வேலையில் நீடிக்க உடல் நலன் முக்கியம்

சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உடல், மன, சமூக நலனில் அண்மைக்காலமாக கூடுதல் அக்கறை செலுத்தப்படுகிறது. இப்பிரிவினரின் நலன் காக்க, திட்டங்களையும் பணியிட விதிமுறைகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்துகிறது. பல சமூக, சமய, தொண்டூழிய அமைப்புகளும் இலவச, குறைந்த கட்டண மருத்துவ சேவைகளை வழங்குகின்றன. இவற்றை அறிந்து, பயன்படுத்துவது ஊழியர்கள் கைகளிலேயே உள்ளது. உடல் நலப் பிரச்சினைகள் பற்றித் தெரியவந்தால், வருமானம் குறையும், வேலை போகும் என்பது போன்ற தவறான எண்ணத்தால் பலரும் நாள்பட்ட நோய்களை தொடக்கத்திலேயே சரிப்படுத்தும் வாய்ப்பை இழக்கின்றனர். நலத்தோடு இருந்தால் அதிகம் உழைக்கலாம். மேலும், பாதிப்பு பெரிதாகும்போது செலவும் இழப்பும் அதிகமாகும் என்பதை பலரும் உணர்வதில்லை.

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் வெளி­நாட்டு ஊழி­ய­ரில் 22 விழுக்­காட்­டி­னர் நிதி நெருக்­க­டி­யி­னால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பில் போதிய அக்­கறை செலுத்த தயங்­கு­வ­தாக சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யைச் சார்ந்த ஆய்­வா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இவ்­வாண்டு மே மாதம் ‘பிஎம்ஜெ ஓபன் அக்­சஸ்’ எனும் முன்­னணி மருத்­துவ ஆய்­வி­த­ழில் வெளி­வந்த அந்த ஆய்வு, பெரும்­பான்­மை­யான வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் திட்­டங்­கள் பற்­றி­யும் காப்­பு­றுதி சலு­கை­கள் பற்­றி­யும் விழிப்­பு­ணர்வு இல்லை என்­றும் குறிப்­பி­டு­கிறது. மேலும் 55 விழுக்­காடு மருத்­து­வர்­க­ளுக்கு இது குறித்த போதிய தக­வல்­கள் தெரி­ய­வில்லை என்­றும் ஆய்வு சுட்­டி­யுள்­ளது.

“பெரும்­பான்­மை­யான வெளி­நாட்டு ஊழி­யர்­கள், குறிப்­பாக நீர­ழிவு, ரத்த அழுத்­தம் போன்ற நாள்­பட்ட நோய்­கள் உள்­ள­வர்­கள் சொந்த நாட்­டி­லி­ருந்து நண்­பர்­கள் மூலம் மருந்­து­க­ளைத் தரு­விப்­பது, மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னை­யின்றி கை மருத்­து­வம் செய்­வது போன்ற சுய சிகிச்­சை­களை அதி­கம் நாடு­கி­றார்­கள்,” என்­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர் சுகா­தார ஆய்­வா­ள­ராக உள்ள ஆயிஷா பர்­வின், 34.

“இங்கு மருத்­து­வச் செலவு அதி­கம், மருத்­துவ விடுப்­பு­க­ளி­னால் வரு­மா­னம் குறை­யும், தங்­க­ளு­டைய தாய் மொழி பேசும் மருத்­து­வர்­கள் அதி­கம் இல்லை என்­பன போன்ற பல கார­ணங்­க­ளி­னால் ஊழி­யர்­கள் மருத்­துவ சேவையை நாடு­வ­தில்லை,” என்­றும் கூறி­னார் வெளி­நாட்டு ஊழி­ய­ரின் காதா­ரப் பரா­ம­ரிப்­பில் பகுதி நேர முனை­வர் பட்­டப் படிப்­பை­யும் மேற்­கொண்­டுள்ள ஆயிஷா.

மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் நாள்­பட்ட நோய்­கள் இருப்­பது தெரி­ய­வந்­தால் வேலை போய்­விடும் என்ற அச்­சத்­தி­னா­லும் பல ஊழி­யர்­கள் நோய் அறி­கு­றி­கள் தென்­பட்­டா­லும் அதற்­கு­ரிய பரிசோ­த­னை­களை தவிர்க்­கி­றார்­கள் என்­றும் தங்­க­ளு­டைய ஆய்­வுகளிலும் கருத்­துக்­க­ணிப்­பு­க­ளி­லும் தெரியவந்­துள்­ள­தாக இவர் குறிப்­பிட்­டார்.

இது நோயும் இல்லை;

நான் நோயா­ளி­யும் இல்லை

பெரும்­பா­லும் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­வ­தைத் தவிர்க்­கும் 40 வயது அன்­ப­ழ­கன் அர்­ஜு­னன், காலை­யில் ஒரு மணி நேர மெது வோட்­ட­மும் இரவு உண­வாக சப்­பாத்­தி­யும் வாரம் இரு­முறை ‘தேனிக்­காய் விதை’யும் உட்­கொண்­டாலே நீரி­ழிவு குண­மா­கி­வி­டும் என நினைக்­கி­றார்.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் இந்­தியா சென்­ற­போது தமக்கு நீரி­ழிவு இருப்­பதை அறிந்த இவர், தொடக்­கத்­தில் ஊரி­லி­ருந்து வாங்கி வந்த மருந்தை உண்­டார். நாள­டை­வில் அதை­யும் நிறுத்­தி­விட்­டார்.

18 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் இவர் சிங்­கப்­பூர் வந்து சம்­பா­திக்­கத் தொடங்­கிய பின்­னரே ஐந்து உடன்­பி­றப்­பு­க­ளைக் கொண்ட இவ­ரது குடும்­பத்­தின் நிதி நிலைமை உயர்ந்­துள்­ளது. தற்­போது மாதம் சரா­ச­ரி­யாக $1,500 வரை வரு­மா­னம் ஈட்­டு­கி­றார். பெற்­றோர், மனைவி, இரு பிள்­ளை­கள் இவரை நம்பி உள்­ள­னர்.

“கஷ்­டப்­பட்டு சம்­பா­திப்­பதை அநா­வ­சி­ய­மாக மருத்­து­வத்­துக்­குச் செலவு செய்ய மன­மில்லை. எனக்கு 40 வய­து­தான் ஆகிறது. உடல்­ந­லத்­தோ­டு­தான் இருக்­கி­றேன்,” என்­பது இவ­ரின் எண்­ண­மாக உள்­ளது.

கவ­னக்­கு­றைவு; அக்­க­றை­யின்மை

தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் மூத்த தாதிமை மேலா­ள­ராக உள்ள முல்லை, 53, “பெரும்­பான்­மை­யான ஊழி­யர்­கள் பொது­வா­கவே உடல்­ந­லத்­தில் கவ­னம் செலுத்து வதில்லை,” என்­றார்.

மருத்­து­வ­ரின் அறி­வு­ரை­க­ளை­யும் ஆலோ­ச­னை­க­ளை­யும் கடைப்­பி­டித்­தால் நோயாளி என்ற உணர்வு ஏற்­பட்­டு­வி­டும் என்­பன போன்ற விழிப்­பு­ணர்­வற்ற சிந்­த­னை­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் அதி­கம் காணப்­ப­டு­வ­தா­க­வும் இவர் தெரி­வித்­தார்.

“எனி­னும், கொவிட்-19 தொற்­றுக்­குப் பிறகு இவர்­க­ளு­டைய உடல்­நல அக்­க­றை­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. நோய்த்­தொற்­றுக் காலத்­தில் ஊழி­யர்­க­ளின் தங்­கு­மி­டங்­க­ளி­லும் பணி­யி­டங்­க­ளி­லும் அடிப்­படை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு பற்­றிய முகாம்­களும் பகிர்வு அங்­கங்­களும் நடத்­தப்­பட்­டன.

