எகிப்திய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

ஏதென்ஸ்: பாரிஸ் நகரிலிருந்து கெய்ரோ செல்லும் வழியில் மாயமாய் மறைந்த எகிப்திய விமானத்தின் உடைந்த பாகங்கள் மத்திய தரைக்கடலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்திய ராணுவம் தெரிவித்தது. எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகருக்கு 290 கி.மீ தொலைவில் விமானப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகளின் சில உடைமைகளையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் ராணுவம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அப்பகுதியில் விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதற்கு பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரிசிலிருந்து 66 பேருடன் கெய்ரோவுக்குப் புறப்பட்ட எகிப்திய விமானம் காணாமற்போய் 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை எந்தக் குழுவும் அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. மத்திய தரைக்கடலில் பெரிய அளவில் தேடுதல் பணி நடந்து வருவதாகவும் கிரீஸ், எகிப்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மே 19ஆம் தேதி மாயமான விமானத்தின் உடைந்த பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள எகிப்திய ராணுவ விமானம். படம்:ஏஎப்பி