இரு நாட்டு உறவில் உரசலை ஏற்படுத்திய மீசையின் மறைவு

தென்கொரியாவில் ஆகப் பெரிய சர்ச்சைக்குரிய மீசை ஒன்று சவரக்கத்திக்குப் பலியாகியுள்ளது. அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் ஹேரி  ஹேரிஸ்ஸுக்கு சொந்தமான மீசை கொரிய மக்களுக்குப் பிடிக்காததே இதற்குக் காரணம்.

அமெரிக்காவும் தென்கொரியாவும் பாதுகாப்பு பங்காளிகளாக உள்ளனர். தென்கொரியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த 28,500 ராணுவ அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக ராணுவச் செலவினம், வட கொரிய விவகாரம் ஆகியவற்றின் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் இந்த உறவில் சிறிது நலிவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதன் தொடர்பில் திரு ஹேரிஸ் பிடிவாதமாக நடந்துகொள்வதாகத் தென்கொரிய ஊடகங்களால் குறைகூறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது மீசை, தென்கொரியாவை முன்பு ஆண்டிருந்த ஜப்பானிய பேரரசின் தலைமை ஆளுநர்களை நினைவுபடுத்துவதாக தென்கொரிய ஊடகங்கள் குறைகூறி வந்தன. திரு ஹேரிஸ்ஸின் தாயார் ஜப்பானியர் என்பதும் இந்தச் சர்ச்சையில் வலியுறுத்தப்பட்டது.

 

இவ்வாண்டின் தொடக்கத்தில் இது பற்றி கேட்கப்பட்டபோது, மீசை வைப்பதா இல்லையா என்பது தமது தனிப்பட்ட விருப்பம் என்றும் இதனை வரலாற்றுடன் இணைத்து  சிலர் குழப்புவதாகவும் கூறினார். இருந்தபோதும் நேற்று முன்தினம் இவர் தமது மீசையை வெட்டியதைக் காட்டும் படத்தை டுவிட்டரில் பதிவு செய்தார். இதற்கு தென்கொரியாவின் வெப்பநிலையே காரணம் என்றும் கூறினார்.