சுடச் சுடச் செய்திகள்

ரூ.300 கோடி வருகிறது என்று சொல்லி ரூ. 1.17 கோடி சுருட்டல்

சேலம்: வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்பில் இருந்து 300 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகக் கூறி ஒரு விவசாயியிடம் ரூ.1.17 கோடி மோசடி செய்த  நான்கு பேர் சிக்கி இருக்கிறார்கள். மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

இவ்வேளையில், தமிழகத்தில் இத்தகைய மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்துகொள்ளவேண்டும் என்றும் போலிஸ் எச்சரித்துள்ளது. 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் அடங்கிய ஒரு கும்பல், தங்களுக்கு வெளிநாட்டிலுள்ள ஒரு கிறிஸ்துவ அமைப்பு நடத்திய அதிர்ஷ்டக் குலுக்கில் ரூ. 300 கோடி கிடைத்து இருப்பதாகவும் அதற்கான ஆவணப் பணிகளுக்காக பணம் தேவைப்படுவதாகவும் சொல்லி அதே பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதி என்ற விவசாயியிடம் ரூ. 40 லட்சம்  பணம் கேட்டு வாங்கியது. 

இந்த நிலையில், ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பில் அருள்ஜோதி கொலை செய்யப்பட்டார். 

அதையடுத்து அந்தக் கும்பல் அருள்ஜோதியின்  உறவினரான பழனிவேல் என்ற விவசாயியை அணுகியது.

அதே கதையை அவரிடத்திலும் சொல்லி அவரிடம் இருந்து பல தடவையாக மொத்தம் ரூ.60 லட்சம் பெற்றது. 

பிறகு வெளிநாட்டுப் பரிசுப்பணம் வந்துவிட்டதாகச் சொல்லி  அதற்குப் பெரும் விழா நடத்தவேண்டும் என்று கூறி பழனிவேலிடம் ரூ. 10 லட்சம் கேட்டனர். சந்தேகம் அடைந்த பழனிவேல் போலிசிடம் புகார் செய்தார். மோசடி தொடர்பில் சிவகுமார், நிசாந்த், அஸ்வின், மாதேஷ் என்ற நால்வர் பிடிபட்டனர். 

எஞ்சிய மூவரை போலிஸ் தீவிரமாக தேடுகிறது. கைதானவர்களிடம் விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.