இரவு நேர காவலாளி இல்லை: ஜன்னலை உடைத்து வங்கியில் புகுந்து கொள்ளை

திருப்பூர்: காவல்துறை அறிவுறுத்தியும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத நிலையில், கொள்ளையர்கள் கைவரிசை காரணமாக வங்கியில் இருந்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியில் ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் இங்கு தங்கள் கைவரிசையைக் காட்டி உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கிளை இயங்கி வரும் கட்டடத்தின் பக்கவாட்டு ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைய கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை.

இது குறித்து அறிந்த போலிசார், இரவுநேரக் காவலாளியை பணியில் அமர்த்துமாறு வங்கி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர். ஆனால் காவலாளிகள் நியமிக்கப் படவில்லை. 

இந்நிலையில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் கொள்ளையர்கள் மீண்டும் வங்கி கிளைக்குள் நுழைய முயன்று வெற்றி கண்டுள்ளனர்.

முன்பு போலவே ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். விடுமுறை முடிந்து திங்கட்கிழமை வங்கி ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய போது கொள்ளையடிக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது.

வங்கி வாடிக்கையாளர்களின் பெட்டகங்களைத் திறந்த கொள்ளையர்களால் முக்கிய பாதுகாப்புப் பெட்டகத்தை  திறக்க முடியவில்லை.

இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வங்கி ஊழியர்களாலும் அதை திறக்க முடியவில்லை. அதை சரிசெய்த பிறகே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

“வங்கி செயல்படும் இடம் கிராமப் பகுதி என்பதால் நள்ளிரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததை கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். முதலில் வங்கியைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை திருடிவிட்டு, பிறகு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்,” என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.