பட்டாசு விபத்தில் இருவர் பலி

விருதுநகர்: சாத்தூர் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இருவர் காயமுற்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பட்டாசு பொதிகளை ஊழியர்கள் காரிலிருந்து இறக்கிக்கொண்டிருந்தனர். 

அப்போது ரமேஷும் கடையில் இருந்தார். ஊழியர்கள் பட்டாசு பொதிகளை இறக்கியபோது திடீரென உராய்வின் காரணமாக வெடி

விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. 

இதனால் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் கடை முழுவதும் எரிந்து தரைமட்டம் ஆனது. 

பட்டாசு பண்டல்களை ஏற்றி வந்த காரும் சேதம் அடைந்தது. மேலும் வெடிவிபத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர், சிவகாசி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வெடிவிபத்தில் பட்டாசுக் கடை உரிமையாளர் ரமேஷ் (35), சிவகாசி விஸ்வநத்தத்தைச் சேர்ந்த தர்மர் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.

சம்பவம் நிகழ்ந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளித்ததால் முழுமையாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.