு, அவர்­களுக்கு முத­லா­ளி­கள், நிறு­வ­னங்­களு­டன் இணைந்து பணி­யாற்ற முற்­பட்­டுள்­ளது 'டிரான்ஸ்­வோர்ல்ட் வெல்­னஸ்'.

எதிர்­கா­லத்­தில் கப்­பல் துறை­யில் மேலும் பல பிரி­வி­ன­ரை­யும், சமூ­கத்­தில் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வோ­ரை­யும் அணு­கத் திட்­ட­மி­டு­வ­தா­கக் கூறினார் முனை­வர் மித்­திலா.

கலையால் துயர் களையும் உளவியல் வல்லுநர்

ஆழ்­ம­னத்­தில் உறைந்­தி­ருக்­கும் ஆறாத் துய­ரங்­க­ளைப் போக்க கலை ஒரு சிறந்த வடி­கால் என்­பது உள­வி­யல் நிபு­ண­ரான 36 வயது புவ­னேஸ்­வரி பிர­கா­சத்­தின் (படம்) அனு­பவம்.

தந்­தை­யின் இழப்­பால் ஆறு மாதங்­க­ளுக்­கும் மேலாக மன­ம் ஒ­டிந்துபோயி­ருந்த உள­வி­யல் துறை சிகிச்­சை­யா­ள­ரான புவ­னேஸ்­வரி, அத்­து­ய­ரத்­தி­லி­ருந்து மீள கலை உள­வி­ய­லின் மூலம் தம்மைத் தேற்ற நினைத்­தார்.

கற்­றல் குறை­பாடு உள்­ளோ­ருக்­கான சிங்­கப்­பூர் டிஸ்­லெக்­சியா சங்­கத்­தில் பார்த்­து­வந்த முழு­நே­ரப் பணி­யைக் கைவிட்ட குமாரி புவனேஸ்­வரி, லாசால் கலைக் கல்­லூ­ரி­யில் கலை உள­வி­ய­லில் முது­கலைப் படிப்பை மேற்­கொண்­டார். அப்படிப்பு இவ­ரது துய­ரங்­களுக்கு அரு­ம­ருந்­தாய் அமைந்­தது.

2017ஆம் ஆண்­டில் முழு­நேர கலை உள­வி­யல் நிபு­ண­ராகப் பரி­மா­ணம் கண்ட குமாரி புவ­னேஸ்­வரி, துய­ரத்தில் தவிக்­கும் மற்­ற­வர்­க­ளுக்கு உதவ, 'சோலஸ் ஆர்ட் தெரப்பி' எனும் சமூக நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னார்.

கலை உள­வி­யல் பயிற்­சி­கள் எல்­லா­ருக்­குமே எட்­டக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்­டும் என்­பது இவரது இலக்கு. தொடக்­கத்­தில் அர­சாங்க அமைப்­பு­கள், சிறைச்­சா­லை­யு­டன் இணைந்து செயல்­பட முற்பட்ட இவர், பின்­னர் பொது­மக்­கள், மாண­வர்­கள் சார்ந்து தமது சேவை­களில் ஈடுபடத் தொடங்­கி­னார்.

"மன­ந­லம் குறித்­துப் பல­ரும் தவ­றான புரி­த­லைக் கொண்­டுள்­ள­னர். கலை உள­வி­யலை ஏறெ­டுத்­தும் பார்க்­காத போக்கு, உற்­றார் உற­வி­னர்­கூட ஆத­ர­வ­ளிக்­கா­தது எனப் பல சவால்­கள். இருப்­பி­னும், சோலஸ் தொடர்ந்து வளர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றது," என்­றார் குமாரி புவ­னேஸ்­வரி.

சில நேரங்­களில், 200 மின்­னஞ்­சல்­கள் அனுப்­பி­யும் ஒரு­வர் மட்­டுமே விருப்­பம் காட்­டும் நிலை­யும் இவ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. சமூக நிறு­வ­னப் பணி­யில் முக்­கிய சவா­லாக இருப்­பது, பிறர்க்­கு­த­வும் நோக்­கத்­தை­யும் வணி­கக் கண்­ணோட்­டத்­தை­யும் சம­மா­கக் கரு­து­வ­து­தான் என்­றார் குமாரி புவ­னேஸ்­வரி. வகுக்­கப்­படும் விலை மிகக் குறை­வாக இருந்­த­தைத் தொடர்ந்து நிறு­வன ரீதி­யாக சமா­ளிக்க முடி­யாத நிலை ஏற்­ப­டு­வதை தவிர்க்க, விலை, சேவை மாற்­றங்­களை 'சோலஸ்' புரிய வேண்­டி­யி­ருந்­தது.

