அலெப்போவில் தாக்குதல்; ரஷ்யா மீது குற்றச்சாட்டு

டமாஸ்கஸ்: சிரியாவில் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்ற அரசாங்கப் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் அரசாங்கப் படைக்கு ஆதரவாக ரஷ்யப் போர் விமானங்களும் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. தொடரும் தாக்குதல்களில் அங்கு குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் அதிமானோர் உயிர் இழந்ததாகவும் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் சிரியா நிலவரம் குறித்து கண்காணித்து வரும் மனித உரிமை கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் நீடிக்கும் ஐந்து ஆண்டு கால உள்நாட்டுப் போரில் தற்போது அலெப்போ நகரம் போர்க்களமாக மாறியுள்ளது. அந்நகர மக்கள் பீதியில் உறைந்து போய் இருப்பதாகக் தகவல்கள் கூறுகின்றன. இந்த அதிரடித் தாக்குதல்களில் அங்குள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தீப்பிடித்து எரிவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டுகள் வீசப்பட்டதில் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர் காப்பாற்றிய பலரில் பாதிப்பேர் சிறுவர்கள் என்று கூறப்பட்டது. சிரியா படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 300 பேர் காயம் அடைந்ததாகவும் மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

அலெப்போ நகருக்கு அருகே சிரியா விமானங்களின் குண்டுவீச்சில் சேதமடைந்த பகுதியில் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்துவருகிறது. கடந்த சில நாட்களாக தொடரும் அரசாங்கப் படை தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அலெப்போ நகர மருத்துவமனைகளில் ஐநூறுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next