மெல்பர்ன்: முகக் கவசம் கட்டாயம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் இரண்டாவது ஆகப் பெரிய நகரம், முகக் கவசம் அணிவதை வியாழக்கிழமை முதல் கட்டாயமாக்குகிறது. கிருமிப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மெல்பர்ன் தீவிரப்படுத்தும் பொருட்டு இது நடப்புக்கு வருவதாக நேற்று அரசாங்கம் அறிவித்தது.

மெல்பர்ன் நகரத்தை உள்ளடக்கிய விக்டோரியா மாநிலம் பத்து நாட்களுக்கு முடங்கியிருந்தும் நேற்று அங்கு மேலும் 363 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகின.

இவற்றைச் சேர்த்து விக்டோரியாவில் சுமார் 3,000 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வரும் வியாழக்கிழமை முதல் மெல்பர்ன் நகரிலும் பக்கத்தில் அமைந்துள்ள மிட்செல் ஷாயர் பகுதியிலும் உள்ள ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும். முகத்தை மறைப்பதற்கான வேறு வகை துணிகளையும் அவர்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் முகக் கவச விநியோகம் அதிகரிக்கும் வரை இத்தகைய துணிகள் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. முகத்தை மூடாமல் இருப்பதைவிட, இது மேல் என்றார் விக்டோரிய மாநில அரசாங்கத்தின் தலைவர் டேனியல் ஆன்ட்ரூஸ்.

“வீட்டை விட்டு வெளியேறும்போது சாவியை மறக்கமாட்டோம்; கைபேசியை மறக்கமாட்டோம். அதே போல முகக் கவசம் இல்லாமல் இனி வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. கிருமிப் பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிவது அத்தியாவசியமான ஒன்று,” என்றார் அவர்.

முகக் கவசம் அணிவது தொடர்பான இப்புதிய சட்டத்தைப் பின்பற்றாதவர்களுக்கு $200 ஆஸ்திரேலிய டாலர் (S$194) அபராதம் விதிக்கப்படும்.

இதன்வழி ஆஸ்திரேலியாவிலேயே முகக் கவசத்தைக் கட்டாயமாக்கும் முதல் இடமாகியுள்ளது மெல்பர்ன் நகர். இதுவரை முகக் கவசம் அணிவது ஆஸ்திரேலியாவில் கட்டாயமாக்கப்படவில்லை. கொவிட்-19 கிருமிக்கு எதிரான நாட்டின் செயல்பாடுகளிலும் முகக் கவசம் அணிவது இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 12,000 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 122 பேர் கிருமி பாதிப்புக்கு பலியாகிவிட்டனர்.