சமூக ஒன்றுகூடல்களில் பங்கேற்போர் வரம்பு எட்டில் இருந்து ஐந்துக்கு குறைக்கப்படுகிறது

வரும் சனிக்கிழமை 8ஆம் தேதியில் இருந்து சமூக ஒன்றுகூடல்களுக்கான விதிமுறைகள் கடுமையாகின்றன.

சமூகத்தில் கொவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக சிங்கப்பூர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவ்வகையில், சமூக ஒன்றுகூடல்களில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகபட்சம் எட்டில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்படவுள்ளது.

வீடுகளுக்கும் இவ்விதி பொருந்தும் என்றும் அதிகபட்சம் ஐந்து வெவ்வேறு வருகையாளர்களை மட்டுமே வரவேற்கலாம் என்றும் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

அத்துடன், அதிகமானவர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய வேண்டியிருக்கும். புதிய விதிமுறைகளின்படி, வேலையிடத்தில் அதிகபட்சம் 50% ஊழியர்கள் பணியாற்ற முடியும். இப்போது அவ்விகிதம் 75 விழுக்காடாக இருக்கிறது.

வேலையிடத்திற்குச் செல்ல வேண்டியிருப்பவர்கள் வெவ்வேறு நேரங்களில் வந்து செல்லும் நடைமுறையையும் நீக்குப்போக்கான வேலை நேரங்களையும் நிறுவனங்கள் தொடர வேண்டும். அலுவலகங்களில் சமூக ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

இம்மாதம் 30ஆம் தேதி வரை இந்த விதிமுறைகள் நடப்பில் இருக்கும்.

புதிய கட்டுப்பாடுகளால் சிங்கப்பூர் இரண்டாம் கட்டத் தளர்வுக்குத் திரும்பும் என்று கல்வி அமைச்சரும் கொவிட்-19 பரவல் முறியடிப்பு அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங், நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார். இருப்பினும், இது நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இன்னொரு முறை நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டியிராது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றார் திரு வோங்.
இவ்வார இறுதியில்தான் புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரும் என்றாலும், சமூக ஒன்றுகூடல்களைக் குறைத்துக்கொள்வது, மருத்துவ ரீதியில் தகுதியானவர் எனில் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்ற வழிகளில் இப்போதிருந்தே சிங்கப்பூரர்கள் தங்கள் பங்கை ஆற்றத் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

உருமாறிய கொவிட்-19 கிருமிகளால் நோய் பரவாமல் தடுக்க, தொடர்புகளின் தடமறிதல் மூலம் அதிகாரிகள் தங்களால் இயன்ற அளவு முயன்று வருகின்றனர் என்ற அமைச்சர் வோங், “சமூகத்தில் இன்னும் கிருமித்தொற்று மறைந்திருக்கிறது என நாம் கருத வேண்டும்,” என்றும் சொன்னார்.

உருமாறிய கிருமிகள் அதிகம் பரவும் திறன் கொண்டவை என்பதாலும் அவை பெரிய அளவிலான புதிய கிருமித்தொற்றுக் குழுமங்களை ஏற்படுத்த வல்லவை என்பதாலும், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டியதாகி இருக்கிறது என்று அவர் விளக்கினார்.

கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கடைப்பிடித்தால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நல்ல வாய்ப்புள்ளது என்றும் திரு வோங் கூறினார்.
வரும் 8ஆம் தேதியில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவது ஏன் எனக் கேட்டதற்கு, தேவையான சரிக்கட்டல்களைச் செய்துகொள்ள தொழில் நிறுவனங்களுக்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனாலும் அதுவரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் மக்கள் உடனடியாகத் தங்களது நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வோங் வலியுறுத்தி இருக்கிறார்.

21 நாள் இல்லத் தனிமை உத்தரவு நீட்டிப்பு

இதற்கிடையே, கொரோனா பரவல் அபாயம் அதிகமாக இருக்கும் நாடுகள் அல்லது பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் இனி 21 நாள் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அமைச்சர் வோங் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, புருணை, சீனா, நியூசிலாந்து, தைவான், ஹாங்காங், மக்காவ் போன்ற நாடுகள் அல்லது பகுதிகளைத் தவிர வேறு இடங்களில் இருந்து வருவோர்க்கு இல்லத் தனிமை உத்தரவு நீட்டிப்பு பொருந்தும்.

அவர்கள் பிரத்தியேக வசிப்பிடங்களில் தங்களுக்கான 21 நாள் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணியில் இருந்து இவ்விதி நடப்புக்கு வரும்.

சிங்கப்பூர் வந்திறங்கியதும் இல்லத் தனிமை உத்தரவின் 14ஆம் நாளிலும் அதன் இறுதியிலும் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!