கொல்லப்பட்ட கறுப்பின பெண்ணுக்காக நீதி கோரும் போராட்டம்

அமெரிக்கா: போலிஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்ட கறுப்பின பெண் ப்ரியோன்னா டேலருக்காக நீதி கோரி கறுப்பின ஆர்ப்பாட்டக்காரர்கள்  பல்வேறு வகையான துப்பாக்கிகளைப் பிடித்துக்கொண்டு கென்டாக்கி மாநிலத்தின் லுயிஸ்வில் நகரத்தில் நேற்று அணிவகுத்துச் சென்றனர். 

இவ்வாண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று அவரசச் சேவை மருத்துவ தொழில்நுட்பராகப் பணிபுரிந்த  26 வயது ப்ரியொன்னா டேலரின் வீட்டுக்குள் போதைப்பொருள் விசாரணை அதிகாரிகள் பலவந்தமாக நுழைந்து அவரைப் பலமுறை சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. என்எஃப்ஏசி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மற்றொரு குழுவுக்கும் இடையே பாதுகாப்பு வேலி பொருத்தப்பட்டதுடன் போலிசாரும் சுற்றி நின்றனர்.

திருவாட்டி டேலரின் கொலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இருவருக்கு பொறுப்புகள் மாற்றப்பட்டிருந்தன. நான்கு மாதங்களுக்குப் பிறகும் இவர்களில் எவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. திருவாட்டி டேலரின் மரணம் குறித்த விசாரணையைத் துரிதமாக நிறைவேற்றும்படி  என்எஃப்ஏசியின் தலைவர் ஜான் 'கிராண்ட்மாஸ்டர்' ஜே ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.