ஒட்டிப்பிறந்த இரட்டையருக்கு உயிர்காப்பு சிகிச்சை பெறுவதில் பிரச்சினை

ஏமனில் உயிருக்குப் போராடும் ஒட்டிப்பிறந்த இரட்டையருக்கு அவசரமாக சிகிச்சை தேவைப்படுகிறது. ஆயினும் அந்நாட்டில் நிலவி வரும் பூசலால் அந்நாட்டின் தலைநகர் சனாவிலுள்ள அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அந்த இரட்டையர்கள் நாட்டைவிட்டு வெளியேற முடியாது. வன்முறையால் உருக்குலைந்திருக்கும் ஏமனில் இந்தக் குழந்தைகளுக்குப் போதிய சுகாதார ஆதரவு இல்லை. 

“இந்தக் குழந்தைகள் உடனே நாட்டைவிட்டு வெளியேறி சிகிச்சை பெறவேண்டும். ஏமனில் நிலவும் குழப்பமான சூழலில் இக்குழந்தைகள் உயிர் பிழைக்க முடியாது,” என்று அந்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஃபைசல் அல் பல்பாய், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சுவாசக் கருவியின் உதவியுடன் அந்தக் குழந்தைகளால் மூச்சுவிட முடிகிறது. இரட்டையரின் தலை, முதுகு தண்டு, நுரையீரல், இதயம், வயிறு, குடல் ஆகியவை வெவ்வேறாக இருக்கின்றன. ஆயினும், அந்தக் குழந்தைகளுக்கு ஒரே கல்லீரல், ஆணுறுப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இரட்டையரை வெளிநாட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் ஐக்கிய நாட்டு அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.