தென் ஆப்பிரிக்க நங்கை இவ்வாண்டின் பிரபஞ்ச அழகி

ஆசியாவிலிருந்து வெற்றி மகுடம் ஆப்ரிக்காவுக்கு கைமாறியுள்ளது. இவ்வாண்டின் பிரபஞ்ச அழகி (Miss Universe) பட்டத்தை தென் ஆப்பிரிக்காவின் சோசிபினி துன்சி கைப்பற்றியுள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடந்த இப்போட்டியில் மொத்தம் 90 அழகிகள் இந்தப் பிரசித்திப்பெற்ற மகுடத்திற்காகப் போட்டியிட்டனர்.  

நீச்சல் உடைச் சுற்று, மாலைநேர உடைச் சுற்று, கேள்வி பதில் அங்கம் என வெவ்வேறு சுற்றுகளை அழகிகள் கடக்க வேண்டியிருந்தது.

இந்த 26 வயது ஆப்பிரிக்க அழகி பாலினத்திற்கு எதிரான வன்முறை போராட்டத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர்.

‘‘என்னைப் போன்ற தோல் நிறம், சிகையும் கொண்ட பெண்ணைப் பார்த்து அழகு என்று இந்த உலகம் கருதியதில்லை. இந்த எண்ணம் இன்றுடன் நின்றுவிட வேண்டும். என் முகத்தை பிள்ளைகள் பார்த்து என்னுடைய முகத்தில் அவர்களின் பிரதிபலிப்பு அடங்கியுள்ளதை அவர்கள் உணர வேண்டும்,’’ என மகுடம் சூடிய குமாரி சோசிபினி துன்சி தெரிவித்தார்.

போட்டியின் இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் மெக்சிகோ, போர்ட்டோ ரிக்கோ நாடுகளின் அழகிகள் இடம்பெற்றனர். 

கடந்த ஆண்டில் இந்த பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த கெட்ரினா கிரே.

இவ்வாண்டில் அவரது நாட்டைச் சேர்ந்த அழகி குமாரி கசினி கானாடோஸ், முதல் 20 நிலைகளில் இடம்பெற்று போட்டியின் சிறந்த தேசிய உடை பிரிவில் வென்றார்.

நிகழ்ச்சியின் படைப்பாளரான நகைச்சுவை பிரபலம் ஸ்டீவ் ஹார்வி மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.

2015ஆம் ஆண்டில் நடந்த இப்போட்டியில் தப்பான வெற்றியாளரை அறிவித்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இவ்வாண்டின் சிறந்த தேசிய உடை பிரிவில் வென்றவர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என அவர் அறிவித்திருந்தார். ஆனால் அதனை அறிவிக்கும் தறுவாயில் அவரின் அருகில் நின்றவர் மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி அழகி குமாரி சுவேத்தா. 

சுவேத்தா தாம்தான் அந்த வெற்றியாளர் என ஹார்விடம் மேடையில் கூற, தப்பான வெற்றியாளரை அறிவித்துவிட்டோமோ என்ற ஐயம் ஹார்விக்கு வந்ததால், மலேசிய அழகிதான் சிறந்த தேசிய உடைக்கான விருதைப் பெறுகிறார் என்று மாற்றி அறிவித்தார்.

ஆனால் அவர் சரியான வெற்றியாளரைத்தான் அறிவித்திருந்தார் என்று போட்டியின் ஏற்பாட்டுக் குழு பிறகு உறுதிப்படுத்தியது.

இந்த சர்ச்சை தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

Loading...
Load next