அதிக நட்பார்ந்த குடிநுழைவு அனுபவம்

புத்ராஜயா: நாட்டின் குடிநுழைவு மையங்களில் அதிக நட்பார்ந்த சேவை வழங்கும் முயற்சியாக, குடிநுழைவு அதிகாரிகளுக்கு அடிப்படை சீன மொழியும் மற்ற முக்கியமான மொழிகளும் கற்பிக்கப்படும்.

கருத்துப்பரிமாற்றத்தைச் சுலபமாக்கவும், ‘விசிட் மலேசியா 2020’  திட்டத்தை முன்னிட்டும் இம்முயற்சி எடுக்கப்படுவதாகக் குடிநுழைவுப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ கைரூல் ஸைமீ தாவுத் கூறினார்.

“குடிநுழைவுப் பிரிவை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலும் மற்ற விமான நிலையங்களிலும் பயணச்சேவை முகப்புகளில் சேவையை மேம்படுத்தப் போகிறோம்.

“எங்கள் அதிகாரிகள் நட்பார்ந்த சேவையை வழங்கவேண்டும். ஏனென்றால் அதுவே வருகையாளர்களுக்கு இந்நாட்டைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.

“சேவை முகப்புகளில் பணிபுரிபவர்கள் சுலபமாகப் பேசுவதற்கு அடிப்படை சீன மொழியும் மற்ற மொழிகளும் கற்பிக்கப்படும்,” என்று குடிநுழைவுப் பிரிவு நாளின் இன்றைய கொண்டாட்டத்திற்கு முன்பாக அளித்த பேட்டியில் அவர் கூறினார்.