அலங்காநல்லூர்: வீரம் அடங்காநல்லூராகியது

அலங்காநல்லூர்: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. சீறிப்பாய்ந்து களமிறங்கிய 700 முரட்டுக் காளைகளை 855 காளையர்கள் அடக்கிப் பிடிக்க முயன்றனர். 

“அலங்காநல்லூர் நேற்று வீரம் அடங்கா நல்லூராகக் காட்சி அளித்தது,’’ என்று நேரே பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதிக பாதுகாப்புடன், அமைச்சர்கள் முன்னிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நேற்று தொடங்கிய அந்த ஜல்லிக்கட்டு போட்டியில், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் கறுப்புக் கொம்பன், வெள்ளைக் கொம்பன், சின்னக் கொம்பன் ஆகிய காளைகளும் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் சிறந்த காளையாகத் தேர்வான ராவணன் என்பவரின் காளையும் குறிப்பிடத்தக்கவையாக  பலரையும் கவர்ந்தன.  

சின்னக் கொம்பன் முட்டியதில் ஐந்து வீரர்கள் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதர பல காளைகள் முட்டியதால் பலரும் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறின. 

ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களும் நேற்று அலங்காநல்லூரில் குவிந்திருந்தனர். 

கோடானுகோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் அறிவிக்கப்பட்டன. கார்கள், தங்கச் சங்கிலிகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளைப் பெறுவதற்காக வீரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு காளைகளை அடக்க முயன்றனர். வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.   

இதனிடையே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் ஸ்ரீதர் என்ற காளை உரிமையாளர் மரணம் அடைந்தார். பார்வையாளராக வந்திருந்த செல்லபாண்டி என்பவரும் மயங்கி விழுந்து மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே வண்ணாத்திப்பட்டி என்ற ஊரில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 40 வயது ஆடவர் ஒருவர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வேறு ஒருவர் காயம் அடைந்துவிட்டார். 

முன்னதாக நடந்த அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கார்கள் உள்ளிட்ட பரிசுகள் குவிந்தன. அந்தப் போட்டிகளில் 96 பேர் காயம் அடைந்ததாகத் தெரியவந்தது. 

மணப்பாறை ஆவரங்காடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 25 பேர் காயம் அடைந்தனர். பல இடங்களி லும் இம்மாதம் 31 வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.