எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி

லண்டன்: காயத்தின் காரணமாக நார்விச் சிட்டி காற்பந்துக் குழுவின் 11 ஆட்டக்காரர்கள் நேற்று முன்தினம் நடந்த முக்கியமான ஆட்டம் ஒன்றில் களமிறங்கவில்லை. மாற்று ஆட்டக்காரர்களுக்கான இருக்கையை நிரப்ப, இரு கோல்காப்பாளர்களை அமர்த்துவதைத் தவிர நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்கவுக்கு வேறு வழியில்லை.

இந்த நிலையிலும், கடந்த பருவத்தின் இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியைத் தனது சொந்த மண்ணில் 3-2 எனும் கோல் கணக்கில் நார்விச் வென்றிருப்பது பலரும் மூக்கின் மீது விரலை வைக்கும் அளவிற்குப் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்தப் பருவம் புதிதாக இபிஎல்லில் விளையாடி வரும் நார்விச், நட்சத்திர வீரர்களைக் கொண்டுள்ள மேன்சிட்டியை வென்றது உண்மையிலேயே ஒரு சாதனைதான். இபிஎல்லில் மேன்சிட்டிக்கு எட்டு மாதங்களில் கிடைத்த முதல் தோல்வி இதுவே.

இதன் விளைவாக, லீக்கில் தற்போது முதலிடம் வகிக்கும் லிவர்பூலைவிட சிட்டி ஐந்து புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளது. நியூகாசல் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீண்டு அக்குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. இப்பருவத்தில் அது இதுவரை விளையாடிய ஐந்து ஆட்டங்களில் அனைத்தையும் வென்றுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக இபிஎல் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் மேன்சிட்டியின் முயற்சிகளுக்கு நார்விச்சிடம் கிடைத்த தோல்வி பின்னடைவாக கருதப்படுகிறது.

குறிப்பாக, சிட்டியின் தற்காப்புக்குப் பக்கபலமாக விளங்கிய பிரெஞ்சு வீரர் ஐமெரிக் லப்போர்ட்டே, புத்தாண்டு வரை குழுவில் இடம்பெறாமல் இருக்கக்கூடிய நிலை அக்குழுவுக்குப் பெரும் கவலையைத் தந்துள்ளது. முட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள ஜாம்பவானை வீழ்த்தியிருப்பது தமக்கும் தமது வீரர்களுக்கும் இது மிகச் சிறப்பான நாள் என்று நார்விச் சிட்டி நிர்வாகி ஃபார்க கருத்துரைத்தார்.

இந்த அதிசய வெற்றியை இவர் எப்படி கொண்டாடப் போகிறார் என்று கேட்கப்பட்டதற்கு, “நிச்சயமாக, குழுவின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு எங்களது ரசிகர்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

“இந்தத் தருணத்தை நாம் அனுபவிக்கவில்லை என்றால், ஊக்கத்தை நாம் இழந்துவிடக்கூடும். இருப்பினும், எமது வீரர்களுக்கு தலைக்கனம் இருக்கக்கூடாது. அவர்கள் தொடர்ந்து நிதானத்துடன் விளையாட வேண்டும்,” என்று ஃபார்க கூறினார்.

நார்விச் வீரர்களுக்கு தமது வாழ்த்துகளை மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துக்கொண்டார்.

“இதுபோன்ற ஆட்ட முடிவுகள் ஏற்படுவது இயல்பே. கோல் போடும் வாய்ப்புகள் எங்களுக்கு இருந்தும் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. மாறாக, மூன்று அல்லது நான்கு வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தபோதும் அவற்றை நார்விச் வீரர்கள் கோல்களாக்கினர்,” என்றார் கார்டியோலா.

சிட்டியின் தற்காப்புப் பிரிவில் லப்போர்ட்டே இடம்பெறாதது லிவர்பூலுக்கு சாதகமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. 

இருப்பினும், இது பருவத்தின் தொடக்க காலம் மட்டுமே எனக் கூறி விமர்சகர்களின் வாயை அடைக்க கார்டியோலா முற்

பட்டுள்ளார்.