(காணொளி): புகைமூட்டம் சூழ குதிரையில் சென்ற மகாதீர்

கிள்ளான் பள்ளத்தாக்கைப் புகைமூட்டம் சூழ்ந்திருந்தபோதும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது குதிரையின்மீது சவாரி செய்வதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக் தளத்தில் வெளிவந்துள்ளது.

காலையில் துளிர்விட்ட  மழைத்தூறலால் புகைமூட்டம் சற்று தணிந்திருந்தது.  94 வயது டாக்டர் மகாதீர் அப்போது செட்ராங்கிலுள்ள ‘புத்ரா மலேசியா’ பல்கலைக்கழகத்தின் குதிரை நிலையத்திற்குச் சென்று சவாரி செய்தார்.

டாக்டர் மகாதீருக்கு மிகப் பிடித்தமான நடவடிக்கைகளில் குதிரை சவாரியும் ஒன்று எனக் குறிப்பிட்ட அவரது ஃபேஸ்புக் பக்கப் பதிவு, நேரப் பற்றாக்குறையால் வெகு காலமாக குதிரை சவாரி செய்ய அவரால் இயலவில்லை என்று குறிப்பிட்டது. அவரது குதிரை சவாரியைக் காட்டும் காணொளி ஒன்றும் அந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் மகாதீர் முகமூடியை அணிந்துகொண்டு சவாரி செய்ததை ஒரு நிமிடம், 59 விநாடிகளுக்கு நீடித்த அந்தக் காணொளி  காட்டியது. சவாரி முடித்த அவர், குதிரையிலிருந்து இறங்கி அதற்குக் கேரட் கொடுத்ததும் காணொளியில் தென்பட்டது.

டாக்டர் மகாதீரின் துடிப்பையும் உற்சாகத்தையும் இணையவாசிகள் பாராட்டினர்.