(காணொளி): நிலமீட்புத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் பினாங்கு மீனவர்கள்

நிலமீட்புத் திட்டம் ஒன்றை எதிர்த்து நூற்றுக்கணக்கான பினாங்கு மற்றும் பேராக் மாநில மீனவர்கள் மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான கடற்பகுதியில் செயற்கையான 1,821 ஹெக்டர் பரப்பளவு  தீவுகளை அமைக்கும் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த மீனவர்கள் கூறுகின்றனர்.

‘பிஎஸ்ஆர்’ எனப்படும் அந்தத் திட்டம், ஜோகூர்-சிங்கப்பூர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ‘ஃபாரஸ்ட் சிட்டி’யைவிட இன்னும் பெரியது. தெலுக் கும்பாரின் செயற்கைத்தீவுகளின் விற்பனை மூலம் கிடைக்கும் நிதி, 46 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டத்திற்கு (பிடிஎம்பி) கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பல்வேறு நெடுஞ்சாலைகளையும் நீர்ச்சுரங்கச்சாலை ஒன்றையும் உள்ளடக்கும் இந்தப் போக்குவரத்துத் திட்டம், மலேசியாவின் ஆகச் செலவுமிக்கப் பெருந்திட்டமாக இருக்கப்போகிறது. 

2015ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த நிலமீட்புத் திட்டத்திற்கு மலேசிய சுற்றுப்புற இலாகா கடந்த வாரம் 72 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தால் கடல் படுகை நாசப்படுத்தப்படும். இதனால் பிடிபடும் மீன்களின் எண்ணிக்கை குறைந்து அவற்றின் சந்தை விலை அதிகரிக்கும் என்று  பினாங்கின் வாடிக்கையாளர் சங்கத் தலைவர் மொகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

மீனவர்கள் மட்டுமின்றி சுற்றுப்புற ஆர்வலர்களும் இந்தத் திட்டத்தை எதிர்த்து இன்று குரல்கொடுக்கின்றனர்.