நஜிப்: சொந்த நலனுக்காக பதவியை தவறாகப் பயன்படுத்தியது இல்லை

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், தமது சொந்த நலனுக்காக தமது பதவி அல்லது அதிகாரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியது இல்லை என்று கூறியுள்ளார். அமைச்சர்கள், போலிசார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், மலேசிய தொடர்புத் துறை, பல்லூடக ஆணையம் இவற்றின் அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்வதில் தான் தலையிட்டது இல்லை என்றும் அவர்களை கட்டுப் படுத்தியது இல்லை என்றும் திரு நஜிப் கூறினார்.

அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரியின் அதிகாரத்தையும் அவரது பணிகளையும் தான் கட்டுப்படுத்தவில்லை என்றும் அவர் சொன்னார். திரு நஜிப் அவரது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப் படுவது குறித்து மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவும் மேலும் இருவரும் திரு நஜிப்பிற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பில் திரு நஜிப் அளித்துள்ள தற்காப்பு வாக்கு மூலத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர், நிதி அமைச்சர், தேசிய முன்னணித் தலைவர், அம்னோ தலைவர் இந்தப் பதவிகளை வகிக்கும் திரு நஜிப் இப்பதவிகளை தான் என்றும் தவறாகப் பயன்படுத்தியது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.