மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக் படை தாக்குதல்

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற கூட்டணிப் படையின் ஆதரவுடன் ஈராக் அரசாங்கப் படை கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அந்நகரைச் சுற்றி வளைத்துள்ள ஈராக்கியப் படையினர் பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ராணுவ கவச வாகனங்கள் அந்நகரை நோக்கிச் செல்லும் வேளையில் இந்த முறை தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று ஈராக்கியப் பிரதமர் ஹைதர் அல் அபாடி கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் மோசுல் நகரம் ஐஎஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மோசுல் நகருக்கு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை களுக்குத் தடை விதிக்கப் பட்டதால் அங்குள்ள மக்கள் பசி, பட்டினியாலும் கடும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1.5 மில்லியன் பேர் வசிக்கும் மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள இந்நகரை தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐஎஸ் போராளிகள் அங்குள்ள மக்களை மோசுல் நகரைவிட்டு வெளியேறவிடாமல் மிரட்டி, தடுத்து வைத்துள்ளனர். அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகித்து பலரை போராளிகள் கொன்று குவித்துள்ள நிலையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை ஆதரவுடன் ஈராக்கியப் படை கடும் தாக்கு தலில் ஈடுபட்டுள்ளது.

மோசுல் நகரில் ஐஸ் போராளி ஒருவர் துப்பாக்கியுடன் காவலில் இருக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்