சீனாவில் பலத்த சூறாவளிக் காற்றில் சேதமடைந்த பாலம்

பெய்ஜிங்: சீனாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர் அல்லது அவர்களைக் காணவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சூறாவளியில் இங்குள்ள பழமை வாய்ந்த ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் அப்பாலம் பெரும் சேதம் அடைந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். இந்த ஆண்டின் மிக சக்திவாய்ந்த சூறாவளி என்று கூறப்படும் ‘மிரன்டி’ எனும் சூறாவளி சீனாவின் ஃபூஜியன் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்மாநிலத்தில் வீசிய மோசமான சூறவாளி இது என்று கூறப் படுகிறது. பலத்த காற்றில் சிக்கி இங்கு 7 பேர் உயிரிழந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். சூறாவளியைத் தொடர்ந்து இன்னும் 9 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுமார் 330,000 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த சூறாவளி முன்ன தாகத் தைவானைத் தாக்கியது. தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்தச் சூறாவளி சீனாவிலும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது, இந்தச் சூறாவளி சீனாவை நெருங்குவதற்கு முன்பு சீனா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்திருந்தது. இருப்பினும் இதன் பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை என்று சீன அதிகாரிகள் கூறினர்.

வீசிய சூறாவளிக் காற்றில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஏராளமான குடும்பங்கள் மின்சார மின்றி தவிக்க நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர். சூறாவளிக் காற்றுடன் சில இடங்களில் கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பாதிக்கப் பட்டதாகவும் இதனால் மக்கள் அவதிக்குள்ளானதாகவும் தகவல் கள் கூறுகின்றன. சூறாவளியின் வேகம் தற்போது குறைந் துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் வீசிய சூறாவளிக் காற்றின்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 871 ஆண்டு காலப் பழமைவாய்ந்த ஒரு பாலம் இடிந்து விழுந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next