“அதன்­பின்­னர் முன்­பை­விட அதிக அள­வில் ஊழி­யர்­கள் தாமாக மருத்­துவ பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தைக் காண முடி­கிறது,” என்­றும் திரு­வாட்டி முல்லை குறிப்­பிட்­டார்.

சுசீலா ராஜேந்­தி­ரன், 41, போன்று பெரும்­பா­லான பணிப்­பெண்­கள் அர­சாங்­கம் அவர்­க­ளுக்கு நிர்­ண­யித்­துள்ள கட்­டாய மருத்­து­வச்­சோ­த­னை­க­ளுக்கு அப்­பால் கூடு­த­லாக எது­வும் செய்­து­கொள்­வ­தில்லை.

“காப்­பு­று­தித் திட்­டங்­கள் பற்றி முத­லா­ளி­யி­டம் கேட்­டுத் தெரிந்­து­கொள்­வேன். ஆறு மாதத்­திற்கு ஒரு­முறை அடிப்­படை மருத்­துவ பரி­சோ­தனை, ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை வேலை வொர்க் பர்­மிட்­டைப் புதுப்­பிக்­கும்­போது முழு உடல் பரி­சோ­தனை ஆகி­யவை மட்­டுமே செய்­வேன்,” என்­றார் அவர்.

ஆங்­கி­லம் தெரி­யா­த­தால் அச்­சம்

ஆஸ்­பெஸ்­டாஸ் தயா­ரிக்­கும் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­யும் 38 வயது செந்­தில் பாண்­டி­யன் சில மாதங்­க­ளுக்கு முன்­னால் காச நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இங்கு வேலை பார்க்­கும் இவ­ருக்கு சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே நோயின் அறி­கு­றி­கள் தென்­பட்­டுள்­ளது.

மருத்­து­வப் பரி­சோ­தனை செய்து, நோய் உள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டால் வேலை போய்­வி­டும் என்ற பயத்­தி­லேயே இவர் எவ்­வித மருத்­துவ நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் இருந்­து­விட்­டார்.

ஒரு­நாள் பணி­யி­டத்­தில் மயங்கி விழவே, மருத்­து­வப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு, காச நோய் இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது.

இப்­போது மாதம்­தோ­றும் மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­குச் செல்­லும் இவர், “தமிழ்­நாட்­டில் 8ஆம் வகுப்பு வரை மட்­டுமே படித்த எனக்கு வெகு சில ஆங்­கில வார்த்­தை­களே தெரி­யும். மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் நன்­மு­றை­யில் சிகிச்சை அளித்­தா­லும், அவர்­கள் கூறு­வ­தைப் புரிந்­து­கொள்ள சிர­மம் இருப்­ப­தால் மருத்­து­வ­ம­னைக்கு வரு­வதே பய­மாக இருக்­கும்,” என்­றார்.

தொண்­டூ­ழிய அமைப்­பு­களின் மருத்துவ உதவி

உயர் ரத்த அழுத்­தப் பிரச்­சி­னை­யுள்ள 53 வயது சுப்­பி­ர­ம­ணி­யன் நவ­நா­த­னுக்கு கேலாங்­கில் உள்ள ‘ஹெல்த்­செர்வ்’ எனும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தொண்டு நிறு­வ­னத்­தில் மிகக்­கு­றைந்த கட்­ட­ணத்­தில் கிடைக்­கும் மருத்­துவ சேவை பேரு­த­வி­யாக உள்­ளது. மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்­னர் உயர் ரத்த அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்ட இவ­ரது உடல்­நி­லை­யில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

‘ஹெல்த்­செர்வ்’வில் மருத்­துவ சேவை­யு­டன் மன­நல ஆலோ­சனை, ஆரோக்­கிய உண­வு­முறை உரை­கள், உடற்­ப­யிற்சி வகுப்­பு­கள், அடிப்­படை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு பற்­றிய விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­கள் ஆகி­ய­வற்­றா­லும் சுப்­பி­ர­ம­ணி­யன் பய­ன­டைந்­துள்­ளார்.

