அதிபர் தேர்தல் -ஒத்திவைக்கும் பேச்சை நிராகரிக்கும் அரசியல் கட்சிகள்

தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையை அதிபர் டிரம்ப் எழுப்பியதை அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி அவரது சொந்தக் கட்சியினரும் நிராகரித்துள்ளனர்.

அந்நாட்டின் பொருளியல் மோசமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திரு டிரம்ப் இவ்வாறு பேசி மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்வதாகச் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறார். ஆயினும் திரு டிரம்ப்பின் இத்தகைய கருத்துகளால் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் மீதான நம்பிக்கையை இழக்கக்கூடும் என்று சில சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 150,000 பேரைப் பலிவாங்கிய கொரோனா கிருமிப்பரவல், மெதுவடையும் பொருளியல், போலிசார் வன்முறை, இனவாதத்திற்கு எதிரான தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றால் அமெரிக்கா பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இரண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பொருளியல் 32.9 விழுக்காடு குறைந்தது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனுக்குத் தற்போதுள்ள ஆதரவைவிட திரு டிரம்ப்பின் ஆதரவு குறைவாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. அஞ்சல் வழியாக வாக்களிக்கும் முறை  இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டால் இதன் முடிவை நம்பப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். இத்தகைய தேர்தலில் மோசடிகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் டுவிட்டர் வழியாகத் தெரிவித்தார். சில மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் டுவிட்டர் பதிவு செய்த திரு டிரம்ப், தேர்தலை ஒத்திவைப்பதைத் தாம் விரும்பவில்லை என்றாலும் மில்லியன் கணக்கில் வாக்குகள் அஞ்சல் வழி அனுப்பப்படுவதால் பிரச்சினை ஏற்படலாம் என்றார்.

அமெரிக்காவின் 200 ஆண்டு வரலாற்றில் தேர்தல் இதுவரை ரத்து செய்யப்படவில்லை என்றும் இந்த ஆண்டின் அதிபர் தேர்தல் நடந்தே தீரவேண்டும் என்று திரு டிரம்ப்பின் சொந்தக் கட்சியினர் கூறி வருகின்றனர்.