வெற்றி வேட்கையில் மேன்சிட்டி, செல்சி

லண்டன்: வெம்ளி விளையாட் டரங்கில் இன்று நள்ளிரவு நடை பெறும் லீக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்று ஆட்டத்தில் செல்சியும் மான்செஸ்டர் சிட்டியும் பொருதுகின்றன.
இப்போட்டியைக் கடந்த ஆண்டு வென்ற பெப் கார்டியோ லாவின் சிட்டி, இம்முறையும் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளது. அதே வேளையில், இந்த ஆட்டத்தை செல்சி வெல்வதன் மூலம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள அக்குழுவின் நிர்வாகி மொரிசியோ சாரி மீதான விமர்சனம் குறையும்.
இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் 6-0 எனும் கோல் கணக்கில் சிட்டியிடம் படுமோசமான தோல்வியைக் கண்டது செல்சி. இந்நிலையில், சிங்கப்பூர் நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் இந்த லீக் கிண்ண ஆட்டத்தில் செல்சி பழிதீர்க்கும் வேட்கையில் விளையாடக்கூடும்.
எனவே, முந்தைய வெற்றியை மனதில்கொண்டு எந்தக் கார ணத்தைக் கொண்டும் மெத்தன மாக இருந்துவிட வேண்டாம் என்று தமது வீரர்களுக்கு சிட்டி நிர்வாகி கார்டியோலா அறிவுறுத் தியுள்ளார்.
“நாங்கள் வென்ற அதே குழுவை மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் சந்திக்க நான் விரும்பவில்லை. 

“என்றாலும், இம்முறை பழி தீர்க்க முற்படும் திறம்வாய்ந்த செல்சி வீரர்களுக்கு எதிராக நாங்கள் மிகவும் கவனமாக விளையாட வேண்டும்,” என்றார் கார்டியோலா.
ஐரோப்பா லீக் கிண்ணப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று உள்ள செல்சி, இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே வேகத்தைக் காட்ட வேண்டும் என்று சாரி கூறியுள்ளார்.
“வீரர்களிடையே தன்னம் பிக்கை என்பது ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே வளர வேண்டும். அப்போதுதான் எதிர் அணிக்கு மிரட்டலாக விளங்கி ஆட்டத்தை வெல்ல முடியும்,” என்றார் அவர்.
இந்த ஆட்டத்தில் தற்காப்பு ஆட்டக்காரர்கள் ஜான் ஸ்டோன்ஸ், பெஞ்சமின் மெண்டி, தாக்குதல் ஆட்டக்காரர் கேப் ரியல் ஜேசுஸ் ஆகியோர் காயங் கள் காரணமாக சிட்டியில் இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது.
செல்சி தரப்பில், கோல்காப் பாளரின் இடத்தை யார் நிரப்பப் போகிறார் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.
லீக் கிண்ண இறுதிச் சுற்று ஆட்டத்தில் செல்சியும் சிட்டியும் மோதுவது இதுவே முதன்முறை. இவ்விரு குழுக்களும் இந்தக் கிண்ணத்தை ஐந்து முறை வென்றுள்ளன.