பெண் குரலில் பேசிப் பேசி 350 ஆடவர்களை ஏமாற்றிய ஆண்

சென்னை: பொறியியல் பட்டதாரி ஒருவர், பெண் குரலில் பேசி ஆசைகாட்டி 350 ஆடவர்களை ஏமாற்றி பணம் பறித்து இருக்கிறார் என்றும் அவர் இப்போது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை போலிஸ் தெரிவித்து உள்ளது. 

வள்ளல் ராஜ்குமார் ரேகன்,27, என்ற அந்த ஆடவர், திருநெல்வேலி மாவட்டம் பணங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இணையத்தில் ‘லொகாண்டோ’  என்ற ஒரு தளத்தை நடத்தி வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக அறிவித்து இருந்தார். 

அதை நம்பி பலரும் அந்தத் தளத்தில் தொடர்புகொண்டனர். அவர்களிடம் பெண் குரலில் பாலியல் ஆசை வார்த்தை பேசி அந்த ஆடவர், தன் வலையில் விழுந்தவர்களிடம் பணம் வசூலித்து வந்தார். பிரியா என்று தன் பெயரை தெரிவித்துவந்த அவர், மின்னிலக்கக் கணக்கு ஒன்றில் முதலில் ரூ. 100 அனுப்பி வைக்கும்படி கேட்பார். 

பணம் மாற்றிவிடப்பட்டதும் ஆபாசப்படம் ஒன்றை அனுப்புவார். அதைப் பார்த்து மயங்கிவிடும் ஆடவர்களிடம் ரூ. 1,500 அனுப்பி வைக்கும்படி வள்ளல் ராஜ்குமார் கேட்பார். பணத்தை அனுப்ப மறுத்தால் போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஒரு மிரட்டல் செய்தி வரும். 

அந்தச் செய்தியை அலட்சியப்படுத்தினால் பல தொலைபேசி எண்களில் இருந்து அதேபோன்ற செய்தி வரும். இப்படி மிரட்டல் வந்ததை அறிந்து பல ஆடவர்கள் பணத்தை அனுப்பிவைத்துவிட்டதாகப் போலிஸ் குறிப்பிட்டது. 

ஆனால் மதுரவாயலைச் சேர்ந்த பி. உதயராஜ் என்பவர் இந்தத் தில்லுமுல்லு பற்றி போலிசிடம் தகவல் தெரிவித்தார். போலிஸ் விசாரித்ததில் மிரட்டல் அனைத்தும் வள்ளல் ராஜ்குமார் அனுப்பியது என்று தெரியவந்தது.  

இந்த மோசடி காரியத்தை 2017 முதல் தான் செய்து வருவதாகவும் 350 பேருக்கும் மேற்பட்ட ஆடவர்களைத் தான் ஏமாற்றி இருப்பதாகவும் வள்ளல் ராஜ்குமார் போலிசிடம் ஒப்புக்கொண்டு இருக்கிறார். 

அவருக்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணைக் காவலில் வைத்து வள்ளல் ராஜ்குமாரை போலிஸ் விசாரித்து வருகிறது.