மாதம் ஒரு­முறை மருத்­துவப் பரி­சோ­த­னைக்­குச் செல்­லும்­போது இவ­ருக்கு மருந்­து­க­ளு­டன் சேர்த்து $15தான் செல­வா­கிறது.

இங்கு பெறும் மருத்­துவ ஆலோ­ ச­னை­யால் இவர் வாழ்க்­கை­மு­றை­மா­றி­யுள்­ளது. உடல் எடை­யை­யும் ஏழு கிலோ வரை குறைத்­துள்­ளார்.

ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­முறை­யும் போதிய மருத்­துவ தேவை­களும் உட­ல­ள­வி­லும் மன­த­ள­வி­லும் நம்மை மேம்­ப­டுத்­து­கிறது என்­பதை சற்றே கால தாம­த­மாக உணர்ந்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

“வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பல­ருக்கு தொண்டு நிறு­வ­னங்­கள் இருப்­பதே தெரி­வ­தில்லை. வரு­மா­னம் ஈட்­டு உடல்­ந­ல­மும் மன­ந­ல­மும் துணை­பு­ரிய வேண்­டும் என்­பதை அவர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்,” என்­றார் இத்­தொண்டு நிறு­வனத்­தில் உடல்­நல ஆலோ­ச­க­ராகப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி துர்கா அறிவன், 42.

எதிர்­பாரா பணி­யிட விபத்­து­கள்

கட்­டு­மா­னப் பணி­யா­ள­ரான ராதா­கி­ருஷ்­ணன் அழ­கர்­சாமி, 38, வேலை­யில் இடத்­தில் தடுக்கி விழுந்­த­தில் கால் மூட்­டில் பலத்த அடிப்­பட்­டது. பணி­யிட விபத்து என்­ப­தால் மூட்டு அறு­வைக்­கான சிகிச்சை செலவை காப்­பு­றுதி ஏற்­றுக்­கொண்­டது. ஐந்து மாத மருத்­துவ விடுப்­புக்­குப் பின்­னர் சென்ற மாதம் மீண்­டும் வேலைக்­குச் சென்­றார். தொடர்ந்து அர­சாங்க மருத்­து­வ­ம­னை­யில் நிபு­ணத்­துவ சிகிச்­சை­க­ளுக்­கும் காப்­பு­றுதி நடை­முறை­க­ளைச் செய்து முடிக்­க­வும் நீண்ட நாள் ஆவ­தால், மருத்­துவ விடுப்பு கிடைப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்டு வரு­மா­னம் பாதிக்­கிறது என்­பது ராதா­கி­ருஷ்­ண­னின் கவலை.

36 வயது சந்­தி­ர­மூர்த்தி மாசி­லா­ம­ணிக்கு பணி­யிட விபத்­தி­னால் அண்­மை­யில் கால் பெரு­வி­ர­லில் அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­டது.

மருத்­து­வச் செல­வுக்கு காப்­பு­றுதி உத­வி­யது. ஆனால், தொடர் மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­குச் செல்­லும்போது அதிக நேரம் காத்­திருக்க நேர்­வ­தால் சில மருத்­துவப் பரிசோ­த­ னை­க­ளைத் தவிர்த்­து­விடு­கி­றார்.

‘எஸ்ஜி’ விபத்து உதவி நிலை­யம் எனும் தொண்டு நிறு­வ­னம் பணி­யிட விபத்­து­க­ளி­னால் அவதி­யு­றும் வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்­காக இயங்­கு­கிறது.

