பத்துமலை கோயில் நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், ஆபரணம் பறிமுதல்

பத்துமலை கோயில் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருக்கும் முக்கிய அதிகாரி ஒருவரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் ஒரு  மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயம், சொகுசு கடிகாரங்கள், தங்க ஆபரணம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்களின் மதிப்பைத் துல்லியமாகக் கணிக்கும் பணி தொடர்ந்து நடப்பதாக ‘த நியூ ஸ்ட்ரெய்டஸ்ÿடைம்ஸ்’ தெரிவித்தது.

‘டான் ஸ்ரீ’ பட்டத்தைக் கொண்டிருக்கும் இந்த அதிகாரியின் வீட்டில் சோதனைப் பணிகள் நடந்தன. பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி திங்கட்கிழமை ( மார்ச் 4) கைது செய்யப்பட்டார். ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் ஆலையத்திற்குச் சொந்தமான நிலப்பகுதி ஒன்றின் மேம்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அந்த அதிகாரியும் வேறு இரண்டு பேரும் போலிசாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கோத்தா தாமான்சாராவிலுள்ள அந்த வீடு மட்டுமின்றி பத்துமலையிலுள்ள கோயில் அனுவலகம் ஒன்றையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தற்காலிக தங்குமிடங்கள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவை அந்த நிலப்பகுதியில் கட்டப்பட உள்ளன. திட்டத்தின் மதிப்பு சுமார் 250 மில்லியன் ரிங்கிட். இது தொடர்பான ஒப்பந்தம் இந்தத் தொகையிலிருந்து 25 விழுக்காட்டை சொத்து மேம்பாட்டாளர் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். ஆயினும் இந்தத் திட்டம் குறித்து மலேசியாவிலுள்ள பல்வேறு இந்திய அமைப்புகள் கேள்வி எழுப்பின. இதில், கோயிலைச் சேர்ந்த அறங்காவலர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர் ஒருவர் அந்த நிலத்தைக் கோயிலுக்கு தானம் செய்திருந்ததாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

கோத்தா தாமான்சாராவிலுள்ள பத்துமலை கோயில் நிர்வாகி ஒருவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பல்வேறு பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.