மார்ஷ் வேகத்தில் சுருண்டது இங்கிலாந்து

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 294 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடரில் ஏற்கெனவே 2-1 என முன்னிலை பெற்று, ஆஷஸ் கிண்ணத்தை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்துக்கொண்ட நிலையில் ஐந்தாவது, கடைசிப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இங்கிலாந்து அணியைப் பந்தடிக்கும்படி கேட்டுக்கொண்டது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களை அந்த அணி எடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரண்டாம் நாளில் பந்தடிப்பைத் தொடர்ந்த அந்த அணி மேலும் 23 ஓட்டங்களைச் சேர்த்து, எஞ்சி

இருந்த இரு விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஜோ ரூட் 57 ஓட்டங்களையும் எடுத்தனர்.

டிராவிஸ் ஹெட்டுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இங்கிலாந்து அணியின் சரிவுக்குக் காரணமாக அமைந்தார். அவர் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இரண்டு விக்கெட் இழப்பிற்கு 55 ஓட்டங்களை எடுத்து இருந்தது. மார்னஸ் லபுஷேன் 32 ஓட்டங்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், மார்க்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவரையும் தமது அதிவேகப் பந்துவீச்சின்மூலம் வெளியேற்றினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

முன்னதாக, டெஸ்ட் போட்டிகளில் குறைந்த வயதில் 7,000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாமவர் என்ற சாதனையைப் படைத்தார் ஜோ ரூட். முதலிரு இடங்களில் முறையே அலெஸ்டர் குக்கும் சச்சின் டெண்டுல்கரும் உள்ளனர்.

வார்னரின் வேண்டாச் சாதனை

தொடர்ந்து மூன்று முறை ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், நேற்றும் ஐந்து ஓட்டங்களில் வெளியேறினார். இதன்மூலம், ஒரே  டெஸ்ட் தொடரில் எட்டு முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த தொடக்க வீரர் எனும் வேண்டாச் சாதனையையும் அவர் படைக்க நேரிட்டது. இந்தத் தொடரில் அவர் இதுவரை மொத்தம் 84 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.