புற்றுநோயுடன் போராடுபவரை வேலைக்கு வரச் சொல்லும் முதலாளி

புற்றுநோயுடன் போராடுபவரை வேலைக்கு வரச் சொல்லும் முதலாளி

1 mins read
6ffc59fd-8ab2-47a4-b9d8-5c614ec38b10
முதலாளி அனுப்பிய மின்னஞ்சலில் வேலைக்குத் திரும்புவது குறித்து கேட்கப்பட்டிருந்ததுடன் மறுநாள் ஒரு சந்திப்புக் கூட்டத்துக்கு வருமாறும் உத்தரவிடப்பட்டது. - படம்: ரெடிட்

சிலருக்குப் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளும் முதலாளிகள் கிடைப்பர். வேறு சிலருக்கோ அந்த சாதகநிலை வாய்க்காது.

இப்படித்தான் ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண், புற்றுநோயால் அவதியுறும் தன் 50 வயது தாயின் நிலையைப் பற்றி ‘ரெடிட்’ தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பெண்ணின் தாயாருக்குத் தற்போது 4ஆம் கட்டப் புற்றுநோய் இருந்தாலும் வேலைக்குத் திரும்புமாறு முதலாளி தொடர்ந்து நச்சரிக்கிறாராம்.

தாயார் 18 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருவதை அறிந்திருந்தும் ஈவு இரக்கமின்றி இவ்வாறு நடந்துகொள்வது குறித்து மாதின் மகள் தன் அதிருப்தியைத் தளத்தில் தெரிவித்திருந்தார்.

“வேலைக்கு நீங்கள் திரும்ப முடியுமா என்பதை உறுதிப்படுத்த உங்களின் புற்றுநோயியல் நிபுணரிடமிருந்து கடிதம் ஒன்றைப் பெறமுடியுமா,” என்று முதலாளி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தார்.

மின்னஞ்சல் வந்தது மாலை 5.30 மணிக்கு. ஆனால், மாதின் நலனை அறிந்துகொள்ள சந்திப்புக் கூட்டத்துக்கு மறுநாளே வருமாறு முதலாளி உத்தரவும் இட்டிருந்தார்.

கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் மாது, தற்போது நிலையான நிதி ஆதரவு இன்றி ஒருநாள் வேலைக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளார். தந்தையை இழந்ததால் மாதின் மகள் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடக் காத்திருக்கிறார்.

நியாயமற்றது, கொடூரமானது, மனிதாபிமானம் இல்லாதது என்றெல்லாம் ரெடிட் பயனாளர்கள் முதலாளியின் நடத்தையைக் குறைகூறிப் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சொத்துசுகத்தைச் சேர்க்க விரும்பும் ஓர் உலகில், சவால் என வரும்போது நாம் ஆதரவும் கருணையும் காட்டுவதா, அல்லது அனைவரும் சமம் என்ற கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதா என்ற கேள்வியைச் சிலர் முன்வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
முதலாளிமின்னஞ்சல்ஆதரவுநிறுவனம்ஊழியர்