ஃபுளோரிடாவில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் பலரை சுட்டுக் கொன்றவன்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதிக்குள் நுழைந்து 50 பேரைச் சுட்டுக் கொன்றவனை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த துப்பாக்கிக்காரன் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஓமர் மட்டீன் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலிசார் கூறினர்.

ஓரின சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடும் பல்ஸ் இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதுடன் மேலும் 53 பேர் காயம் அடைந்தனர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அக்கொடூர செயலில் ஈடுபட்ட துப்பாக்கிக்காரனை போலிசார் சுட்டுக் கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட 29 வயதான ஓமர் மட்டீன், பாதுகாப்பு வழங்கும் நிறுவனம் ஒன்றில் 2007ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்ததாகவும் அவனது பணியின் ஒரு பகுதியாக அவன் எப்போதும் ஒரு துப்பாக்கியை எடுத்துச் சென்றதாகவும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு சேவை நிறுவனமான G4S நிறுவனம் கூறியது. பயங்கரவாதிகளுக்கு அனுதாபமான கருத்துகளைக் கூறியது தொடர்பில் ஏற்கெனவே அவனை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை செய்திருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. அவன் சென்ற வாரத்தில் சட்டபூர்வமாக துப்பாக்கிகளை வாங்கியதும் தெரியவந்துள்ளது.

ஆர்லாண்டோ நகர கேளிக்கை விடுதிக்குள் நுழைந்து பலரை சுட்டுக்கொன்றவனை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். ஓமர் மட்டீன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்தத் துப்பாக்கிக்காரனின் புகைப்படம் சமூக வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் துப்பாக்கிக்காரனை போலிசார் சுட்டுக் கொன்றனர். படம்: ராய்ட்டர்ஸ்