பெய்ரூட்டில் அதிபயங்கர வெடிப்பு; நூறு பேர் பலி, 4,000 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இரவு 11 மணி) நிகழ்ந்த அதிபயங்கர வெடிப்பில் குறைந்தது நூறு பேர் மாண்டுபோயினர். கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம் நிலவுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதுமின்றி, கடந்த ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என லெபனான் அதிபர் மிக்கெல் ஏவோன் கூறினார்.

உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி விவாதித்த அதிபர், நேற்று முதல் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.

வெடிப்புச் சத்தம் கிட்டத்தட்ட 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு நிகராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் துறைமுகப் பகுதியில் உள்ள கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்தன. பல கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள கட்டடங்களில்கூட சன்னல் கண்ணாடிகள் விழுந்து நொறுங்கியதாகச் சொல்லப்பட்டது.

பெய்ரூட்டில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில், மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவிலும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டது.

“வெடிப்பால் நான் பல மீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டேன். என் உடல் முழுவதும் ரத்தத்தால் மூடப்பட்டிருந்தது,” என்றார் பெய்ரூட்டைச் சேர்ந்த வடிவமைப்பாளரான திருவாட்டி ஹுடா பரோடி.

வெடிப்பிற்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆயினும், சேமிப்புக் கிடங்கில் இருந்த சிறு ஓட்டையை அடைக்க பத்திரி வேலை செய்தபோது தீப்பற்றத் தொடங்கியதாகப் பாதுகாப்பு வட்டாரமும் உள்ளூர் ஊடகம் ஒன்றும் தெரிவித்தன.

இதனிடையே, வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் அதற்கான விலையைத் தர வேண்டியிருக்கும் என்று பிரதமர் ஹசன் டியாப் கூறியிருக்கிறார்.

“இன்னும் பலரைக் காணவில்லை. பலரும் தங்களின் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அறிய அவசரகாலப் பிரிவைத் தொடர்புகொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மின்சாரமும் இல்லாததால் தேடி மீட்கும் பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருக்கிறது,” என்று சுகாதார அமைச்சர் ஹமத் ஹசன் சொன்னதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்து தூதரின் மனைவி படுகாயம் அடைந்து, சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நாட்டுத் தூதரகம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அங்கு பணியாற்றிய நால்வர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டது.

அதேபோல, வெடிப்பில் ஆஸ்திரேலியர் ஒருவர் மாண்டுபோனதாகவும் அந்நாட்டின் தூதரகம் 95% சேதமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் காரணமாக வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், முதற்கட்டத் தகவல்களைப் பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon