முதல்வர்: அமைதிப் பூங்காவாகத் திகழ்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க முயற்சி நடக்கிறது

சேலம்: தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்றும் அதைச் சீர்குலைக்க சிலர் முயற்சி செய்வதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். 

தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கும் நிலையில் முதல்வர் இவ்வாறு அறிவித்து உள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

குடியுரிைமச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றி தமிழ்நாட்டில் யாரும் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என்றார் முதல்வர். 

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் சொன்னார். மத்திய அரசாங்கத்தில் பதவி கிடைக்காத காரணத்தினால் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசைக் குறைகூறி வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டதையும் முதல்வர் சுட்டிக்காட்டினார். 

சட்டம்-ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக மத்திய அரசு விருதுகள் அளித்து வருவதையும் முதல்வர் நினைவூட்டினார். 

பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து தொடர்பில் பதில்அளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “மத்திய அமைச்சர்கள் தமிழக அரசைப் பாராட்டும் நேரத்தில் ராதாகிருஷ்ணன் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். 

“இதன் மூலம் அவர் பாஜக அரசாங்கத்தை எதிர்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முதல்வர் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 

தமிழக மக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட தான் வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

உலகிலேயே உன்னதத் தொழிலாகக் கருதப்படும் உழவுத் தொழிலை மேம்படுத்திடவும் விவசாயப் பெருமக்களின் வாழ்வு சிறக்கவும் தமிழக அரசு செய்து வரும் உதவிகளையும் அமல்படுத்தி வரும் திட்டங்களையும் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி அந்த உதவிகள் தொடரும் என்றார்.