இளை­யர்­க­ளுக்­கும் பெரி­யோ­ருக்­கும் கலை சிகிச்சை வகுப்­பு­களை நடத்­து­வ­தோடு, கலை உள­வி­யல் பயி­ல­ரங்­கு­க­ளை­யும் நடத்து­கிறது 'சோலஸ்'. இது­வரை 245 பேர் தனிப்­பட்ட முறை­யில் இந்­த நி­று­வ­னத்­தின் சேவை­க­ளின் மூலம் பய­ன­டைந்­துள்­ள­னர்.

தமது மற்­றொரு வணி­க­மான 'கார்ட் அட்­ட­லியே'வை இந்­தி­யா­வில் வன்­மு­றைக்­குள்­ளா­கும் பெண்­க­ளுக்­கான சமூக நிறு­வ­ன­மாக்­கும் திட்­டம் கொண்­டுள்­ளார் குமாரி புவ­னேஸ்­வரி.

பொழுதுபோக்காகக் கற்றது பொருளுதவிக்குக் கைகொடுக்கிறது

சிறு­வ­ய­தி­லி­ருந்து பொழு­து­போக்­காக கற்ற 'பேக்­கிங் (baking)' மூலம் சமூக சேவை செய்­ய­லாமே என்று தம் அக்கா கூறிய யோச­னை­யால் 2020ஆம் ஆண்­டில் உதித்­தது 17 வயது இமான் ஜூமா­பா­யின் (படம்) 'ஜூமா பேக்ஸ்'.

"கொவிட்-19 நோய்ப்­ப­ர­வல் சூழ­லில் குடும்­பத்­தைப் பிரிந்து இங்கு தவித்த வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பரி­தாப நிலை­யைக் கண்டு வருந்­தி­னேன். அவர்­களுக்கு என்­னால் எப்­படி உதவ முடி­யும் என்று சிந்­தித்­தேன். அப்­போது அக்கா கூறிய யோச­னை­யால் இத்­தொ­ழி­லைத் தொடங்க முடி­வு­செய்­தேன்," என்­றார் செயின்ட் ஜோசஃப் கல்வி நிலை­யத்­தில் பயி­லும் குமாரி இமான்.

கேக் முத­லிய இனிப்பு வகை­களை இன்ஸ்­ட­கி­ராம் மூலம் விற்­கும் குமாரி இமான், கிடைக்­கும் வருவாயில் பாதி­யைப் பல்­வேறு சமூக அமைப்­பு­க­ளுக்கு நன்­கொடை­யாக வழங்கி வரு­கி­றார். மீத­முள்ள தொகையைத் தேவை­யான கரு­வி­களை­யும் உண­வுப்­பொ­ருள்­க­ளை­யும் வாங்­கு­வ­தற்­குப் பயன்­ப­டுத்து­கி­றார்.

இது­வரை $4,000க்கும் மேலாக நிதி திரட்டி தேவைப்­படு­வோ­ருக்கு வழங்­கி­யுள்­ளார் இவர்.

இந்­தி­யா­வில் மருத்­துவ உயிர்­வா­யுக் கலன்­க­ளுக்கு பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­போது, அவற்றை வாங்க நன்­கொடை வழங்கினார். டெக்­கத்­லான் நிறு­வ­னத்­தோடு இணைந்து, எஸ்11 விடுதி­யில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு கிரிக்­கெட் விளை­யாட்­டுச் சாதனங்களும் தண்­ணீர்ப் புட்டி­களும் வழங்க உத­வி­னார்.

பழைய சேலைகள்வழி பலருக்கு வேலைவாய்ப்பு

ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஒரு வாழ்க்கை இருப்­பதைப்­போல ஒவ்­வொரு சேலைக்­கும் ஒரு வாழ்க்கை உள்­ளது என்று நம்­பும் 16 வயது மாண­வி­கள் இருவர், அந்த வாழ்க்­கையை அர்த்­த­முள்­ள­தாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

ஒவ்­வொரு சேலை­யும் ஒரு கதை­யைக் கொண்­டுள்­ளது. அக்­க­தை­க­ளுக்கு நிலைத்­தன்­மை­யை­யும், ஆத­ர­வற்ற பெண்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரத்­தை­யும் அமைத்­துத் தரும் வகை­யில், அவர்கள் இ­ரு­வ­ரும் சேர்ந்து 'சேரீ ஸ்டோ­ரீஸ்' என்ற சமூக நிறு­வ­னத்தை நிறு­வி­யுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் பயி­லும் ஸ்லோகா ஸ்ரீரா­மும் (படம்) சென்­னை­யில் பயி­லும் ஆனந்தி விவேக்­கும், சென்­னை­யிலுள்ள மாற்றுத் திறனாளி பெண்­க­ளின் நலனை முன்­னிட்டு ந­டத்தி வரும் இந்­நி­று­வ­னம், இரு வழி­களில் இயங்­கு­கின்­றது.