“பல வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு தங்­க­ளு­டைய மருத்­துவ காப்­பீடு பற்­றிய விழிப்­பு­ணர்வு இல்லை. வேலை­யில் சேரும்­போதே காப்­பு­றுதி பற்­றித் தெரிந்­து­கொள்­வது அவ­சி­யம்,” என்­றார் இவ்­வ­மைப்­பின் தொண்­டூ­ழி­ய­ரான சாமு­வேல் குமார், 58.

விடுப்பு எடுத்­தால் வரு­மா­னம் இருக்­காது என்­ப­தால் பல ஊழி­யர்­கள் சிறிய விபத்­து­க­ளுக்கு முறை­யான மருத்­துவ சிகிச்சை எடுக்­கா­மல் அலட்­சி­ய­மாக விட்டு விடு­கி­றார்­கள் என்­றும் இவர் கூறினார்.

கவ­னக்­கு­றை­வு­டன் இருந்­தால் இதய நோய்­ ஏற்­ப­ட­லாம்

“ரத்­தக் கொதிப்பு அல்­லது அழுத்­தம், அதிக கொழுப்­புச்­சத்து, நீரிழிவு போன்ற நாள்­பட்ட நோய்­களுக்கு தகுந்த மருத்­துவ சிகிச்சை­ தேவை. கவ­னக்­கு­றை­வு­டன் இருந்­தால் நாள­டை­வில் இந்­நோய்­க­ளி­னால் இரு­தய நோய்­கள் வர அதிக வாய்ப்பு உள்­ளது,” என்றார் செங்காங் பொது மருத்­து­வ­மனை எலும்­பி­யல் நிபு­ண­ரான டாக்­டர் ஹமீத் ரசாக், 37.

“சிங்கப்­பூர் அர­சாங்­கம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் நலன்­க­ருதி பல்­வேறு சிறப்புத் திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது.

“குறிப்­பாக அண்­மை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட அடிப்­படை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புத் திட்­டம் (Primary Care Plan) உள்­பட ஏனைய மருத்­துவ வச­தி­களும் மருத்­துவ நிலை­யங்­களும் காப்­பு­றுதி திட்­டங்­களும் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவை குறித்த விழிப்­பு­ணர்­வை­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பெற வேண்­டும்,” என்­றும் கூறி­னார் தொண்­டூ­ழிய நிறு­வ­னத்­து­டன் இணைந்து வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்­குத் தொண்­டூ­ழிய மருத்­து­வ­ரா­க­வும் பணி­பு­ரி­யும் இவர்.

உடல்­ந­லத்தோடு மன­ந­ல­னி­லும் ஊழி­யர்­கள் அக்­கறை செலுத்த வேண்­டும். மன அழுத்­தம், மனச் சோர்வு, மன இறுக்­கம், அதீத பதற்றம் போன்ற மன­ந­லத்தைப் பாதிக்­கும் எவ்­வித அறி­குறி தென்­பட்­டா­லும் தக்க மருத்­துவ ஆலோ­சனை பெறு­தல் மிக­வும் அவ­சி­யம் என்­றும் டாக்­டர் ஹமீத் ரசாக் வலி யுறுத்தினார்.

monolisa@sph.com.sg

அடிப்படை சுகாதாரத் திட்டம்

இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் நடப்புக்கு வந்­துள்ள ‘பிசிபி’ என்ற அடிப்­படை சுகாதா­ரத் திட்­டத்தின் கீழ், முத­லா­ளி­கள் தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கும் அல்­லது கட்­டு­மா­னம், கடல்­துறை, செயல்­முறைப் பொறி­யி­யல் ஆகிய துறை­களில் பணி­யாற்­றும் தங்­க­ளு­டைய ஊழி­யர்­க­ளுக்­கான பரா­ம­ரிப்­புத் தொகையைச் செலுத்த வேண்­டும்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான வேலை அனு­ம­தி­யின் ஒரு பகு­தி­யாக இது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பி­ரி­வு­களில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பெரும்­பா­லான அடிப்­படைச் சுகா­தா­ரத் தேவை­க­ளுக்கு ஆகும் செல­வு­களை இந்­தத் திட்­டம் ஏற்­றுக்­கொள்­ளும். இத்­திட்­டத்­தின் முக்­கிய அம்­சங்­கள்:

