தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள பொருள் சேமிப்புக் கிடங்கு ஒன்றின் மேற்கூரையில் இன்று காலை தீ மூண்டது.

எண் 29 கிம் சுவான் டிரைவில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து காலை 11.35 மணியளவில் தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சமையலறையில் பயன்படுத்தப்படும்  பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர மொத்தம் 40 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் 14 அவசரகால வாகனங்கள் காணப்பட்டன.

தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து நால்வர் வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்தச் சேமிப்புக் கிடங்கின் மேற்கூரையில் தீ மளமளவென பரவிக் கொண்டிருந்தது.

இச்சம்பவத்தில் எவரும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

பிற்பகல் 12.45 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.