சிங்­கப்­பூ­ரி­லும் சென்­னை­யி­லும் வேண்­டப்­படாத சேலை­க­ளைச் சேக­ரிக்­கி­றார்­கள். பின் அவற்­றில் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வற்றை ஆத­ர­வற்ற பெண்­க­ளுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கு­கின்­றனர்.

மற்­ற­வற்றை 'போட்லி' எனப்­படும் சுருக்­குப்­பை­க­ளாக்கு­கின்­ற­னர்.

சென்­னை­யில் இயங்­கும் 'சேரீ ஃபார் நாரீ' என்ற அமைப்பு மூலம் இவர்­கள் ஆத­ர­வற்ற பெண்­க­ளுக்­குச் சேலை­களை விநி­யோ­கிக்­கி­றார்­கள்.

சென்­னை­யைத் தள­மா­கக் கொண்ட 'பை ஆர்­யாஸ்' நிறு­வ­ன­ரின் வடி­வ­மைப்­பில், பயன்­படாத சேலை­க­ளைக் கொண்டு 'போட்லி' சுருக்குப்­பை­க­ளைத் தயா­ரிக்­கின்­ற­னர் 'பெட்­டர் வோர்ல்ட்' அமைப்­பி­லுள்ள மாற்­றுத் திற­னாளி பெண்­கள்.

"வாழ்­வா­தா­ரத் திறன்­களை அளிப்­ப­தோடு, இது அவர்­க­ளுக்கு வாழ்க்­கை­யில் ஒரு பிடி­மானத்­தை­யும் கொடுக்­கின்­றது," என்­றார் குமாரி ஸ்லோகா.

இதன்­மூ­லம் திரட்­டப்­படும் நிதி உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு உத­வும், 'பெட்­டர் வோர்ல்ட்' அமைப்­பின் துணை அமைப்­பான 'ஸ்டோ­ரெட்' எனும் கடைக்கு வழங்கப்படுகிறது.

"நான் சிங்­கப்­பூ­ரில் இருந்து செயல்­படு­வதால், எங்­க­ளது முயற்­சி­யின் தாக்­கங்­களை படங்­களின் மூல­மா­கவே அறிய முடி­கின்­றது. இருப்­பி­னும், பய­ன­டை­யும் பெண்­க­ளின் மகிழ்ச்சி­யை­யும், அவர்­கள் சுதந்­தி­ர­மா­கப் பணி­பு­ரி­வ­தை­யும் காணும்­போது மன­நி­றை­வாக உணர்­கி­றோம்," என்­றார் யுனை­டெட் வோர்ல்ட் கல்­லூ­ரி­யில் பயி­லும் குமாரி ஸ்லோகா.

இவர்­க­ளின் சமூ­கப் பணி 2021ஆம் ஆண்­டில் தொடங்­கி­யது. 2021ல் கொவிட்-19 நோய்த்­தொற்­றி­னால் உற­வி­னர் இரு­வர் உயி­ரி­ழந்­த­போது, இந்­தி­யா­வின் நோய்ப்­ப­ர­வல் சூழ­லுக்கு உதவ வேண்­டும் என்ற எண்­ணம் குமாரி ஸ்லோ­கா­வின் மன­தில் ஆழப்­ப­திந்­தது. அச்­ச­ம­யத்­தில் 'பெட்­டர் வோர்ல்ட்' அமைப்­பைப் பற்றி அறிந்த இவர், அவர்­கள் தயா­ரித்த முகக்­க­வ­சங்­களை விற்­க­வும் உத­வி­னார்.

புதிதாகத் தொடங்கப்பட்ட தங்­க­ளது சமூக சேவை நிறு­வ­னத்­தைப் பிர­பலப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில், இவ்­வாண்டு சென்­னை­யில் 'போட்லி' கண்­காட்­சிக்கு இம்மாணவிகள் ஏற்­பாடு செய்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!