கியவ்: உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இஸியம் நகரில் 440 உடல்கள் புதைக்கப்பட்ட ஒரு பகுதியை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். உக்ரேன் சில நாள்களுக்கு முன்பு இந்நகரை ரஷ்யாவிடமிருந்து மீட்டு மீண்டும் தன்வசம் கொண்டுவந்தது.
ஆகாயப் படைத் தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியில் பலர் மாண்டதாக இஸியம் இருக்கும் கார்கிவ் வட்டாரத்தின் தலைமை காவல்துறை விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே, மேலும் 600 மில்லியன் டாலர் (845 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கவிருக்கிறது. ராணுவ உதவிக்கு வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.
ஜெர்மனியும் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கவுள்ளது. ஆனால், அவற்றில் டாங்கிகள் இடம்பெறாது.