 வேலை அனு­மதி விண்­ணப்­பம் அல்­லது புதுப்­பித்­த­லின்­போது மருத்­துவப் பரி­சோ­தனை பெற­லாம்.

கடு­மை­யான, நாள்­பட்ட நோய்­க­ளுக்­கான மருத்­துவ ஆலோ­ச­னை­களை எத்­தனை முறை வேண்­டு­மா­னா­லும் பெற­லாம்.

 ஆண்­டுதோறும் முழு உடல் அடிப்­படை சுகா­தா­ரப் பரி­சோ­தனை செய்துகொள்­ள­லாம்.

தொலை­பேசி அல்­லது இணை­யம் வழி மருத்­துவ ஆலோ­சனை வச­தி­யும் தங்­கு­மி­டத்­திற்கு மருந்­தை அனுப்பி வைக்­கும் வச­தி­யும் உண்டு.

தங்­கு­வி­டு­தி­க­ளி­லி­ருந்து மனி­த­வள அமைச்­சின் மருத்­துவ மையங்­க­ளுக்­குப் போக்­கு­வ­ரத்து வசதி உள்­ளது.

மருத்­துவ மையங்­களில் நோய்­வாய்ப்­பட்­டி­ருக்­கும் ஊழியருக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்.

நிபு­ணத்­துவ மருத்­துவ ஆலோ­சனை பெறும் நோயா­ளி­க­ளுக்கு இச்­ச­லுகை அளிக்­கப்­ப­டாது.

தேவை ஏற்­பட்­டால் மருத்­துவ அவ­சர ஊர்தி அல்­லது மற்ற மருத்­துவ போக்­கு­வ­ரத்து சேவை­அளிக்­கப்­படும். இத்­திட்­டத்­தின் மருத்­துவ சேவை­க­ளைப் பெற ஊழி­யர்­கள் மனி­த­வள அமைச்­சின் கீழுள்ள அனைத்து மருத்­துவ நிலை­யங்­க­ளை­யும் அணு­க­லாம். ஒவ்­வொரு மருத்­துவப் பரி­சோ­த­னைக்­கும் ஊழி­யர் $5 கட்­ட­ண­ம் செலுத்த வேண்டும்.

தொலைபேசி அல்­லது இணை­யம் வழி மருத்­துவ ஆலோ­ச­னைக்கு $2 வெள்ளி மட்­டுமே. இத்­திட்­டம் குறித்த கூடு­தல் தக­வல்­க­ளுக்கு https://www.mom.gov.sg/primary-healthcare-system/primary-care-plan இணை­ய­தள முக­வ­ரியை நாட­லாம்.

நலமிக்க வாழ்க்கை முறை: இன்று இலவச உரை நிகழ்ச்சி

இந்து அறக்கட்டளை வாரியமும் மீடியாகார்ப் ஒளி 96.8 நிறுவனமும் இணைந்து நலமிக்க வாழ்க்கை முறை பற்றி விளக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இன்று காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஸ்ரீிநிவாசப் பெருமாள் கோயில், பிஜிபி அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

நலமிக்க வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் போன்றவை பற்றி இந்நிகழ்வில் கலந்துரையாடப்படும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம்.

பல்வேறு சமூக அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் இது போன்ற பல சமூக நிகழ்வுகளை அவ்வப்போது நிகழ்த்தி வருகின்றன. வெளிநாட்டு ஊழியர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு பயன்பெறலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!