கிழக்குச் சீனா தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது

சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஜியாங்சு மாநிலத்தில் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

வியாழக்கிழமை நடந்த இந்த வெடிப்பில் மேலும் 90 பேர் காயமடைந்தனர். கடுமையான இந்த வெடிப்பால் தொழிற்சாலை கட்டடத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாயின. அந்தத் தொழிற்சாலை கட்டடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள கட்டடம் ஒன்றின் சன்னல்கள், கதவுகள் ஆகியவை வெடிப்பின் அதிர்வுகளால் உடைந்துபோனதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தச் சம்பவத்தை அடுத்து தொழிற்சாலையின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளதாக ‘த சவூத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.