வெலிங்டன்: நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளத்தின் காரணமாக அங்குள்ள ஃபிரான்ஸ் ஜோசப் நகரில் சுமார் 1,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை வரை அந்நகரத்திற்கான சாலை வழி போக்குவரத்து தொடங்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் ஹெலிகாப்டர் அல்லது சிறிய விமானம் மூலம் வெளியேறத் தொடங்கி உள்ளனர். மேலும் சிலர் நெடுஞ்சாலை மீண்டும் திறக்கும் வரை காத்திருந்தனர். வெஸ்ட்லேண்ட் மேயர் புரூஸ் ஸ்மித் கூறுகையில், "ஃபிரான்ஸ் ஜோசப்பில் உள்ள 970 சுற்றுலாப் பயணிகளில் பலர் இந்தச்சம்பவத் தால் பரபரப்பு அடைந்துள்ளனர்.

"ஆனால் சிலர் தங்கள் பயணத் திட்டங்கள் சீர்குலைந்துவிட்டதால் விரக்தியடைந்தனர். "மக்கள் வெளியேற உதவுவதற்காக சுமார் 20 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நகரத்திற்கு வெளியே தயாராகவுள்ளன," என்று அவர் கூறினார்.
சில சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களுடன் தங்க விரும்புவதாகவும், மற்றவர்கள் தங்கள் பயணக் காப்பீடு வெளியே பறப்பதற்கான கூடுதல் செலவுகளை ஈடுசெய்யுமா என்பதை உறுதிப்படுத்த முயல்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு இப்படி நடந்திருந்தால் மேலும் பலர் சிக்கியிருப்பார்கள் என்றும் மேயர் புரூஸ் ஸ்மித் சொன்னார். ஏனெனில், சுற்றுலா காலத்தின் உச்சமாக பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சுற்றுலா பயணிகள் அந்நகரத்திற்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.